நிர்வாக விஷயத்தில் கண்டிப்பானவர் எம்.ஜி.ஆர்
நிர்வாக விஷயத்தில் தான் ஒரு கண்டிப்பான நபர் என்பதை தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு.
அவருக்கு வேலை கொடுங்கள். இவருக்கு இடமாற்றம் தேவை. இன்னொருவருக்கு பதவி உயர்வு வேண்டும் என்று எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் அதிகாரிகளை வற்புறுத்தக் கூடாது.
அமைச்சர்கள் தங்களுடைய உதவியாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். பணத்தாசை கொண்டவர்களை அருகிலேயே சேர்க்கக்கூடாது.
இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள். அத்தனையும் வாய்மொழி உத்தரவுகள். மூச்சுவிடுவதற்கே சிரமப்பட்டனர் எம்.எல்.ஏ.க்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும். தப்பித்தவறி ஏதேனும் நடந்து விட்டால் அது உடனடியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.கவனத்திற்கு சென்றது. எப்படி என்று தெரியாமல் எம்.எல்.ஏ.க்கள் தவித்தனர். இருட்டறை ரகசியங்கள் எம்.ஜி.ஆர் அறையில் பகிரங்கமாவதற்கு யார் காரணம் என்றே தெரியவில்லை.
பிறகு ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டனர். எல்லாவற்றிற்கும் அந்த மீசைக்காரர் தான் காரணம் என்று புலம்பி தள்ளினர். அந்த நபர் உளவுத்துறை தலைவர் மோகன்தாஸ் ஐ.பி.எஸ். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கண்களாகவும், காதுகளாகவும் இருப்பார் மோகன்தாஸ். அவர் கண்ணுக்கு புலப்படும் எந்த ஒரு விஷயமும் எம்.ஜி.ஆருக்கு தெரிந்துவிடும். மோகன்தாஸ் காதில் விழும் அனைத்து சங்கதிகளும் எம்.ஜி.ஆரிடம் கொண்டு செல்லப்படும். இதுதான் அன்றிருந்த நிலை.
டிசம்பர் 1977-ல் அ.தி.மு.க. நிர்வாகக் குழு கூடியது. கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. எம்.ஜி.ஆர் முன்னிலையில் அத்தனை எம்.எல்.ஏ.க்களும். அதிருப்தி ராகம் பாடினர். தலைவரே வெற்றுப்பதவியில் எங்களை வைத்துள்ளீர்களே. அதிகாரிகள் எங்களை சுத்தமாக மதிக்கவில்லை.
அடிப்படை விஷயங்களுக்குக்கூட அதிகாரிகளை சந்திக்க முடிவதில்லை. பேச முடிவதில்லை. அலட்சியப்படுத்துகிறார்கள். கேட்டால் எம்.ஜி.ஆர் என்கிறார்கள். ஏதாவது வழி செய்யுங்கள் தலைவரே என கெஞ்சிக் கூத்தாடும் அளவிற்கு கெடுபிடிகள் இருந்தது எம்.ஜி.ஆர் ஆட்சியில்.
“அது ஒரு பொற்காலம் தமிழகத்திற்கு”
–ஹரிகிருஷ்ணன்