பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
அடுத்த பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதின் சென்றவாரத் தொடர்ச்சியை இங்கு பார்ப்போம்.
1. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது இரத்த சர்க்கரையின் அளவு காலை வெறும் வயிற்றில் 100mg/dl, உணவிற்கு இரண்டு மணி நேரம் கழித்து 160mg/dl-க்கு குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயினால் சிறுநீரகம், இதயம், கண்கள் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை வருடம் ஒரு முறையேனும் மருத்துவ பரிசோதனை செய்து, அதன் பாதிப்பிலிருந்து தடுத்துக் கொள்ள வேண்டும்.
2. இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தின் அளவை 120/80mmHg-ஐ விட குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். சிலர் இரத்த அழுத்தம் சரியான உடன் மாத்திரை தேவையில்லை என்று தானாகவே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் இரத்தக் குழாய் வெடித்து மீண்டும் பாக்கவாத நோய் ஏற்படலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
3. மாரடைப்பு வியாதி, இதயத்தின் இயக்க கோளாறுகள், இதயத்தின் பிறவி மற்றும் வால்வுகளில் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதற்குரிய மருந்துகளை இதய நோய் நிபுணரின் ஆலோசனையைப் பெற்று தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. இரத்தத்தில் கொழுப்பின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும் (உணவு மற்றும் மாத்திரைகள் மூலம்).
5. இரத்த உறைதலில் கோளாறுகள் உள்ள நோயாளிகள் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சலி னால் ஏற்படும் பக்கவாத நோயை வராமல் தடுக்க, முதல் இரண்டு வயது வரை குழந்தைகளை அதிக கூட்டம் உள்ள காற்று வெளியே சென்று வர வாய்ப்பு இல்லாத இடத்திற்கு (திரையரங்கம்), அழைத்துச் செல்லவோ அல்லது வெகுநேரம் வைத்திருக்கவோ கூடாது. ஏனென்றால் குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் காற்றின் மூலம் பரவும் மூளைக்காய்ச்சல் கிருமி எளிதாக குழந்தையை தாக்கிவிடும். குழந்தைக்கு போதுமானவரை வீட்டில் சுத்தமாக தயாரித்த உணவுகளையே கொடுக்க வேண்டும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்கள் ஆகியவற்றை ஐந்து வயது வரை கொடுக்காமல் இருப்பது நல்லது.
7. இணைப்புத்திசு கோளாறு உள்ளவர்கள் மூட்டு இணைப்புத்திசு நிபுணரின் ஆலோசனையைப் பெற்று மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
8. பெண்கள் கருவுற்றிருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும் உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நேரங்களில் தலைவலி இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருக்குமேயானால் உடனே மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.
9. பக்கவாத நோய் மீண்டும் வராமல் தடுப்பதற்கான மாத்திரைகளை திடீரென்று நிறுத்தும் போது இரத்தத்தின் உறைவுத் தன்மை அதிகரித்து பக்கவாத நோய் வரும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். மேலும் சென்ற வாரம் நான் கூறிய வாழ்வியல் மாற்றங்களை தவறாமல் பின்பற்றினால் பக்கவாத நோய் தாக்கத்திலிருந்து சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
முன்னோர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாத நோய் இருப்பின் அவர்களின் குழந்தைகளுக்கு பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.