முகவாதம் அறிவோமா?

0

பெரும்பாலானோர் முகவாதம் பக்கவாதத்தின் அறிகுறி என்று பயம் கொள்கிறார்கள். முகவாதத்திற்கும், பக்கவாதத்திற்கும் தொடர்பு உண்டு என்றாலும், முகவாதம் மட்டும் தனியாக வந்து கை, கால்களில் எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில், பக்கவாதம் வந்துவிடுமோ என்று பயம் கொள்ள தேவையில்லை. இதைப்பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

நம் முகத்தில் ஏழாவது கிரேனியல் நரம்பு என்னும் முக நரம்பு உள்ளது. இது மூளையின் இரண்டு அரைக்கோளத்திலிருந்து வலது மற்றும் இடது காதின் வழியாக முகத்தை வந்து அடைந்து, முகத்தில் உள்ள 43 தசைகளை இயக்குகிறது. இந்த சின்ன முகத்தில் 43 தசைகளுக்கு என்ன வேலை? என்று தானே யோசிக்கிறீர்கள்?

கண்களை சிமிட்டுவதற்கும், முகம் கழுவும் வேளையில் கண்களை இறுக்க மூடுவதற்கும், கோபப்படும் போது மூக்கை விடைப்பதற்கும், சிறியதாக சிரிப்பதற்கும், சத்தம் போட்டு வீடே அதிருமாறு சிரிப்பதற்கும், உதடுகளை குவிப்பதற்கும், உறிஞ்சு குழாயில் தண்ணீரோ அல்லது பழச்சாறோ பருகுவதற்கும், இது மட்டுமல்லாமல் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வெட்கத்தை வெளிப்படுத்துவதற்கும், உதட்டை ஒரு பக்கமாக திருப்பிக் கொண்டு போவதற்கும், பரதநாட்டியத்தில் அபிநயங்களை வெளிக்காட்டுவதற்கும் என்று நம் முகம் உணர்த்தும் மொழிகள் பல.

இவற்றை செய்வது தான் 43 தசைகளின் வேலை.
ஒருவரின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர் சந்தோசமாக இருக்கிறாரா அல்லது சோகமாக இருக்கிறாரா என்று எந்த பள்ளிக்கும் செல்லாமல் எந்த பாடத்தையும் படிக்காமல் பட்டெனச் சொல்லிவிடலாம். மொழி முழுமை பெறாத காலத்தில் முகபாவனையே மொழியாக இருந்திருக்கும்.

இத்தனையும் முகத்தில் வெளிபடுத்த முகநரம்பு எனும் ஏழாவது கிரேனியல் நரம்பு வேண்டும். இந்த நரம்பு பாதிப்பதால், நான் மேற்கூறிய அனைத்துவிதமான முகபாவனைகளை வெளிப்படுத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்நரம்பு பாதிப்பதால் தான், பாதிக்கப்பட்ட முகத்தின் ஒரு பக்க உதடு செயலிழந்து கோணுவது போல் இருக்கும். பாதிக்கபடாத கண் இயல்பாக சிமிட்டும்போது பாதிக்கபட்ட பகுதி திறந்த வண்ணமே இருக்கும். அது மட்டுமல்லாமல் கண்களிலிருந்து கண்ணீர் அடிக்கடி வருவதால் கண்கள் உறுத்துவது போன்றும் இருக்கும். புருவத்தை உயர்த்தும் போது இரண்டு பக்கமும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காணலாம். இதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட பகுதியில் புருவம் செயலிழந்து விடுவதேயாகும்.
எனவே முகமானது தொங்கியது போலாகி, உணர்விழந்து காணப்படுகிறது. இதையே Facial Palsy எனும் முகவாதம் என அழைக்கின்றோம்.

இந்த முகவாதம் ஏன் வருகிறது என்று சற்று ஆராய்வோமா?

1. ஹெர்பிஸ் ஸாஸ்டர் என்னும் வைரஸ் கிருமி ஏழாவது கிரேனியல் நரம்பை பாதிப்பது.
2. காதில் ஏற்படும் பாதிப்பு.
3. தலையில் அடிபடுதல்.
4. பரோடிட் சுரப்பியில் கட்டி வருதல்.
5. எந்த காரணம் இல்லாமலும் வரலாம்.

இப்படி முகவாதம் ஏற்படுவதால் உடலில் மற்ற ஏதேனும் உறுப்புகளுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று பயம் கொள்ள தேவையில்லை. இது சாதாரணமாக வரும் சளி, காய்ச்சல் போன்றதுதான். இதற்கு விரைவாக மூளைநரம்பியல் நிபுணரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் எளிதாக குணப்படுத்திவிடலாம். சர்க்கரை வியாதியுடன் சேர்ந்து முகவாதம் வரும்போது சரியாவதற்கு சற்று காலதாமதமாகலாம்.

இந்த முகவாதத்திற்கு இயற்பியல் சிகிச்சை முறைகளும் உள்ளன. பயிற்சிகளுடன் சேர்த்து மாத்திரைகளையும் சரியாக எடுத்துக் கொண்டால் 3 வாரத்திலிருந்து 3 மாதங்களுக்குள் முழுமையாக குணமடையும் வாய்ப்பு அதிகம். இத்துடன் முகவாதம் பற்றிய விழிப்புணர்வு முடிவுக்கு வருகிறது. இதுவரை நாம் பக்கவாதம், நடுக்குவாதம் மற்றும் முகவாதம் பற்றி பார்த்தோம். இனி உடலில் ஏற்படும் வலிகள் பற்றி பார்ப்போம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.