முகம் அகம் காட்டும் கண்ணாடி
நாம் இதுவரை மூளையின் பாதிப்பால் ஏற்படும் நடுக்குவாத நோய் பற்றியும், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கசிவால் ஏற்படும் பக்கவாத நோய் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் முதல் நரம்பு பாதிப்பால் வரும் முகவாதம் பற்றி பார்ப்போம்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த பழமொழி இது. அகத்தின் அழகு முகத்தில் வெளிபடுத்தபடுகிறதே! நமது முகம் தான் எத்தனை உணர்வுகளை நமக்கு உணர்த்துகிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அல்லது இன்பமான சூழ்நிலையில்
வார்த்தைகளுக்கு ஏது அனுமதி.
மொழி தன் முகவரியை இழக்கும் போது
முகமே மொழியாகிறது
இமைப்பிரிந்து விழி மலரும் போது
கண்ணின் அசைவுகளே பதிலாகிறது
நம் முகம் அன்பு, கருணை, காதல், காமம், விருப்பு, வெறுப்பு, கோபம், வெட்கம் இன்னும் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
மகிழ்வது மனமாக இருந்தாலும் சிரிப்பது முகம் தானே…. பேசவே முடியாவிட்டாலும் குழந்தைகளின் முகத்தை கண்டு, என்ன சொல்ல வருகிறது இந்த குழந்தை என்று புரிந்து கொள்கிறோமே! என்ன விந்தை இது. நேருக்கு நேர் பார்த்து பேசும் போது, நமது பேச்சு 30% மட்டுமே என்ன சொல்ல வருகிறோம் என்பதை உணர்த்தும். மீதமுள்ள 70% முகத்தின் அசைவு, உடல் அங்கங்களின் அசைவைப் பொறுத்தே உணர்த்தப்படுகிறது.
இல்லற வாழ்வில் இனிதே வாழ்பவர்களிடம் வார்த்தைகளின் பரிமாற்றத்தை விட கண்களின் பரிமாற்றமே அதிகம் இருக்கும்.
பெண் பார்க்கச் சென்றாலும் சரி, வேலைக்கு சென்றாலும் சரி ஒருவரின் மதிப்பீடு முகத்தை பார்த்தே அமைகிறது. “அந்த புள்ளயா சிரிச்ச முகம், ஓ! அவராப்பா சரியான சிடுமூஞ்சி, அந்த அம்மாவா லெட்சுமி கடாட்சம்.” இவ்வாறு முகஸ்துதியானது நமது தலையெழுத்தையே மாற்றுகிறது.
ஐம்புலன்களையும் ஒருங்கே கொண்டது நமது முகம். என்னடா அந்த ஐம்புலன்கள் என்று யோசிக்கிறீர்களா? (கண், காது, மூக்கு, வாய், தோல்). உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஒவ்வொரு பெருமை இருந்தாலும் நமது முகத்திற்கு அருகில் எதுவுமே வரமுடியாது.
ஆம், நமது முகம் உணர்வுகளின் கண்ணாடி. உணர்வுகள் உருவாவது என்னவோ அமிங்டலா எனும் மூளைப்பகுதியில் தான். அதில் உருவாகும் உணர்வுகள் முகத்தை நரம்புகள் வழியாக வந்தடைந்து உணர்வுகளை வெளிக்காட்டுகிறது. இந்த பேசா மொழிக்கு பேசிய வார்த்தைகளை விட மதிப்பு அதிகம். கண்கள் பேசும் மொழிகளை குரல்வளையால் கூட உணர்த்த முடியாது.
குழந்தை கருவில் இருக்கும் போதே கற்றுக் கொள்ளும் முதல் மொழி சிரிப்பு. குழந்தை பிறந்தவுடன் அழும் முதல் அழுகையில் குடும்பமே சிரிக்கிறது. இரண்டு மாதம் கழித்து அங்கும் இங்கும் பார்த்து மெல்ல சிரித்த குழந்தை, தாயின் முகத்தை பார்த்து முதன் முதலாக சிரிக்கும் போது, அத்தாயின் கண்களில் வரும் ஆனந்த கண்ணீருக்கு ஈடுஇணை உண்டோ! கண்களை பற்றி வர்ணிக்காத கலைஞர்களே இல்லை,
முகத்தை பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை. இப்படி மனிதன் உணர்வுகளால் உந்தப்படும் போது முகமே அகம் காட்டும் கண்ணாடியாகிறது.
மேடம் நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க? என்ற கேள்வி உங்கள் முகத்தில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.
புருவத்தை மேல் நோக்கி சுருக்குவதாக இருக்கட்டும், வியப்பை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும் கண் சிமிட்டுவதாக இருக்கட்டும், பெண்ணைப் பார்த்து கண் அடிப்பதாக இருக்கட்டும், மோப்பம் பிடிப்பதாக இருக்கட்டும், சிரிப்பதாக இருக்கட்டும், கொக்கானி காமிப்பதாக இருக்கட்டும், விசில் அடித்து பிறரை கூப்பிடுவதாக இருக்கட்டும், உதட்டை பிதுக்கி முடியாது என்று கூறுவதாக இருக்கட்டும்,
தேம்பி தேம்பி அழுவதாக இருக்கட்டும், இமைகளை மூடி உறங்குவதாக இருக்கட்டும் இவை அனைத்தும் முகநரம்பு என்னும் Facial Nerve நன்றாக வேலை செய்தால் மட்டுமே சாத்தியப்படும்.
உணவை மெல்லுவதற்கும், விழுங்குதற்கும் தெளிவாக பேசுவதற்கும் ஐந்து நரம்புகளின் இயக்கங்கள் அவசியம்.
வாயை திறப்பதற்கு ஒரு நரம்பு, உதடுகளை குவிப்பதற்கு ஒரு நரம்பு, நாக்கை நீட்டுவதற்கு ஒரு நரம்பு என்று கூறிக் கொண்டே போகலாம். நாம் நாமாக இருப்பதற்கு, நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு, பிறர் கூறும் விஷயங்களை உள்வாங்குவதற்கு ஆகிய நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் மூளையின் கட்டளையை மின்னலாய் கடத்தும் நரம்புகளின் இயக்கங்களே காரணம்.
இந்த நரம்புகளில் மின்இயக்கங்கள் பாதித்தால் என்னவாகும் அடுத்தவாரம் பார்ப்போம்…