மதிமுக குழப்பத்தை திசைதிருப்ப வைகோவின் புது பிளான்…

-ஆசைத்தம்பி

0

மதிமுக குழப்பத்தை திசைதிருப்ப வைகோவின் புது பிளான்…

கடந்த மாதங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் இடைநீக்கத்தைத் தொடர்ந்து, நிரந்தரமாக நீக்கப்பட்டார்கள். இந்த நீக்கத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி ஒப்புதல் வழங்காமல் வைகோவின் நடவடிக்கைகளோடு முரண்பட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கும் திருப்பூர் துரைசாமி வருகைதரவில்லை. கட்சியில் வைகோவின் நடவடிக்கையைப் பலரும் ஏற்றநிலையில், மூத்த முன்னோடிகள் 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கத்தை ஏற்க மறுத்தனர்.  திருச்சியைச் சார்ந்த மூத்த மதிமுகவின் முன்னோடி ஒருவர் வைகோவுக்கு எழுதிய மடலில்,

“25 ஆண்டுகளுக்கு மேலாக உங்களோடு பயணம் செய்தவர்களை நீக்குவது என்பதால் கட்சி எந்தப் பயனையும் அடைந்திடாது. உங்களுக்கும் அவைத்தலைவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுக் கூட்டம், மற்ற கூட்டங்கள் நடப்பது என்பது கட்சியில் ஜனநாயகம் குறைந்து கொண்டிருக்கின்றது என்பதையே புலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அவைத்தலைவரோடு நீங்கள் பேசுங்கள். அவர் என்ன தான் சொல்கிறார் என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். எல்லாரையும் அரவணைத்துக் கட்சியை நடத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட வைகோஅவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியிடம் தொடர்ந்து பேசியிருக்கிறார். அப்போது இருவரும் தங்களின் மனதில் இருந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர் பக்கமும் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்தான் சென்னை மதிமுக தலைமையகமான தாயகத்தில் 28.06.2022ஆம் நாள் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு வருவதற்கு இசைவு தெரிவித்து, கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுள்ளார் என்பதன் மூலம் மதிமுகவில் கடந்த காலங்களில் நிலவிவந்த குழப்பங்கள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

நிரந்தரமாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 மாவட்டச் செயலாளர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் தொடங்கும் நேரம் நெருங்கியவுடன் வைகோ, திருப்பூர் துரைசாமியுடன் தொடர்பு கொண்டு பேசினார். இதனால் ‘தாயகம்“ சற்று நேரம் பரபரப்பில் இருந்து பின்னர் பரபரப்பு அடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டாலும் ஊடகங்களில் ஒரு தீர்மானம் மட்டும் விரிவாகச் சொல்லப்பட்டது.

“அண்மையில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 47,000 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.  இதற்கான காரணத்தைப் பள்ளிக்கல்வித்துறை முறையாக ஆராயவேண்டும். ஆராய்ந்து குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

தமிழ் மொழிப்பாடத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்ற செய்தியின் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை மொழிப் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதில் மதிமுக, திமுக ஆட்சியைப் பாராட்டும் விதத்திலிருந்து கொஞ்சம் விலகி, திமுகவை அறிவுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது என்பது முற்றிலும் புதிய செய்தியாக அமைந்திருந்து.  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மதிமுகவின் தலைமைக்கழகச் செயலாளர் துரைவைகோ இடம்பெறவில்லை என்பதில் மதிமுகவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

-ஆசைத்தம்பி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.