திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் ஆய்வு மன்றத்தின் முதல் நிகழ்வு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. மரிய தனபால் தலைமையில் நடைபெற்றது..
அவருடைய தலைமையுரையில், தமிழாய்வுத்துறையில் எண்ணற்ற நிகழ்வுகள், கருத்தரங்குகள், போட்டிகள் ஆகியன நடைபெற்றாலும் ஆய்வு மன்றம் என்பது தமிழாய்வுத்துறையின் தனித்துவம். முனைவர் அ.குழந்தைசாமி துறைத்தலைவராக இருந்த காலத்தில் இருந்து பல ஆண்டுகளாகவே தமிழாய்வுத்துறை ஆய்வு மன்றத்தை நடத்தி வருகிறது.
இந்த மன்றத்தில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர்கள், உரையாற்றியவர்கள் பல அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் அறிஞர்களாக வளர்ந்துள்ளனர் என்பதை பல சான்றுகளோடு எடுத்துக் கூறினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அறிமுக உரையாற்றினார்.
தமிழாய்வுதுறையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ள உங்கள் ஒவ்வொருவரையும் திறமையாய் வழிநடத்துவது எங்களுடைய கடமை. அதற்கான பல முயற்சிகளுள் ஒன்றே இந்த ஆய்வு மன்றம். நூல்களை அறிமுகம் செய்தல் தொடங்கி இங்கு நடத்தப்படும் நிகழ்வுகளில் நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் முன்னாள் தலைமைச்செயலாளர் முதுமுனைவர் இறையன்பு, ஐ.ஏ.எஸ். எழுதிய என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற நூலை அறிமுகம் செய்தார். 186 பக்கங்களுடைய இந்நூலில் 133 தலைப்புகளில் தகவல் பரிமாற்ற வரலாறு, தகவல் பரிணாமத்தில் சிறக்க, மேடைபேச்சில் முழங்கு என மூன்று பிரிவுகளாக தொகுத்து தந்துள்ள கருத்துக்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார்.
முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி தா. மேரி மார்டீனா “சுழலும் மொழியும்” என்ற தலைப்பில் ஆய்வுரையை வழங்கினார். . இளங்கலை மூன்றாம் ஆண்டு, வரலாற்றுத்துறை மாணவர் தா. பரத்வாஜ் “அதிகாரம்” என்ற தலைப்பில் சமூக உரையாடலை மேற்கொண்டார். முது அறிவியல் இயற்பியல் மாணவி செல்வி ம.அபிராமி “வெப்பம் குளிர் மழை” என்ற தலைப்பில் திரைப்படத் திறனாய்வு பற்றி கூறினார்.
மூத்த பேராசிரியர் முனைவர் ஆ. ஜோசப் சகாயராஜ், ஆய்வு மன்றப் பொறுப்பாளர்கள் முனைவர் ரெ.நல்லமுத்து, முனைவர் போ.ஜான்சன், துறையின் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் உள்பட பலரும் இந்த ஆய்வு மன்ற நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.