வைகோ அவர்களின் மனிதநேயப் பணியை ஏன் KNA கம்மவார் நாயுடு சங்கத்தின் சாதனையாகச் சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்காக எனக்கு இந்தத் தண்டனை என்றால் நான் இதனைப் பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வேன் . – வல்லம் பசீர்
மதிமுகவில் நிலவும் சாதி அரசியலைக் கண்டித்த வளைகுடா பொறுப்பாளர் தஞ்சை வல்லம் பசீர் பொறுப்பிலிருந்து நீக்கம் – வைகோ நடவடிக்கை.உஅவதூறுகளுக்குப் பதில் பொதுவெளியில் பதில் சொல்வேன் – வல்லம் பசீர் அறிக்கை
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பிரிந்து என்னை ஆளாக்கி அழகு பார்த்த தலைவர் வைகோ என்னைப் பொறுப்பில் இருந்து விடுத்திருக்கிறார்.

பாச உணர்வுகளால் கட்டியெழுப்பப்பட்ட இலட்சிய மாளிகை மறுமலர்ச்சி திமுக, அந்த மாளிகையில் எனக்கும் இடமளித்து என்னை ஆராதித்து , அன்புகாட்டிக் குடத்தில் இட்ட விளக்காக இருந்த என்னைக் குன்றின் மேல் இட்ட விளக்காய் அடையாளப்படுத்தி எனக்கு ஒரு முகவரியைத் தேடித் தந்தவர் என் உயிரில் உணர்வில் உதிரத்தில் கலந்திட்ட தலைவர் வைகோ .
எத்தனை வாய்ப்புகள், எத்தனை பொறுப்புகள் அத்தனைக்கும் உண்மையாக இருந்து கடமையாற்றியிருக்கிறேன் என்பதைத் தலைவர் வைகோ அறிவார் . ஒரு சிலரது சூழ்ச்சி வலைகளால் இன்று அவரே என்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது, இந்த நடவடிக்கை எடுத்திடும் முன்னும் பின்னும் அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நான் அறிவேன் . கடந்த பத்து நாட்களாக என்னுடைய மனப்போராட்டமும் அவருக்கு இப்படியொரு நெருக்கடியான நிலை உருவாகி விடக் கூடாது என்பது தான் , என்ன செய்வது தீர்ப்பை எழுதி விட்டுத்தானே அதனை வாசிக்கும் நேரத்திற்காகச் சில குள்ளநரிகள் காத்திருந்தன .

இந்த ஒரு வாரக் காலமாகப் பத்து மாவட்டச் செயலாளர்கள் , ஒரு துணைப் பொதுச் செயலாளர் உட்பட ஆறு தலைமை கழக நிர்வாகிகள், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை நீக்கச் சொல்லிச் சிலரது அழுத்தத்தின் பெயரில் அறிக்கை கொடுத்தார்கள் அதையும் கடந்து என்னைப் பொறுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்பது தான் தலைவரது விருப்பம் அதனால் தான் இத்தனை நாட்கள் என் மீது நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார் தலைவர் வைகோ , இறுதியாக இன்று குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறிவிட்டது .
தலைவர் வைகோ அவர்களின் மனிதநேயப் பணியை ஏன் KNA கம்மவார் நாயுடு சங்கத்தின் சாதனையாகச் சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்காக எனக்கு இந்தத் தண்டனை என்றால் நான் இதனைப் பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வேன் .

நான் கண்டதும் கொண்டதும் தலைவர் வைகோ ஒருவரைத் தான் , என்னைப் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கலாம் ஆனால் என் இதயத்திலிருந்து தலைவர் வைகோவை எவராலும் நீக்க முடியாது. என் இரத்தநாளங்களில் இரத்த ஓட்டம் உள்ளவரை அவர் தான் என் தலைவர் . இந்தச் சோதனையான காலம் எனக்குப் பலரை அடையாளம் காட்டியது , நெருக்கடியால் சிலர் என்னிடம் பேசி வருத்தம் தெரிவித்துவிட்டுத் தான் என்னை நீக்கச்சொல்லி அறிக்கை கொடுத்தார்கள்.
அவர் என் தம்பி , நான் வேறு அவர் வேறு இல்லை என்று சொன்னவர்கள் கூடத் தங்களது இருப்பைத் தக்கவைக்க முதுகுக்குப் பின்னால் எனக்கு எதிராகச் செயல்பட்டதை உணர்த்திடும் அறிய வாய்ப்பாகவே இது அமைந்தது , எனக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்ததன் மூலம் அவர்களுக்குத் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைக்குமென்றால் அது எனக்கு மகிழ்ச்சியே .

என் மீது அன்பு கொண்டு என்னை ஆறுதல்படுத்திய நிர்வாகிகளுக்கும் , கழகக் கண்மணிகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் உங்கள் ஆறுதல் மொழியால் நான் என்னைப் பலப்படுத்திக் கொண்டேன் என்பது தான் உண்மை .
ஒரு சாதாரணத் தொண்டன் என நினைக்காமல் என்னையும், என் குடும்பத்தையும் வாஞ்சையோடு அரவணைத்து அன்பு காட்டிய ரேணுகா அம்மாவை நான் உயிருள்ள வரை மறவேன், அந்த அன்புத்தாய் இந்தச் செய்தி அறிந்து எவ்வளவு துடித்திருப்பார் என எண்ணும் போதே கண்களில் நீர் குமிழிகள் சூழ்ந்து கொள்கின்றன.

தலைவருக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் வைகோவின் தளகர்த்தர்கள் பலரை அப்புறப்படுத்திய அதே கும்பல் தான் இன்று என்னையும் இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது , அந்தக் கும்பல் இன்று நிம்மதியாக உறங்கிவிட நினைக்கலாம் ஆனால் அவர்களின் மனசாட்சி அவர்களை உறங்கவிடாது இன்று நான் நாளை அவர்களாகக் கூட இருக்கலாம்.
மரணத் தண்டனை விதிக்கப்பட்டவனுக்குக் கூட இறுதி கருத்தைச் சொல்வதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இடம் வழங்கியுள்ளது ஆனால் இப் பிரச்சனையில் என் கருத்தை அறியாமலே இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது, நான் தவறே செய்திருந்தாலும் என்னிடம் விளக்கம் கோராமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் (அவதூறுகள்) அப்படியே நிலைபெறும் சூழல் உருவாகியிருக்கிறது , அதனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு (அவதூறுகள்) பொதுவெளியில் விளக்கமளித்திட முடிவு செய்துள்ளேன் .

சமூக வலைதளத்தில் போலி கணக்கு இயக்கினேன் , கட்சிக்குள் குழப்பம் விளைவித்தேன், மாநிலப் பொறுப்பு கேட்டேன், சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கேட்டேன், மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசிக் கட்சிக்கு எதிராகத் தூண்டிவிட்டேன் போன்ற அவதூறுகளுக்கு ஓரிரு நாட்களில் விளக்கமளிப்பேன்.
இதுவரை எனக்குத் தக்க துணையாகப் பக்கப் பலமாக இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழக நிர்வாகிகளுக்கும் , தலைவர் வைகோவின் கண்ணின் மணிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி , இந்த இயக்கத்தைப் போலப் பாச உணர்வு கொண்ட இயக்கத்தைப் பூமி பந்தில் காண்பது அரிது அப்படிப்பட்ட உன்னத உறவுகளை இந்த இயக்கத்தின் மூலமே பெற்றேன், இனி எப்போதும் அவர்களுடனான என் உறவு தொடரும் அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுக்கும் குடும்ப உறவாக என்றென்றும் இருப்பேன் .
திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்கத் தலைவர் வைகோ அவர்களின் வழியில் அயராது உழைப்போம் .
அன்புடன்
வல்லம் பசீர்,
முன்னாள் கழக வளைகுடா அமைப்பாளர்,
மறுமலர்ச்சி திமுக