அப்போ தங்க சாவி… இப்போ ஜெப பேனா! தொடரும் ‘ஜீசஸ் கால்ஸ்’ சர்ச்சை!
தமிழக அரசியலில் கலைஞரின் ‘பேனா’ சர்ச்சை ஒருபக்கம் பரபரப்பு விவாதமாகிக்கொண்டிருக்கும் சூழலில் பிரபல பாதிரியார் பால் தினகரனின் ஜீசஸ் கால்ஸ் அறிவித்திருக்கும் ‘ஜெப பேனா’ திட்டம் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
உலகம் முழுக்க கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது பிரபல பாதிரியார் டி.ஜி.எஸ் தினகரனால் உருவாக்கப்பட்ட ‘இயேசு அழைக்கிறார்’ எனப்படும் ஜீசஸ் கால்ஸ். இதன் மூலம் கிறிஸ்தவ போதனைகளை செய்து வருகிறார்கள் பால் தினகரனின் குடும்பத்தார். பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு, தங்கசாவியை வாங்கி வீட்டில் மாட்டினால் ஆசீர்வாதம் பெருகும் என்று விற்பனை செய்துவந்தார்கள். தேவன் ஆவியில்தானே இருக்கிறார்? சாவியிலா இருக்கிறார்? என்று கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே சர்ச்சை எழுந்து, தங்கசாவி திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, தேர்வு எழுதும் மாணவர்களை குறிவைத்து ‘prayer pen’ அதாவது ஜெப பேனா என்கிற புதிய திட்டத்தை தொடங்கி, பேனா விற்பனையில் இறங்கியிருக்கிறது ஜீசஸ் கால்ஸ் நிர்வாகம். இதுகுறித்து, ஜீசஸ் கால்ஸ் பாதிரியார் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது, “ஜெபித்து உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக வெளியிடப்பட்ட இந்த ஜெப பேனா விற்பனைக்கு இருக்கிறது. 15 ரூபாய் மாத்திரமே விலை. ஆகவே, நீங்கள் வாங்கி பயன்படும்படி கேட்டுக் கொள்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக”என்று பேசியிருக்கிறார்.
அடுத்தது, ஜெப செல், ஜெப கம்யூட்டர் என்றெல்லாம் விற்கப் போகிறார்களா? ஏற்கனவே, தங்கசாவி போன்ற திட்டங்களை அறிவித்து சம்பாதித்தது போதாதா? ஜெப பேனாவில் இங்க் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது.
இந்நிலையில், ஜெப பேனா வாங்குவதுபோல் நாம் ஜீசஸ் கால்ஸ் அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு பேசியபோது ,10 ரூபாய்க்கு ஒரு ஜெப பேனா, 20 ரூபாய்க்கு ஒரு ஜெப பேனா என இரண்டுவிதமான ஜெப பேனாக்கள் விற்கப்படுவதாக கூறினார் ஃபோனை அட்டெண்ட் செய்த அந்த ஜெப பெண்மணி. முழுமையாக ஜெபிக்கப்பட்ட பேனா என்றால் 20 ரூபாய், பாதியாக ஜெபிக்கப்பட்ட பேனா 10 ரூபாயாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், இரண்டு ஜெப பேனாக்களுக்குமான வித்தியாசம் என்னவென்று நாம் கேட்டபோது பால் பென், ஜெல் பென் வித்தியாசமாக இருக்கலாம் என்று தெளிவாக கூறி புரிய வைத்தவரிடம், இந்த ஜெப பேனாவால் என்ன பயன் ? என்று நாம் கேட்டபோது ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தடுமாறியவர், எக்ஸாம்க்காக பால் தினகரன் பிரேயர் பண்ணிகொடுத்தது என்றார்.
அப்படியென்றால், தேர்வில் படிக்காமலேயே பாஸ் பண்ணிடலாமா? என்று நாம் கேட்டபோது, ஒரு நிமிசம் என்றபடி பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தார். நம்மிடம் பேசிய ஆண்குரல், “ஜெபிக்கப்பட்ட பேனா இங்கு வாங்கினால் ஆசீர்வாதமா இருக்கும்னு ஒரு சிலர் கேட்டதால இப்படி விற்கப்படுது” என்றவரிடம், “ஜெப பேனா போல மாணவர்கள் ஜெப நோட்டு, ஜெப புத்தகம், ஜெப எக்ஸாம் பேட் என வரிசையாக கேட்பார்கள், அதையும் விற்பனை செய்வீர்களா? இதையெல்லாம் விற்பனை செய்யத்தான் ஸ்டேஷனரி கடைகள் உள்ளனவே? ஏற்கனவே, தங்கசாவி சர்ச்சைக்குள்ளானது. பிறகு, அதை நிறுத்துவிட்டீர்கள். இப்போது, ஜெப பேனா என்று ஆரம்பித்திருக்கிறீர்கள்.
மாணவர்களுக்கு அறிவுறை கூறி நல்வழிப்படுத்தப்படுத்த வேண்டிய நீங்களே இப்படியெல்லாம் விற்பனை செய்து தவறான நம்பிக்கைகையை விதைக்கலாமா?” என்று நாம் கேட்டபோது, “ஏன் இதையெல்லாம் விசாரிக்கிறீங்க? உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்குங்க, இல்லைன்னா விட்டுடுங்க. அவரவர்கள் படித்தால்தான் தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். ஜெப பேனா ஆசீர்வாதமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை” என்றார் மறுப்பாக. ஆனால், வீடியோவில் பேசியிருப்பது குறிப்பதை சுட்டிக்காட்டியபோது அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியது என்று கூறிவிட்டார்.
இதுகுறித்து, கிறிஸ்துவ உரிமை இயக்க தலைவரும் சிறுபான்மை மக்கள் நலக்கட்சியின் தலைவர் பாதிரியார் சாம் ஏசுதாஸ் நம்மிடம், “ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்று அன்பையும் சகிப்புத்தன்மையையும் போதித்து சாந்த சொரூபியாக இருந்த இயேசு கிறிஸ்துவே, தேவாலயத்தை வியாபாரக்கூடமாக மாற்றியபோது, சவுக்கை எடுத்து வியாபாரிகளை அடித்து விரட்டினார். அவரையே கோபப்படவைத்தது அந்த வியாபார நிகழ்வுதான். அப்படித்தான், இருக்கிறது இந்த பேனா விற்பனையும். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி மாணவர்கள் இந்த ஜெப பேனாவை வைத்து தேர்வு எழுதினால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில்தானே இந்த ஜெப பேனாவை வாங்குவார்கள்; தேர்வு எழுதுவார்கள்? அந்த நம்பிக்கை அவர்களுக்கு 100 சதவீதம் பலன் தரும் என்று சொல்லிவிடமுடியாது.
சினிமாவில் திடீரென்று விளக்கு அணைந்தால் அப சகுனமாக காண்பிப்பதுபோல், ஜெப பேனாவால் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது ரிப்பேர் ஆகி பேனா எழுதாமல் போனால் அவருடைய மனநிலை எப்படி இருக்கும்? அவரது நம்பிக்கை என்ன ஆவது? அதன்மூலமாக பதட்டப்பட்டு நம்பிக்கையில்லா சூழலுக்கு தான் தள்ளப்படுவார். படித்ததைக்கூட மறந்துவிட வாய்ப்புள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையை போதிக்கிறவர்கள் வேதத்தின்படி போதிக்கவேண்டுமே தவிர உலக பொருட்களின் மீது நம்பிக்கையை வைக்க தூண்டுவது தவறான போதனை ஆகும். இதற்கும் கிளி ஜோசியத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்கிறார் அதிரடியாக.
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும் என்றுதான் பைபிள் சொல்கிறது. அதனால், மாணவர்கள் தேர்வுக்கு நன்றாக படித்து ஆயத்தமாக வேண்டுமே தவிர, இதுபோன்ற நம்பிக்கைகளால் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது.
-எம்.எஸ். ரஞ்சித்