எல்லை காக்கும் சாமியாய் … வனத்தை காக்கும் ஆள்காட்டி பறவைகள் ! பறவைகள் பலவிதம்- தொடா்9
முட்டை குஞ்சு பொரித்த பின்னரும், அதற்கான சவால்கள் முடிந்து போவதில்லை. பருந்து போன்ற கொன்றுண்ணிப் பறவைகள் அப்பகுதியில் கண்டால் உடனே பெற்றோர் பறவைகள் ஒலி எழுப்பி குஞ்சுகளை எச்சரிக்கை படுத்தும்.
சில சமயங்களில் குஞ்சுகள் அந்த எச்சரிக்கை ஒலியை புரிந்து கிரகித்துக் கொள்ளாமல் போகும் சமயங்களில், அதை சண்டைக்கு இழுப்பது போலவும், அதை தாக்குவதற்கு வருவது போலவும், அதன் முன்னால் அங்கும் இங்கும் மிகுந்த வேகத்துடன் பெற்றோர் பறவைகளில் ஒன்று பறக்கும்.
தன்னால் பருந்து போன்ற ஒரு கொன்றுண்ணிப் பறவையுடன் சண்டையிட்டு ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் தன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்காகவும் பருந்தின் கவனத்தை தன் குஞ்சுகளிடமிருந்து திசை திருப்புவதற்காகவும் இவ்வாறு செய்யும்.
இந்த ஆட்காட்டி பறவைகளினால், மனிதர்களாகிய நமக்கும் பல பயன்கள் உள்ளது. முதலில் அது கூடு கட்டி முட்டையிடும் பகுதியில் வேடர்களோ காட்டு உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களோ யாரேனும் வந்தால், உடனடியாக தன் அலறல் சத்தத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எச்சரிக்கை செய்து விடுகிறது.
பெயருக்கு ஏற்றாற்போல் அங்கு வரும் ஆளை காட்டிக் கொடுத்துவிடும். ஆகவே அப்பகுதியில் உள்ள சமுதாயத்தை காக்கும் மிகப் பெரும் பணியை செய்வதால் அந்த சுற்றுச்சூழலையும் ஆள்காட்டி பறவைகள் பாதுகாக்கின்றன. மேலும் பொதுவாக இவை நீர் நிலைகளான குளங்கள் ஏரிகள் ஆகியவற்றின் கரைகளில் கூடு கட்டி முட்டை இடுவதால் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் காவலர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது. யாராவது அந்த பக்கத்தில் வந்தால் உடனடியாக சத்தம் எழுப்பி அவர்கள் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி செய்துவிடும். மேலும் இவற்றின் கூடு கட்டும் முறையை வைத்து மழையின் அளவை கணக்கிடும் வழக்கம் நம் நாட்டில் பல இடங்களில் நிலவிவருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவை உயர்ந்த தரையை தேர்வு செய்து கூடு அமைத்தால் அந்த வருடம் பருவமழை மிகவும் அதிகமான அளவில் இருக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. மஞ்சள் மூக்கு ஆட்காட்டி அவ்வாறு இல்லாமல், தாழ்ந்த பகுதிகளில் கூடு அமைத்தால் மழையின் அளவு சராசரியாக இருக்கும் என்று கணிக்கிறார்கள். இவ்வாறு விவசாயத்தை சார்ந்த மக்களுக்கு மழையின் அளவை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றார் போல் அவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆட்காட்டி பறவைகள் பேருதவியாய் இருக்கின்றது.
மேலும் இவற்றின் உணவாகிய பூச்சிகள், நத்தைகள், சிறு நீர் வாழ் உயிரினங்கள், வண்டுகள், கரையான்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த உணவு சங்கிலியில் முக்கிய அங்கமாக திகழ்கிறது. அடுத்த முறை ஒரு ஆட்காட்டி பறவையின் ஓலத்தை கேட்க நேர்ந்தால் அதை ஏதோ கத்தல் என்று நிராகரிக்காமல், பெற்ற பிள்ளைகளின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர்களின் ஓலமாகவே பார்ப்போம்.
— ஆற்றல் பிரவீன்குமார்.