செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் 345 வது பிறந்த நாள் விழா !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக வீரமாமுனிவரின் 345 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச . தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி இணை முதல்வர் முனைவர் த.குமார், துணை முதல்வர் அருள்முனைவர் அருள் ஒளி, சே.ச., முதுதமிழ் எழிலரசி எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி, தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கிய செல்வ ரதி உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள வீரமாமுனிவர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தம் தலைமையுரையில் வீரமாமுனிவர் தமிழ்க் கற்று சமயம் வளர்க்க வந்தார். ஆனால் சமயம் கற்று தமிழ் வளர்த்தார் என்கிற கருத்தை மேற்கோளிட்டு வீரமாமுனிவரின் பணிகளை விரிவாக எடுத்துரைத்து தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி ‘வியத்தகு வித்தகர் வீரமாமுனிவர்’ என்கிற மையப்பொருளில் கருத்துரையாற்றினார். அவர் கருத்துரையில் வீரமாமுனிவரை மறைபரப்பு பணிக்காக வந்த ஒரு மறை மகன், தமிழுக்குப் பல இலக்கியப் படைப்புகளை அள்ளிக் கொடுத்த கலை மகன், தமிழிலே பல சோதனை முயற்சிகளை முதன்முதலாக சோதித்து பார்த்த தலைமகன் என மூன்று நிலையில் காணலாம். 1710 ஆம் ஆண்டு 30 அகவை நிறைவடைந்த பிறகு தமிழகத்திற்கு வருகிறார். ஏறக்குறைய 30 ஆண்டுகளில் 35 நூல்களை படைத்த பெருமை என்பது அவருக்கு உண்டு. அன்னை மரியை தமிழ்ப் பண்பாட்டோடு பொருத்திப் பார்த்த அவரின் எண்ணம் சிறப்புக்குரியது. பெரியநாயகி, அடைக்கலநாயகி என பெயர் சூட்டிய மரபில் தொடங்கி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு இருக்கின்ற திருஉருவம் வரை தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிப்பாக அவர் அமைத்தது என்பது தமிழ் பண்பாட்டின் மீது அவர் கொண்ட அளவு கடந்த ஈடுபாட்டில் வெளிப்பாடு அன்றி வேறு ஏதும் இல்லை.
தூய வளனாரின் வாழ்க்கை வரலாற்றை தேம்பாவணி என்னும் தீந்தமிழ்க் காப்பியமாக்கி தமிழுக்கு தந்தவர் வீரமாமுனிவர். தமிழ் இலக்கியங்களில் நூலுக்கு முன்னால் இன்டெக்ஸ் என்று சொல்லப்படுகின்ற உள்ளுறையை அமைக்கின்ற மரபு இல்லை. இந்த மரபை முதன்முதலாக தன்னுடைய வேத விளக்கம் என்கின்ற நூலில் கையாண்ட பெருமைக்குரியவர் வீரமாமுனிவர் என்பன உள்ளிட்ட அரிய தகவல்களைத் தம் உரையில் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். வளனார் தமிழ்ப் பேரவைத் தலைவர் முனைவர் ஜா.சலேத் நன்றியுரை ஆற்றினார். வளனார் தமிழ்ப்பேரவை துணைத் தலைவர் பேராசிரியர் ராஜா நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்தார்
— சே.பிரான்சிஸ் ஆன்டனி








Comments are closed, but trackbacks and pingbacks are open.