மீண்டும் வீரப்பன்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!
மீண்டும் வீரப்பன்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!
“வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” என்ற ஆங்கில நூலுக்கான தடை நீக்கம்; வீரப்பனின் கடைசி நாட்களை மையமாக வைத்து நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் The Hunt for Veerappan ஆவணப்படம் ஆகியவற்றின் வழியாக அடுத்த ரவுண்டு வேட்டையை தொடங்கியிருக்கிறார், காலத்தால் அழியா “சந்தன கடத்தல்” வீரப்பன்! தந்திரமாக சுற்றிவளைத்து மோதலில் சுட்டுக்கொன்றார்களா? நயவஞ்சகமாக சுட்டுக்கொன்று பின் வெள்ளை வேனை காட்டி நாடகம் நடத்தினார்களா? மோரில் விஷம் வைத்தார்களா? சோற்றில் விஷம் வைத்தார்களா? விடை தெரியாத கேள்விகளும் திசைக்கு ஒரு கட்டுக்கதைகளும் என வீரப்பன் மரணத்தின் அவிழாத மர்ம முடிச்சுகள் ஒருபக்கம். 12 ஆள் கடத்தல்கள், 123 கொலை வழக்குகள், 49 இதர வழக்குகள் இருந்தும் கடைசிவரை போலீசில் சிக்காமல் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? என்ற ஆராய்ச்சி மற்றொரு பக்கம்.

வீரப்பன் என்றால் அவரது மீசை நினைவுக்கு வருவதைப் போலவே, அதற்கு அடுத்ததாக நினைவில் நிற்பது “நக்கீரன்” இதழ். அவ்விதழ் வழியே, வீரப்பனையும் அவரது கூட்டாளிகளையும், அவரது செயல்பாடுகளையும் பொது வெளிக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரியவர் பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியன். 1996-ஆம் ஆண்டு வீரப்பனை முதன்முதலாக வீடியோ கேமரா முன்பாக பேச வைத்து, வீரப்பனின் பேச்சு, தோற்றம், அவரது அன்றாட நடவடிக்கைகளை காட்சிப் பதிவுகளாக வெளி உலகுக்கு காட்டியவர் பெ.சிவசுப்ரமணியன். பல்வேறு தடைகளையும், சிரமங்களையும் தாண்டி, உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட சவாலான நடவடிக்கை அது. செய்தியாளராக மட்டுமல்லாமல் தமிழக – கர்நாடக அரசுகளின் சார்பில் தூதுவராக செயல்பட்டு வீரப்பனால் பிணையக்கைதியாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை, உயிருடன் மீட்டதில் பெரும்பங்கு வகித்தவர்.
1993 ஏப்ரலில் அவர் வீரப்பனை சந்தித்தது தொடங்கி 2004 அக்டோபர் 18 அன்று வீரப்பன் சுட்டுக் கொல்லப் பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான தனது நேரடி அனுபவங்களை “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” நூலின் வழியே பகிர்ந்திருக்கிறார் பெ.சிவசுப்ரமணியன். வீரப்பனுடன் விளையாடிய வர்கள், வாழ்ந்தவர்கள், கூட்டாளிகள், வீரப்பனை பிடிக்க வேண்டும் என்று ஆயுதம் தூக்கி நின்றவர்கள், தெரிந்தும் தெரியாமலும் வீரப்பனுக்கு உதவி செய்துவிட்டு மிகப்பெரிய சித்திரவதைகளை அனுபவித்த பழங்குடிகள் என பல்வேறு சம்பவங்களையும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
இந்நூலின் ஆங்கில மொழியாக்கமான “Veerappan Saga Rise and Fall” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 22.02.2023 அன்று பெங்களூர் பிரஸ் கிளப்பில் நடைபெறுவதாக இருந்த நிலையில், நூல் வெளியாவதற்கு முதல்நாள் நக்கீரன் கோபால், இந்த நூலில் தன்னைப் பற்றி அவதூறாக எழுதி இருப்பார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்த வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. பெங்களூர் இரண்டாவது சிட்டி சிவில் கோர்ட் டில் நடைபெற்று வந்த வழக்கில் நூல் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, அதிரடியாக ஆங்கில நூலை தற்போது வெளியிட்டிருக்கிறார், பெ.சிவசுப்ரமணியன்.
இதனைத்தொடர்ந்து, வெளியான அவரது வீடியோ பேட்டிகளில் சினிமா படங்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில், வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்திருக்கிறார். மிக முக்கியமாக, வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசு படைப்பிரிவினர், அதற்கு தலைமையேற்றவர்கள், அவர் களுக்குள்ளாகவே ஊடாடிய உள் அரசியல், வீரப்பனுக்கும் புலவர் கலியபெருமாள், மாவோயிஸ்ட் அமைப்பினர்களுக்குமிடையே இருந்த உறவு உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் பலவற்றை போகிற போக்கில் அள்ளித் தெளித்திருக்கிறார், பத்திரிக்கையாளர் பெ.சிவசுப்ரமணியன்.
“Veerappan Saga Rise and Fall” என்ற ஆங்கில நூலுக்கான தடை நீக்கமும்; The Hunt for Veerappan என்ற ஆவணப்பட வெளியீடும் ஒருசேர நிகழ்ந்தேறியிருக்கிறது. ‘Life of Pi’ என்ற ஆங்கிலப்படத்தின் இயக்குநர் ஆங்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய செல்வமணி செல்வராஜ் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக இவர் நான்கு வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். ‘The Forest King’, ‘The Bloodbath’, ‘The Revolutionary’, ‘The Way Out’ என நான்கு எபிசோடு களாக இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்.
யானைகளை கொல்ல ஆரம்பித்து வனத்தை ஆட்சி செய்யும் நபராக மாறியது; வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்கொடுமைகள்; வீரப்பனுக்கும் பல்வேறு இயக்கங்களுக்கிடையிலான அரசியல் தொடர்புகள்; தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கும் வீரப்ப னுக்கும் இடையிலான உறவுகள்; இறுதியில் போலீசாரால் அவர் வேட்டையாடப்பட்டது என அனைத்தையும் காட்சிப் படுத்தியிருக்கிறது, இந்த ஆவணப்படம்.
வீரப்பனை மதிப்பிடுவது குறித்தான கண்ணோட்டம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் இவற்றுக்குப் பின்னுள்ள வணிக அரசியலுக்கு அப்பால், சவால் நிறைந்த கதைக்களத்தை கலைஞராக காட்சிப்படுத்துவதில் சாதித்து காட்டியிருக்கிறார், ஆவணப்பட இயக்குநர் செல்வமணி செல்வராஜ். ”செய்தியாளர்” என்ற ஒற்றை சொல்லுக்கான மதிப்பை கூட்டியிருக்கிறார் பெ.சிவசுப்ரமணியன்.
– வே.தினகரன்