வாய்க்காலாக மாறிய வெண்ணாறு !
தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்கள் பிரதானமாக காவிரி – கொள்ளிடம் ஆறுகளை நம்பியே விவசாய பணிகள் நடந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தஞ்சாவூர் டெல்டா எங்கும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் கிளை ஆறுகள் நீர்ப்பாசனத்தில் பெரும் பங்காற்றி வருகின்றன.
அந்த வகையில், கல்லணையில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்றுதான் வெண்ணாறு. தஞ்சாவூர் தொடங்கி நாகை வரையில் பயணிக்கிறது. காவிரிக்கு இணையாக அகலத்தை கொண்டது வெண்ணாறு.
இதுபோன்ற கிளை ஆறுகளை வருடந்தோறும் தூர்வாரும் பணி முறையாக நடைபெற வேண்டும். ஆனாலும், விவசாயிகள் எதிர்பார்த்த படி இப்பணிகள் நடைபெறுவதில்லை.
இதன் விளைவாக, கரைபுரண்டு ஓட வேண்டிய வெண்ணாறு ஒரே குதியில் தாண்டி விடுகிற அளவுக்கு வாய்க்கால் ஆக மாறிய அவலம் வேதனையானது. இதனை நம்பி நெல் விளையும் 3 இலட்சம் ஏக்கர் பாசன பரப்பு பாழ்பட்டு வருவதாக குமுறுகின்றனர் விவசாயிகள்.
வெண்ணாற்றின் நீரோட்டத்தை தடை செய்யும் வகையில், புதர் போல் மண்டி கிடக்கும் முட்காடுகளை அப்புறப்படுத்தி முறையாக தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் எந்த பயனும் இல்லை.
ஆண்டு தோறும் தூர் வாரும் பணிக்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி எங்கே ‘கரை ஒதுங்கி’ கிடக்கிறது? என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்!
— தஞ்சை க.நடராசன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.