“எழுதுகோலால் உழுதுகாட்டும் மகாகவி!” ஜா.சலேத்
இலக்கண நூல்களைக் கற்றுத் தெரிந்து, இலக்கியப் பொருண்மைகளை அறிந்து தெளிந்து, யாப்பு விதிகளையும், ஓசை நயங்களையும் சரியாக உள்வாங்கி, சீரையும், தளையையும் சிதையாமல் கட்டி, பா புனைவது மரபுக்கவிதை. ‘இப்படித்தான் என்றில்லாது’, அதே வேளையில் ‘எப்படியும்’ என வரையறுக்காத கோணத்தில் அங்கிங்கெனாதபடி ஆர்ப்பரித்தெழுந்து, அவதாரம் எடுக்கும் எண்ணங்களையும் அணுகுண்டுகளாக்கி, அள்ளித் எறியும் பாவின் நிகழ்காலப்பெயர் புதுக்கவிதை. இளைஞர்களின் மொழியில் சொன்னால் மரபுக்கவிதை பட்டத்து யானை. புதுக்கவிதை கொம்பன் யானை.
மரபுப்பாவுக்கும் புதுப்பாவுக்கும் கலகமூட்டி, கலக்கமூட்டிப் பார்த்தவர்களுக்கு மத்தியில் புதுக்கவிதை எனும் போர்வாளைச் சமரசமின்றி சுழற்றி அதன் வேகத்தையும், வீரியத்தையும் உணர்த்த நேர்மறையாய் அணி நின்ற கவிஞர்களுள் முதன்மையானவர் எங்கள் மகாகவி ஈரோடு தமிழன்பன்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செ.இரா. நடராசன் – வள்ளியம்மாள் தம்பதி யினரின் மகனாக 28.09.1933 பிறந்த செகதீசன், விடிவெள்ளி, மலையமான் என பல புனைபெயர்களில் எழுதத் தொடங்கி, ஈரோடு தமிழன்பனாக நிலைபெற்றார்.
சங்க இலக்கியம் தொடங்கி, சமகாலம் இலக்கியம் வரை ஆழ்ந்த வாசிப்பு, உலக இலக்கியங்களின் மீதான தீராத காதல், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் போன்றவை ஈரோடு தமிழன்பன் படைப்புத்தளத்தில் தொடர்ந்து செயல்படக் காரணிகளாக அமைந்தன. கவிஞராக அறியப்பட்டிருந்தாலும், சிறுகதை, புதினம், உரைநடை, ஆய்வுரை, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் மொழிபெயர்ப்பு என பல தளங்களிலும் தன் எழுத்துப் பணியை உத்வேகத்தோடு செய்துகொண்டேயிருப்பவர்.
பள்ளி மாணவனாக இருந்தபோதே ‘சுய சிந்தனை’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியவர். பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் வெளிவந்திருந்தாலும், முதல் கவிதை நூல் 1968-ல் ‘கொடி காத்த குமரன்’ வில்லுப்பாட்டு நூலாக வந்தது.
இவரது ‘நெஞ்சின் நிழல்கள்’ புதினத்தை வாசித்த பாரதிதாசன், “ஆகா… எவ்வளவு நல்லா எழுதியிருக்கே. இதை நூலாக வெளியிடணும்” என்று, சென்னை பாரி நிலையத்தில் கொடுக்க, அது 1965 ஆம் ஆண்டு நூலாக வெளியானது.

1985 ஆம் ஆண்டு வெளியான ‘சூரியப் பிறைகள்’ ஹைக்கூ கவிதை நூலில், ஈரோடு தமிழன்பன் எழுதியிருக்கும் மிக நீண்ட முன்னுரை, ஹைக்கூ பற்றிய புரிதலைப் பலருக்கும் தந்தது. அந்நூலிலுள்ள ஓவியங்களையும் கவிஞரே வரைந்திருப்பார்.
ஹைக்கூ மட்டுமல்ல, சென்ரியு, லிமரிக், புதுக்கவிதையில் பயண இலக்கியம், முழுக்க வினாக்களாலேயே கவிதை, குறள் வெண்பாவில் பேரப்பிள்ளைத் தமிழ், கஜல் பாடல்கள் என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்.
தமிழ், தமிழர், தமிழ்ச் சமுதாயம் என்கிற வட்டத்தோடு நின்றுவிடாமல், உலகெங்குமுள்ள மனிதர்களை நேயத் தோடு தழுவிக்கொள்வது ஈரோடு தமிழன்பனின் சிறப்பு.
தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி, சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது. குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு (92) காரணமாக காலமாகி விட்டார்.
சொற்பெருக்காற்றல் கொண்டு கவிதைப்படைப்புகளால் உலகளக்கும் கவிஞர்களுள் தனித்துவமும், தலைமைத்துவமும் மிக்க மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு ‘மகாகவி’ எடுக்கும் மகத்தான சிறப்பிதழில் அவரின் பரந்த அறிவை, விரிந்த ஞானத்தை எழுதிட எனது தூவல் பேருவகை கொள்வதை சொற்களால் வண்ணமிட முயல்கிறேன்.

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது சோதி மிக்க நவ கவிதை என முழக்கமிட்ட பாரதியின் உணர்வுகளை கவிதையின் முதல் வரியிலும், அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை ! என குரலெழுப்பிய பாரதிதாசனின் உணர்வுகளை கவிதையின் அடுத்த வரியிலும் வைத்து சுவைஞரின் உள்ளத்துக் கனவுகளையும், கனவுகளின் வினாக்களுக்கான விடைகளையும் பாக்களாக்கிய புதுமையாளர்.
‘குட்டி யானைக்கு கொம்பு முளைத்தது!’ என்கிற இவரது வர்ணனை எண்ணற்றோர் இதயத்தில் பசுமரத்தாணி போல பதிந்து நிற்பதென்பது வரலாற்றியல் உண்மை.
“பாரதிதாசனுக்குப் பிறகு சொற்களை வளமாக ஆளக்கூடிய ஆற்றல் பெற்றவர் தமிழன்பன் என்பதை அவரது படைப்புகள் நமக்குச் சொல்கின்றன” என்று அறிஞர் ஆ.செகந்நாதன் இவர் குறித்து, மகிழ்ந்து மகிழ்ந்து எழுதிய வரிகள் ஒன்று போதும் அன்னைத்தமிழ் உள்ளவரை கல்வெட்டு எழுத்துக்களாய் நம் இதயத்துச் செவிகளில் ஒலித்து ஒலித்து இவரின் புகழ்பாடிக் கொண்டே இருக்கும்.
ஒரு கடிகாரத்தின்
தலைமையின்கீழ்
உரையாற்றக்
காலம் ஒருபோதும்
ஒப்புதல் தராது
விரித்து வைத்த
ஒரு குடையின்
அடியில் உட்கார்ந்து
பரிதி
நிழலிடம் யோசனை
கேட்காது
இந்த வரிகளை வாசிக்கிறபோது, “படிம உத்தியைப் பயன்படுத்துவதில் செறிவும், பொருளாதாரமும்மிக்க புதுக்கவிதையை ஆக்கியளிக்க முடியும்” என்று எடுத்துக்காட்டியவர்களில் அப்துல்ரகுமானும் தமிழன்பனும் குறிப்பிடத்தக்கவர்கள்” என்று சி.இ.மறைமலை போற்றிப் போற்றி புகழ்ந்த பதங்களை நினைலவூட்டி செங்கரும்புச்சாற்றை நாவில் பரவவிடுகிற பரவசத்தை அல்லவா தருகின்றன.

வடவேங்கடம் தென்குமரியென எல்லைகளை வரையறுக்கும் தமிழ் கற்ற அடியேன், மகாகவி அவர்களை ஏதேனும் வரையறைக்குள் சொல்லிவிட இயலுமா என முயன்று தோற்றுப் போனேன். காரணம் தமிழ் மரபின் நீட்சியாய் ஒரு திசை உயர்கிறார்… சோசலிச அன்பின் மாட்சியாய் மறுதிசையில் வளம் பெறுகிறார். இலக்கணத்தின் வேராய் ஊடுறுவுகிறார்… புதுக்கவிதை வரமாய் வானின் உயரத்தில் கனி தருகிறார்… வானத்தையும், பூமியையும் அளவிடுவதற்கு பொறி ஒன்றுமில்லை… பூரித்துக் கரம் கூப்பித் தொழுகிறேன் மாகவியின் திசை நோக்கி!
யார் உடைத்தாலும்
யாழ் உடைந்துவிடும்
ஆனால்
யார் மீட்டினாலும்
யாழ் இசை தருமா?
நீர் ஆயுதம் இல்லாது போராடும். எல்லாவற்றையும் வென்று விடும். கவிதை சொல்லெடுத்துப் போராடும். எல்லாவற்றையும் சமமாக்கும். அப்படி மரபுக்கும் புதுப்பாவுக்கும் வேற்றுமை தேவையில்லை என்பதை உரக்கச்சொல்லி, கல்நெஞ்ச பழமைவாதத்தைப் பனியாய் உருக செய்த பெருமைமிக்கத் தமிழ்க்கவிஞர்களின் தொகுப்பு உரு மகாகவி அவர்கள்.
வில்லிருந்து புறப்பட்ட அம்பாய்.. வேலாய்.. வாளாய்.. பழமைக்கு பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தனக்கான முகத்தைத் தந்தும், தன் படைப்புகளால் தன்னைத்தானே வென்றும் உயர்ந்தோங்கி நிற்கிறார் மகாகவி .
அச்சமின்றி பேசுதல் கவிஞரின் குரல்…. ஆர்ப்பரித்து பேசுதல் கவிஞரின் இயல்பு. அச்சம், ஆர்ப்பரிப்பு இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் இயல்புடையது எனினும் அச்சமற்ற தன்மையில் அன்பை ஆர்ப்பரித்து நடவு செய்யும் யுத்தியைத் தம் கவிதைகளால் அள்ளித்தந்த அட்சய பாத்திரம் இவர். இவரது கவிதைகள் முள்ளாய் இதயத்தில் தைத்து, சமூகத்தின் களைகளைப் பிடுங்கி எறிய ஆள் சேர்க்கிறன்றன.
உயர்சாதியான் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்
உச்சநீதிமன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகிறது
ஒடுக்கப்பட்டவன் குடிசையில்
ஒரு குழந்தை பிறந்தால்- அந்தத்
தாயின் கனவில் புதிதாய் ஒரு
கழிப்பறை திறக்கப்படுகின்றது
———
பட்டாம்பூச்சிகள்
இல்லாத ஊரில்
வண்ணங்கள் யாரோடு
பேசும்?
வழக்கமாகக் கவிஞர்கள் வாழ்த்துவார்கள். கவிஞராய் நின்று வாழ்த்துவார்கள். என் அறிவுக்கு எட்டியவரை கவிக்கோவைச் சொல்வதாக இருந்தாலும், மேத்தாவை சொல்வதாக இருந்தாலும், வாலியை வாழ்த்துவதாக இருந்தாலும் அன்பு தோழியை அகமலர்ந்து வாழ்த்துவதாக இருந்தாலும் லீலாவதி சிறப்புறச் சொல்லுவதாக இருந்தாலும் மகாகவியின் பாராட்டுதல் மொழி அமுதசுரபி என்றே துதிக்கலாம்.
‘வணக்கம் தமிழன்ப!’ என்றார் எங்கள் கள்ளிக்காட்டு கதாநாயகர் கவிப்பேரரசு. உம் பார்வையில் வள்ளுவர் வணங்கத்தக்கவர்… எமக்கு நீரே வள்ளுவர்.

“மேம்போக்காகப் பாடிச் செல்லும் தட்டைக் கவிஞர் அல்லர் இவர். மனித குலத்தைப் பொருளாதாரம், அரசியல், பண்பாடு என முப்பரிணாமத்தில் கண்டுணர்ந்து பாடும் முழுமைக் கவிஞர். பாரதி,பாவேந்தர் வழி, மானுடம் பாடும் வள்ளலார் வழி, சமூக உணர்வுள்ள சமயக் கவிஞர்கள் வழி, வள்ளுவர் வழி, சங்கப் பெருங்கவிச் சுரங்கம் வழிப்பாய்ந்து, தன் பாடல்களுக்கானக் கருக்களை அள்ளி அள்ளிச் சேர்த்திருக்கிறார்” என்கிற எழுத்தாளர் பொன்னீலனின் வாழ்த்தும், “உலக மனிதர்கள் அனைவரும் ஒரே நிலை என்னும் உன்னதக் கொள்கையைப் பொதிந்து, கவிஞர் தமிழன்பன் கவிதைகள் உலகப் பார்வையை வெளிப்படுத்தி நிற்கின்றன” என்கிற முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அவர்களின் வணக்கமும் மகாகவியைப் போற்றி மகிழ்கிறது தமிழ் கூறு நல்லுலகம் சார்பாக.
“சென்ரியு, லிமரைக்கு, லிமர்புன் இப்படி புதிய புதிய வடிவங்களில் நீங்கள் சோதனை முயற்சி செய்வது ஏன்?” என இவரிடம் கேட்டால், “படைப்பாளி எப்போதுமே ஒன்றையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கக் கூடாது என்ற எண்ணம் உடையவன் நான்” என்று போதிமரத்துப் புத்தனாய் பதில் சொல்கிறார்.
மகாகவியோடு உரையாடிய அனுபவம் சிலருக்கு இருக்கும். நேரடியாக உரையாட வேண்டும் என்று அல்ல… அவரது மேடைப் பேச்சுகளை, அவருடைய பயிலரங்குகளை, அவருடைய நேர்காணல்களை உற்றுப்பார்த்து, செவிகொடுத்து மனதில் நிறுத்தினால் மூளை முட்ட முட்டத் தின்றது மாதிரி இருக்கும்.

ஆம். அமெரிக்காவில் இயங்குகிற ‘இன்டர்நேஷனல் ஹைக்கூ சொசைட்டி’ என்பது பற்றி வினா எழுப்பினால், அந்த அமைப்பின் செயல்பாடுகள், அந்த அமைப்பின் மதிப்பீடுகள், அந்த அமைப்பின் வெளியீடுகள் பற்றி மட்டும்தான் எல்லோரும் பேசுவர். “அமெரிக்கா ஏன் ஹைக்கூவை கையில் எடுக்க வேண்டும்?” என வினா எழுப்புவார். ஹிரோஷிமா நாகசாகி மேல் வீசிய அணுகுண்டின் துயரம், அவர்கள் கொன்ற உயிர்கள் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சிதான் ஹைகூ பேசும் நிர்பந்தத்திற்கு அமெரிக்காவை நிறுத்தியுள்ளது. ஜப்பானியர்களது இலக்கியத்தையாவது வளர்க்கலாம் என்ற எண்ணத்தை அமெரிக்கர்களின் இதயத்தில் உண்டாக்கி இருக்கிறது என அழுத்தமாக பேசுவார்.
* நகையை, அழுகையை, இளிவரல் மருட்கையை, அச்சத்தை, பெருமித்தை, வெகுளியை, உவகையை எழுத்தின் வழி, நம் அகத்தின் முன் அமர்த்தி சிலிர்க்க வைத்த மெய்ப்பாட்டுக் கவிஞர்.
* வாழ்க்கைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை வாழ்க்கை வயதை எதிர்பார்த்திருப்பதும் இல்லை. எல்லையற்ற காலப் பரப்பில் என்னுடைய வயது துளியினும் துளியினும் துளியினும் துளி எனச்சொல்லி நம்பிக்கை வழிய வழிய பூச்செண்டுகளைத் தரும் வரவேற்பாளர்.
* மரபுக் கவிதையின் ஆணி வேரை ஆய்வு செய்து சென்ட்ரியூ கவிதைகளை ஒரு வண்டி நிறைய நம் வாசலுக்கு அனுப்பி வைத்த பெருமகனார்.
* ஆங்கிலத்தின் லிமரைக்கையும் ஜப்பானின் ஹைக்கூவையும் சரிவிகித உணவாகப் படைத்து சென்னிமலையில் கிளியோபாட்ராக்களை நம்மூர் வீதிகளில் உலவ விட்ட பெருங்கவிஞர்.
* காலம்தோறும் என்னுடைய அடையாளமாக இருப்பது; என்னைப் புதுப்பிப்பது; என்னோடு சேர்ந்து புதுப்பிக்கப்படுவது கவிதை என்ற அடையாளமே என உரத்துச் சொல்லும் கவிதைக் கொள்கைக்காரர்.
அன்போடும், அறத்தோடும், பண்போடும் விரியும் தமிழரின் அற ஒளியை தன்வயப்படுத்தி, அச்சம் தவிர் – அறம் செய் – அனைவரையும் உறவினராக்கு என்கிற பண்பில் ஒளிரும் மகாகவி எழுதுகோலால் உழுதுகாட்டும் மகத்தான நம்பிக்கை.
நன்றி : தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா & மகாகவி ஜூலை – செப்டம்பர் 2024








Comments are closed, but trackbacks and pingbacks are open.