விடுதலை ரெண்டும் , புஷ்பா ரெண்டும்
நேற்று மாலை விடுதலை 2 பார்த்தேன். நக்சல்பாரி அரசியலைப் பேசுகிற படம். படம் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குமுன் இந்தியாவில் நக்சல் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்தியாவில் நக்சல் இயக்கங்கள் தொடங்கப்பட்டு 55 ஆண்டுகட்டுமேல் ஆகின்றன. மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி எனும் கிராமத்தில்தான் தன்னெழுச்சியாக, நிலவுடமையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இதற்கு வடிவம் தந்தவர் சாருமஜூம்தார்.
விடுதலை அடைந்த இந்தியாவில் நம் சுய உரிமை பாதுகாக்கப்படும் . அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும். ஒரு புது வாழ்வு கிடைக்கும். என உழைக்கும் வெகுசன இந்தியர்கள் நம்பினார்கள். விடுதலைக்குப் பிறகு இது போலி விடுதலை, போலி சனநாயகம் என்பதை நாளடைவில் உணரத் தலைப்பட்டனர்.
விடுதலைக்குப் பிறகும் இந்தியா அரைக்காலனியாகவும், அரை நிலவுடைமைப் பண்போடும் விளங்கியது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிற அரசியல் இயக்கங்களைப்போலவே இப்போலி சனநாயக வழியில், உழைக்கும் வெகுமக்களுக்கான ஊரிமைகளை வென்றெடுக்கலாம்! என பகல் கனவு கண்டது. அவற்றிடமும் உழைப்பாளர்கள் ஏமாற்றத்தை அனுபவித்தனர். இதன் விளைவாக உருவாகியிருந்த உழைக்கும் மக்களின் கோபத்தை புரட்சியாக மாற்றமுடியும்!
என சாருமஜூம்தார் நம்பினார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, தரகு அதிகார வர்க்க எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, போன்றவை நக்சல்பாரி இயக்கத்தின் குறிக்கோளாக இருந்தது. துப்பாக்கி முனையில்தான் விடுதலை பிறக்கும் ! என்பது நக்சல்பாரிகளின் நம்பிக்கை. இந்த உணர்வால் உந்தப் பெற்று 1975 இல் புரட்சி வெற்றியடையும் என்றார் சாருமஜூம்தார்.
இந்திய விடுதலை எந்த மாற்றத்தைதும் உருவாக்காததால் ஏமாந்திருந்த இளையசமூகம் சாருமஜும்தாரின் சொற்களில் நம்பிக்கை பெற்றது. மே.வங்காளம், தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஸா என இந்தியாவெங்கும் புரடச்சியின் அனல் வீசியது. இளைஞர்களின் கரங்கள் நிலவுடமையாளர்களின் ரத்தத்தால் நனைந்திருந்தன.
ஆனாலும் சாராமஜூம்தார் குறிப்பிட்ட காலக்கெடுவில், புரட்சியின் வழித்தடத்தில் பாரிய அளவிலான முன்னேற்றங்கள் உருவாகவில்லை.
72 இல் சாருமஜூம்தார் கைது செய்யப்பட்டார். சிலநாட்களில், உடல்நலம் சரியில்லாததால் இறந்தார்! என சிறை நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து நாடெங்கும் ஆயிரக்கணக்கான நக்சல்பாரி தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இயக்கம் பல பிளவுகளைச் சந்தித்தது.
இந்தியா உண்மையில் சுதந்திரம் அடையவில்லை எனும் கருத்தாக்கத்தை நக்சல்களால் பரந்துபட்ட மக்கள் திரளிடம் கொண்டு செல்ல இயலவில்லை. நக்சல்கள் பரவியிருந்த பகுதிகளில் அரசு தற்காலிக நிவாரணங்களைச் செய்து மக்களை மைய நீரோட்டத்தில் இணைத்தது.
ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு, நாட்டில் மாற்றங்கள் நடைபெறுகிறது! என அரசு மக்களை நம்பவைத்தது. காந்தியின் அஹிம்சை வழிக்கு பழகியிருந்த இந்திய மனம் அழித்தொழிப்பை பெருமளவில் ஏற்கவில்லை. நக்சல்பாரிகளின் எழுச்சியை இவ்வாறாக அரசு ஒடுக்கியது.
ஆனாலும் நக்சல்பாரிகளின் தன்னலமற்ற உயிர் ஈகையால் இந்தியாவில் விவசாய தொழிலாளர்களுக்கு ஓரளவு நல்ல கூலி கிடைத்தது. தீண்டாமையின் தீவிரம் குறைக்கப்பட்டது. லாக்கப் மரணங்கள், பாலியல் பலாத்காரங்கள் குறித்த விழிப்புணர்வு வளர்ந்தது.
இத்தகைய, நக்சல் அரசியலை விடுதலை 2, பேசியிருக்கிறதா? என்றால் , ஓரளவு பேசியிருக்கிறது. அதற்காக வெற்றிமாறனைப் பாராட்டியாக வேண்டும். அதேவைளை வெற்றிமாறனிடம் கேட்க சில கேள்விகளும் இருக்கின்றன.
இப்படம் புலவர் கலியபெருமாள் அவர்களது போராட்ட வாழ்வின் பெரும்பகுதியைக் கொண்டிருக்கிறது. விடுதலையில் வரும் வாத்தியார் பாத்திரம் முழுக்க முழுக்க அவரது influence இல் எழுதப்பட்ட பாத்திரம்.
அதுபோல வாத்தியாருக்கு அரசியல் குருவாக (கிஷோர்) வருகிற பாத்திரம் தமிழரசன் அவர்களை ஞாபகப்படுத்துகிறது. இதில் பயன்படுத்தப்படும் பல வசனங்கள் அவர்களது சொற்களே.
ஆனால், படத்தில் வருகிற பாத்திரங்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவை. இவற்றை யாரோடாவது, எவற்றோடாவது இணைத்துப் பார்க்கத் தோன்றினால், அது தற்செயலானது! என்கிறார் வெற்றி மாறன்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற கற்பனைக் கதைகளை எடுப்பவர்கள் கூட இத்தகைய பொறுப்புத் துறப்பு வாசகங்களை வெளியிடுவதில்லை. இங்கு காந்தி போன்றோரது பயோபிக் படங்கள் எடுக்க முடிகிறது. இது புலவரின் பயோபிக் என்றோ, அவரது இயக்கத்தால் பெற்ற உத்வேகத்தில் உருவான படம் என்றோ குறிப்பிட, வெற்றிமாறனை தடுப்பது எது ? இந்த தைரியமோ, நேர்மையோ இல்லாமல் எப்படி வெற்றிமாறனால் விடுதலை அரசியலைப் பேசமுடியும்? கலியபெருமாள், தமிழரசன் போன்றோர் வாழ்வைத் திருடி கதை செய்கிறீர்கள். அதேவேளை அவர்களைக் கற்பனைப் பாத்திரங்கள் என்கிறீர்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது அறிவு நாணயமான செயலா?
இந்த லட்சணத்தில் மூலக்கதை ஜேயமோகனாம்! ஆச்சரியமாக இருக்கிறது. ஜெ.மோவால் வலதுகையால் வெண்முரசு எழுத முடிகிறது. லெஃப்ட் ஹேண்டால் விடுதலையையும் டீல் செய்ய முடிகிறது.
ஆன்மீகம், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் , எனப் பயணிக்கும் ஜெ.மோ நக்சல்பாரிகள் குறித்த படத்துக்கும் மூலக்கதை, என்றால் வெற்றியின் மீதான நம்பகத்தன்மை குறைகிறது.
நக்சல்பாரிகளின் இயங்குதளம் காடு.
பிஹார், ஜார்கன்ட், சட்டிஸ்கரின் போன்ற காட்டுப்பகுதிகளை நக்சல்களின் ‘சிவப்பு நடைவழி’ (red corridor) என்பார்கள். இப்போதைய கடலூர், அறியலூர் மாவட்டங்களின் முந்திரிக்காடுகளும் சிவப்பு நடைவழிகளாக இருந்தன.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெண்ணாடத்தில் உள்ள அருணா சர்க்கரை ஆலையில் குண்டுவைக்க வெடிமருந்து தயாரித்தது, அப்போது விபத்து நிகழ்ந்தது எல்லாமே நடந்தவை. இதை புலவர் தன் வரலாற்று நூலில் (மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்) குறிப்பிட்டுள்ளார். அரியலூர் ரயில் விபத்தும் நிகழ்ந்ததுதான். ஆனால் இவையெல்லாம் தற்செயலானவை. கற்பனை என்கிறார் வெற்றிமாறன்.
நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா? இல்லை ஜெ.மோவின் விஷ்ணுபுரத்திலா?
விடுதலை முதல் பார்ட்டில் பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலின் பல காட்சிகள் தழுவப்பட்டிருந்தன. அதுவும் தற்செயலானதுதானா?
‘என்னை மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததாலதான், உன்ன மாதிரி இருக்கிறவனெல்லாம் இப்படி படிச்சு பதவிக்கு வர முடிஞ்சுச்சு!’ என் படத்தில் திராவிட இயக்கம் சார்ந்த ஒரு அமைச்சர் பேசுவார். மேம்போக்காகப் பார்த்தால், ஏதோ திராவிட இயக்கங்களை மேன்மைப் படுத்துவதுபோல் தோன்றும்.
ஆனால் அந்த அமைச்சரை ஒரு பயந்தாங்குளியாக, லஞ்சம், ஊழலோடு சம்மந்தப்பட்டவராகக் காட்டியிருப்பார் வெற்றிமாறன். உப்புச்சத்தியாகிரகத்தை, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை படம் எடுத்துவிட்டு ,
அதை கற்பனை என்றால் எப்படி இருக்கும்? அப்படிதான் இருக்கிறது, விடுதலை 2வும். பாக்ஸ் ஆஃபீஸையும் புரட்சியையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கிறது விடுதலை 2.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், சே, புலவர் கலியபெருமாள், தமிழரசன் இவர்கள் கற்பனை பாத்திரங்கள் இல்லை. சரக்கரை ஆலை குண்டு வெடிப்பு நிகழ்வு கற்பனையில்லை.
ஆனால், இவை யாவும் கற்பனை என்கிறார் வெற்றி. சரி, கற்பனை எனில், விடுதலை பேசுவது புரட்சியில்லை. சாகசம். இதைதான் புஷ்பா 2 வும் செய்கிறது.
– எழுதியவர் கரிகாலன்.