பள்ளிக்கூட பையன் கையில் துப்பாக்கி ! டம்மியா, ஒரிஜினலா ? அதிரவைத்த சம்பவம் !
”துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்” என்பதாக, இதுவரை வெளிநாட்டு செய்தியாக பார்த்து வந்த நிலைமாறி, திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த கசிநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சக மாணவனை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரம் மிரட்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த டிசம்பர் – 15 அன்று பள்ளி மாணவர்களுக்கிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பத்தாம் வகுப்பு பயிலும் பையன் ஒருவன் மறுநாள் பள்ளிக்கு வரும்போது (gun) துப்பாக்கி எடுத்து வந்து அவனோடு மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சுட்டுத்தள்ளி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது துப்பாக்கியை பார்த்து கதி கலங்கிப்போன மாணவர்கள் அலறியடித்து ஓட்டமெடுத்ததில், சம்பவத்தை பார்த்து அரண்டுப்போன ஆசிரியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கதிகலங்கிய கந்திலி போலீசார் சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று சம்பந்தபட்ட மாணவனிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றியுள்ளார்கள். மேலும் , மாணவரிடம் போலீஸ் விசாரிக்கப்பட்ட தாகவும்; அதில் சம்பந்தப்பட்ட மாணவன் ஆன்லைன் மூலமாக டம்மி துப்பாக்கி வாங்கியதாகவும்; பார்பதற்கு இது நிஜ துப்பாக்கி போன்றே தோற்றத்தில் உள்ளது என்றும்; மாணவர்கள் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் கொண்ட அந்த மாணவன் தான் வாங்கி வைத்திருந்த (டம்மி ) துப்பாக்கியை கொண்டுவந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த துப்பாக்கி ஒரிஜினலா, டம்மியா? என அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கினோம். கசிநாயக்கன்பட்டி அடுத்த பெரியகரத்தை சேர்ந்த மாணவன் தனது தாத்தா வளர்ப்பில் வளர்ந்து வருகின்றான் என்றும் அவனது தாயார் பெங்களூரில் கூலி வேலை செய்து படிக்க வைத்து வருகிறார் என்றும்; சம்பவத்தன்று அந்த மாணவன் காண்டிராக்டராக இருக்கும் தனது தாத்தா லைசன்ஸ் வாங்கி பயன்படுத்தும் துப்பாக்கியைத்தான் பயன்படுத்தியிருக்கிறான் என்கிறார்கள்.
சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைசாமியிடம் பேசினோம், “மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சாதாரண சச்சரவுகள் தான் அன்று ஏற்பட்டுள்ளது. இது என் கவனத்திற்கு வந்த உடனே சக ஆசிரியர்களிடம் பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தேன். அந்த மாணவனின் தாத்தா குறித்து வரும் தகவல்கள் வதந்தி” என்பதாகவே முடித்துக்கொண்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜவ்வாது மலை புதுர்நாடு கந்திலி , பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் லைசன்ஸ் இல்லாத துப்பாக்கிகள் பரவலாக உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மட்றப்பள்ளி அருகில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் 2021 ஆண்டு அரங்கநாதன் என்பவரின் எதிரிகள் அவரின் குடும்ப தகராறில் இதே போன்று துப்பாக்கியை கொண்டு சுட்டுவிடுவதாக மிரட்டினார். அப்போது இருந்த டிஎஸ்பி பன்னீர்செல்வத்திடம் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புகார் அளித்தோம். அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது மீண்டும் அப்படியொரு சம்பவம் கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளி மாணவர்களிடையே நடந்துள்ளது. இது கள்ள துப்பாக்கியா ? அல்லது போலீசார் சொல்லும் டம்மி துப்பாக்கியா? என்பது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். பள்ளியில் நடந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகமும் மற்றும் காவல்துறையும் மூடி மறைக்க பார்கிறது.
எனவே, சந்தேகப்படும் இடங்களில் சோதனை நடத்தினால் கள்ள துப்பாக்கிகள் கிடைக்கலாம். மேலும் தேவை இல்லாமல் லைசன்ஸோடு துப்பாக்கி வைத்திருந்தாலும் அந்த நபரக்ளிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்.” என்பதாக சரவெடியாகவே வெடிக்கிறார், சிவசேனா கட்சியின் நகர தலைவர் சரவணன்.
கந்திலி போலீஸாரிடம் பேசினோம். ”அது ஆன்லைனில் வாங்கப்பட்ட ‘டம்மி துப்பாக்கி”. அதை பறிமுதல் செய்துள்ளோம். சம்மந்தப்பட்ட மாணவன் மற்றும் குடும்ப உறவுகளிடமும் எச்சரித்தும் அறிவுரைகளும் வழங்கியிருக்கிறோம்.” என்கிறார்கள்.
ஒரிஜினல் துப்பாக்கியா? டம்மி துப்பாக்கியா? என்ற கேள்வி ஒரு புறமிருக்க; ஒருவேளை போலீசார் சொல்வது போலவே, டம்மி துப்பாக்கியாக இருந்தாலும்கூட, ஒரு சாதாரண மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவனின் கைகளுக்கு அந்த டம்மி துப்பாக்கி எப்படி போய்ச் சேருகிறது என்பது அச்சத்திற்குரிய அம்சமாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, விரிவான விசாரணையையும் பள்ளி மாணவர்களிடையே அவசியமான விழிப்புணர்வையும் போலீசார் தரப்பில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
— கா.மணிகண்டன்.