அரசின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்கிறதா ? களத்தில் இறங்கிய துணை முதல்வர் !
விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் எவ்வாறு சிறப்பாகச் சென்றடைகின்றன என்பதைக் கவனிக்க, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செப்-23 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று முக்கிய உரைகள் ஆற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் கூடுதல் செயலாளர் உமா மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, காவல் கண்காணிப்பாளர் தெ. கண்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் தேவைகள் மற்றும் குறைகள் விரைவாக தீர்க்கப்படும் வகையில் துறை அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும், மக்கள் நலனையும் உறுதி செய்ய மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், வரவிருக்கும் காலங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
— மாரீஸ்வரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.