குடும்பத் தகராறில் கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கணவனை கொலை செய்த மனைவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.
சாத்தூர் சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா (27). கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த அவர், மனைவி ராஜலட்சுமி (25) உடன் இரு மகள்களுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார். தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் வருத்தமடைந்த கற்பகராஜா, அடிக்கடி மனைவியை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த ராஜலட்சுமி, தாய் பழனியம்மாள் (49), தம்பியின் நண்பர் வேலாயுதம் (25), திருநங்கை ஸ்வீட்டி (22) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு, 2023 செப்டம்பர் 6-ம் தேதி இரவு கற்பகராஜாவை கொலை செய்தார்.
இந்த சம்பவம் முதலில் சந்தேக மரணம் என சாத்தூர் நகர போலீசாரால் பதிவு செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் கொலை செய்தது உறுதியான நிலையில் கொலை வழக்காக மாற்றி நான்கு பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், முக்கிய குற்றவாளி ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேசமயம், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து பழனியம்மாள், வேலாயுதம், திருநங்கை ஸ்வீட்டி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.