அங்குசம் பார்வையில் ‘சுழல்-2 தி வோர்டெக்ஸ்’ [ அமேசான் பிரைம் ஓடிடி ]
அங்குசம் பார்வையில் ‘சுழல்-2 தி வோர்டெக்ஸ்’ [ அமேசான் பிரைம் ஓடிடி ]
தயாரிப்பு : ‘வால்வாட்சர் பிலிம்ஸ்’ & ’அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்’ எழுத்து & உருவாக்கம்: புஷ்கர்—காயத்ரி. எபிசோட் இயக்குனர்கள் : பிரம்மா & சர்ஜுன் கே.எம். நடிகர்-நடிகைகள் : கதிர்,ஐஸ்வர்யா ராஜேஷ், லால், ‘பருத்திவீரன்’ சரவணன், மஞ்சிமா மோகன், ‘கயல்’ சந்திரன், கெளரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா ப்ளெஸ்ஸி, ரினி, கலைவாணி பாஸ்கர், ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், சாந்தினி தமிழரசன், அஸ்வினி நம்பியார், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஒளிப்பதிவு : ஆபிரஹாம் ஜோசப், இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : ரிச்சர்ட் கெவின், ஸ்டண்ட் டைரக்டர்ஸ் : தினேஷ் சுப்பராயன், திலீப் சுப்பராயன், ‘மிராக்கிள்’ மைக்கேல்., காஸ்ட்யூம் டிசைனர் : சுபஸ்ரீ கார்த்திக் விஜய். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘சுழல்’ முதல் சீசன் இதே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, கோடிக்கணக்கான பார்வையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்று மெகாஹிட்டானது. இப்போது ‘சுழல்-2- ’தி வோர்டெக்ஸ்’ எட்டு எபிசோடுகளாக இந்த பிப்ரவரி 28—ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக ஆரம்பித்துவிட்டது.
முதல் சீசனில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இன்ஸ்பெக்டர் சக்கரை [ எ ] சக்கரவர்த்தியாக நடித்த கதிர் ஆகிய இருவர் மட்டும் தான் இந்த இரண்டாம் சீசனில் பங்கெடுத்திருக்கிறார்கள். மற்ற எல்லோரும் இந்த சீசனுக்குப் புதியவர்கள் தான். முதல் சீசனில் மலைப்பகுதி தான் கதைக்களம். இதில் கடல்பகுதி.
முதல் சீசனில் குணாவைக் கொன்ற கொலையாளியான நந்தினி [ஐஸ்வர்யா ராஜேஷ்] இந்த இரண்டாவது சீசனில் நீதிமன்றத்தில் நிற்பது போல முதல் எபிசோட் ஆரம்பிக்கிறது. நந்தினியின் வக்கீல் செல்லப்பா [ லால் ] ”நந்தினி செய்தது கொலையல்ல, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்த ஆயுதம்” என்பது உட்பட பல்வேறு சட்டநுணுக்கங்களை தனது வாதத்திறமையால் எடுத்து வைத்து, வழக்கை இறுதிக்கட்டத்திற்குக் கொண்டு போகிறார்.
இந்த நேரத்தில் தான் தனது அப்பாவின் நெருங்கிய நண்பர், தனது அப்பாவின் மறைவுக்குப் பிறகு அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கும் செல்லப்பாவைப் பார்க்க வருகிறார் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் இன்ஸ்பெக்டர் சக்கரை[ கதிர்]. செல்லப்பாவின் மனைவி மாலதியை [ அஸ்வினி நம்பியார் ] ‘மாலதிம்மா” என அன்பு செலுத்துகிறார். மாலதியும் சக்கரை மீது பாசத்தைக் கொட்டுகிறார். செல்லப்பாவுக்கும் அவரது சொந்த மகனுக்குமிடையே மனத்தாங்கல் இருப்பதை சக்கரை உணர்கிறார்.
ஒருநாள் கடலோரம் உள்ள கோட்டை பங்களாவில் இருக்கும் செல்லப்பாவைச் சந்திக்கப் போகிறார் சக்கரை. அனைத்துக் கதவுகளும் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்க, கதவைத் தட்டித்தட்டிப் பார்த்தும் பலனில்லாததால், ஜன்னலின் ஒருபகுதியை உடைத்துப் பார்த்தால் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார் லால்.. இரண்டு எபிசோடுகள் முடிகிறது.
மூன்றாவது எபிசோடில் லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி [ ‘பருத்திவீரன்’ சரவணன் ] உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போனால் நெற்றிப் பொட்டில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்தச் சகதியில் கிடக்கிறார் லால். வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சக்கரையிடம் கொடுக்கிறார் டி.ஐ.ஜி.
செல்லப்பா தற்கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதற்கான விடையை எட்டாவது எபிசோட் சொல்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டணத்தில் பத்து நாட்கள் நடக்கும் தசரா பண்டிகையைத் தான் கதையின் வோர்டெக்ஸ் [ மைய சுழற்சி ]ஸாக எழுதி உருவாக்கியிருக்கியிருக்கிறார்கள் புஷ்கர்-காயத்ரி இணை. எட்டு எபிசோடுகளை பிரம்மாவும் சர்ஜுனும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். நிஜத்தில் குலசேகரபட்டணம் என்றால் இந்த சுழலில் காளிபட்டணம். தசராவின் கொடியேற்றத்துடன் கதை துவங்கி, ”தாங்கள் தான் செல்லப்பாவைக் கொலை செய்தோம்” என எட்டு இளம் பெண்கள் போலீசில் சரண்டரானதும் பரபரப்பாகி… அரக்கன் அழிப்பில் முடிகிறது இந்த ‘சுழல்-2’ . யார் அந்த அரக்கன்?
முதல் சீசனைப் போலவே இதிலும் தனது கேரக்டரின் முக்கியத்துவம், கதை நிகழும் நிலப்பரப்பு, தனது மானசீக காதலி நந்தினி [ ஐஸ்வர்யா ராஜேஷ்]க்காக உருகி நிற்கும் தருணம், செல்லப்பா [ லால் ] கொலை, தற்கொலை என மாறிமாறி மனசுக்குள் ஓடினாலும் நிதானத்துடனும் திறத்துடனும் விசாரணையைத் தொடர்வது, கொலைக் கைதிகளான முத்து[ கெளரிகிஷன் ], நாச்சி [ சம்யுக்தா விஸ்வநாதன் ], முப்பி [ மோனிஷா ப்ளெஸ்ஸி], வீரா [ ஷிரிஷா ], செண்பகம் [அபிராமி போஸ்], சந்தனம் [நிகிலா சங்கர்], காந்தாரி [ ரினி ], உலகு [ கலைவாணி பாஸ்கர் ] என அஷ்டகாளிகளின் பெயர் கொண்ட எட்டு இளம் பெண்களிடம் விசாரிக்கும் தொனி என வெகு சிறப்பாகவே நடித்துள்ளார் கதிர். ‘பரியேறும் பெருமாள்’-க்குப் பிறகு சினிமாவில் ஏன் இவருக்கு சரியான பிளாட்ஃபார்ம் கிடைக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
நந்தினியாக ஐஸ்வயா ராஜேஷின் நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. இந்த மாதிரி கேரக்டர் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. லால் இறந்தவுடன், மீண்டும் முதலில் இருந்து வழக்கு விசாரிக்கப்படும் என வீடியோ கான்ஃபரஸ்ஸில் நீதிபதி மனுஷ்யபுத்திரன் சொன்னதும் இடிந்து நொறுங்குவது, கைதிகளான அந்த இளம் பெண்களிடம் பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது, கருப்பட்டி மிட்டாயை கதிர் கொடுத்ததும் “நீ எனக்கு கொடுக்கும் லஞ்சமா?” என மெல்லிய சிரிப்புடன் கேட்பது, அந்த எட்டு இளம் பெண் கைதிகளைக் காப்பாற்றத் துடிப்பது என ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்திவிட்டார்.
எட்டு எபிசோடுகளிலும் விட்டுவிட்டு காட்சிகள் என்றாலும் மனதில் நிலைத்திருப்பவர் வக்கீல் செல்லப்பாவாக வரும் லால் தான். அவர் போடும் பொதுநல வழக்கில் சிக்கும் ஸ்கூல் கரெஸ்பெண்டாண்ட் சாந்தினி தமிழரசன், இன்ஸ்பெக்டர் பருத்திவீரன் சரவணன் ஆகியோரிடம் காட்டும் தெனாவெட்டு, எட்டு குழந்தைகளையும் பாதுகாக்கும் பரிதவிப்பு, மனைவி மாலதியிடம் காட்டும் அன்பு, கதிரிடம் காட்டும் பாசம் என எல்லா ஏரியாவிலும் புகுந்துவிளையாடிவிட்டார் லால்.
அஷ்டகாளிகளாக வரும் எட்டு பேரில் முதல் இடம் முத்துமாரியாக வரும் கெளரிகிஷனுக்கு, இரண்டாம் இடம் முப்பி[டாதி]யாக வரும் மோனிஷா ப்ளெஸ்ஸிக்கு, மூன்றாவது இடம் வக்கீல் காந்தாரி[யம்மன் ]யாக வரும் ரினி ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் மற்ற காளிகள் வருகிறார்கள்.
இன்ஸ்பெக்டர் மூர்த்தியாக ‘பருத்திவீரன்’ சரவணன், கதிரிடம் முறைப்பது, சலிப்பது, சமாதானம் ஆவது, ஸ்டேஷனில் அரட்டி உருட்டுவது, தூத்துக்குடி ஸ்லாங்கில் வெளுத்துக்கட்டிவிட்டார். கன்விக்ட் வார்டனாக வரும் சரோஜா [ பெயர் தெரியவில்லை ] கேரக்டர் மற்றும் சில பெண் வார்டன்கள் மூலம் பெண்கள் சிறையிலும் தாதாத்தனம் கேங்வார் நடப்பதை துல்லியமாக காட்டியுள்ளனர். கமல்ஹாசனின் ’மகாநதி’யில் ஆண்கள் சிறையான சென்னை செண்ட்ரல் ஜெயில் கலவரத்தைப் பார்த்திருக்கோம். பெண்கள் சிறையிலும் கலவரம் நடக்கும், அதற்கான சூழலும் அமையும் என்பதை இந்த சுழலில் தான் பார்த்தோம்.
கயல் சந்திரன் –மஞ்சிமாமோகனின் எபிசோட் தான் சுழலின் மைய சுழற்சியே. பெண் குழந்தைகள் கடத்தல் கும்பலின் நெட் ஒர்க், அதிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா என இந்தி பெல்டில் ஆரம்பித்து இண்டர்நேஷனல் வரை நீண்டு வளர்ந்திருப்பதையும் இயக்குனர்கள் பிரம்மாவும் சர்ஜுனும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நமக்கு பகீர்னு ஆகிப்போச்சு. அதே நேரம் பெண் குழந்தைகள் கடத்தல் கும்பலை கடலில் கதிர் சேஸ் பண்ணுவது, இங்கே பெண்கள் ஜெயிலுக்குள் நடக்கும் கலவரத்தை இழு இழு என ஜவ்வாக இழுத்ததால் சலிச்சுப் போச்சு. ஓடிடி என்பதையே மறந்து சினிமா மூடுக்கு புஷ்கரும் காயத்ரியும் மாறியதன் விளைவு தான் இது.
சுழல் சூப்பராக சுழல்வதற்கு கேமராமேன் ஆபிரஹாமும் மியூஸிக் டைரக்டர் சாம் சி.எஸ்.ஸும் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். அதிலும் அஷ்டகாளிகளைப் பற்றிய பாடலிலும் அரக்கனை அழிக்கும் பாடலிலும் செம சூப்பர் த்ரில்லிங்கை கூட்டியிருக்கார் சாம் சி.எஸ்.
நமக்கு எழுந்த மிகப்பெரிய சந்தேகம் என்னன்னா… முதல் சீசனில் கொலை நடந்த இடம் மலைப்பகுதி. இந்த சீசனில் வழக்கு நடக்கும் இடம் கடல்பகுதி, பெண்கள் சிறை இருப்பது விருதுநகர் மாவட்டம். அதெப்படின்னு அடுத்த சீசனில் புஷ்கரும் காயத்ரியும் சொல்வார்களோ என்னவோ? என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் ஓடிடி தானேன்னு சொன்னாலும் தப்பு தப்பு தானே…
–மதுரை மாறன்