அங்குசம் பார்வையில் ‘சப்தம்’
அங்குசம் பார்வையில் ‘சப்தம்’ 50/100
தயாரிப்பு : ‘7ஜி பிலிம்ஸ்’ & ’ஆல்பா பிரேம்ஸ்’ 7ஜி சிவா, இணைத் தயாரிப்பு : எஸ்.பானுப்ரியா சிவா. டைரக்ஷன் : அறிவழகன். நடிகர்-நடிகைகள் ; ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ராஜீவ்மேனன், எம்.எஸ்.பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, அபிநயா. ஒளிப்பதிவு : அருண் பத்மநாபன், இசை : தமன் எஸ்., ஆர்ட் டைரக்டர் : மனோஜ்குமார், எடிட்டிங் : வி.ஜே.சாபு ஜோசப், சவுண்ட் டிசைனர் : டி.உதயகுமார் , சவுண்ட் டிசைன் : சிங்க் சினிமா மேக்கப் : சண்முகம், காஸ்ட்யூம் டிசைனர்ஸ்: சோனிகா குரோவர், ஸ்டண்ட் : ஸ்டன்னர் சாம். பி.ஆர்.ஓ. : ’எஸ்-2 மீடியா’ சதிஷ்குமார்.
மூணாறில் கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் மருத்துவக் கல்லூரி ஒன்றில், மூன்று மாணவ—மாணவியர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். படிப்பில் கவனக்குறைவு, மன அழுத்தம் இவற்றால் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என கல்லூரி பிரின்சிபால் நம்புகிறார். ஆனால் சில பேராசிரியர்களோ ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் இது நடக்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்க ‘பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக மும்பையில் இருக்கும் ரூபனை [ ஆதி ]யை வரவைக்கிறார்கள். நம்ம ஊர்களில் ஆங்கில எழுத்துக்களை எழுதி, அதில் ஒரு கட்டையையோ சில்வர் கிண்ணத்தையோ நகர்த்தியபடி பேய்களுடன் பேசுவார்கள். இந்த பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்கள், சயின்ஸ் டெக்னாலஜி துணையுடன் இயற்கையின் சப்தம் மூலம் பேய்களுடன் பேசுபவர்கள்.
கல்லூரி வளாகத்தையும் ஹாஸ்டல் கேம்பஸையும் சுத்திச்சுத்தி வந்து துப்பறிந்தாலும் அந்த அமானுஷ்யத்தை ஆதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்குள்ள மிகப்பெரிய லைப்ரரியில் அவரது காதுக்குள் வினோத சப்தம் கேட்கிறது. அதில் தான் ‘சப்தம்’ படத்தின் மொத்த சப்தநாடியும் அடங்கியிருக்கிறது.

இந்த ‘சப்தத்தை உருவாக்க தனக்கு பேருதவியாக இருந்த சில புத்தகங்களையும் சில வெளிநாடுகளிலும் நடந்த உண்மைச் சம்பவங்களையும் டைட்டில் போடுவதற்கு முன்பு சின்னதாகவும் படம் முடிந்த பின்பு முழுமையாகவும் டீடெய்லாக சொல்ல்விட்டதால், டைரக்டர் அறிவழகனின் நேர்மைக்கு ஒரு ரெட் சல்யூட். தமிழில் ஹாலிவுட் குவாலிட்டிக்கு ஈக்குவலாக அசாத்தியமான உழைப்புக்காக ரொம்ப சத்தமாக இந்த சப்தத்தைப் பாராட்டியே தீரவேண்டும்.
அதே கல்லூரியில் படித்து அங்கேயே டாக்டராக இருக்கும் லட்சுமி மேனனிடமிருந்து ஒரு வினோத சப்தம் வருவதை ஆதி உணரும் இடத்திலிருந்து தான் சப்தத்தின் சத்தம் சூடுபிடிக்கிறது. அதன் பின் நடக்கும் திகில் சம்பவங்களின் காட்சிகளெல்லாம் தமிழ் ரசிகனுக்கு முற்றிலும் புதிய அனுபவம், பிரமிக்க வைக்கும் அனுபவம். சப்தத்தை மிரட்டலான விஷுவலாக காட்டிய அறிவழகனின் சினிமா அறிவாற்றலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அதிலும் குறிப்பாக படத்தின் டைட்டிலை மேட்ச் பண்ணும் கேரக்டர் டயனா [ சிம்ரன் ], அந்த கேரக்டர் மூலம் மேட்ச் பண்ணியவிதம் என மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் அறிவழகன். ஆதியுடன் லட்சுமி மேனன் பயணித்தாலும் பார்வையாளனின் மனசுக்குள் பயணிப்பவர் சிம்ரன் தான். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அவர் எழுதும் இசைக்குறிப்பு தான் சப்தம் படத்தின் மிகமுக்கியமான துருப்புச்சீட்டு. இந்த இசைக்குறிப்பு சீனில் மட்டுமல்ல, எல்லா சீன்களிலும் தமனின் இசை தான் சப்தத்தின் பலத்த சப்போர்ட்
பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி என முற்றிலும் தன்னை வேறுவிதமாக தகவமைத்துக் கொண்டு நன்றாகவே நடித்திருக்கிறார். ஆதியின் சினிமாக்களில் இதுதான் பெஸ்டாக இருக்கும். இந்த சப்தத்தின் சப்தநாடியும் கேமராமேன் அருண்பத்மநாபனும் சவுண்ட் டிசைனர் உதயகுமாரும் ஆர்ட் டைரக்டர் மனோஜ்குமாரும் தான் என்பதை சத்தமாக அடித்துச் சொல்லலாம். ஒலியை வைத்து மிரட்ட களம் இறங்கிய டைரக்டர் அறிவழகனுக்கு ஒளியால் அருண்பத்மநாபனும் கலையால் மனோகுமாரும் கொடுத்திருக்கும் உழைப்பு அசாத்தியம், அற்புதம். அந்த லைப்ரரி செட் இருக்கே, அடேங்கப்பா.. அதே போல் படுஸ்பீடாக ஆதி ஜீப் ஓட்டும் போது ஸ்டியரிங்கையும் கியர் ராடையும் கூட திகிலாக காட்டி திகைக்க வைத்துவிட்டார் அருண்பத்மநாபன். படம் முழுக்கவே உதயகுமாரின் உதவி இருந்தாலும் காதுக்குள் கேட்கு, வவ்வால் சவுண்ட், காபி கப்புக்குள் பிரின்சிபால் போடும் சுகர் கியூப் & ஸ்பூன், இன்ஸ்பெக்டரின் காதுகளையே பஞ்சராக்கும் “ங்ங்ங்கொய்ய்ய்ய்ய்ய்..” சவுண்ட் என சவுண்ட் சீக்வென்ஸ்களில் சாதனை படைத்துவிட்டார் உதயகுமார். இவருக்கு உதவியாக இருந்த சிங்க் சினிமா ஸ்டுடியோவிற்கு சப்த உழைப்புக்குழுவில் சரிபாதி இடம் இருக்கு.
மொத்தத்தில் இந்த ‘சப்தம்’ சூப்பர் சவுண்ட் & விஷுவல் ட்ரீட். ( 50/100 )
–மதுரை மாறன்