‘தண்டேல்’ னா என்ன அர்த்தம்? — விளக்கம் சொன்ன எஸ்.ஆர்.பிரபு!
தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல் ‘ படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
இந்த பிப்ரவரி ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜனவரி 30-ஆம் தேதி இரவு நடந்தது . படத்தின் டிரெய்லரை நம்ம நடிகர் கார்த்தி வெளியிட்டார்.இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ட்ரீம் வாரியர்ஸ் எஸ். ஆர். பிரபு , நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன் , ஆடுகளம் நரேன்,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு கலந்து கொண்டனர்.
‘தண்டேல்’ னா என்ன அர்த்தம்?
நிகழ்ச்சியில் பேசியவர்கள்..தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, ”தண்டேல் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். ‘பாகுபலி’க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன? என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். ‘தண்டேல்’ என்றால் லீடர் என அர்த்தம்.
இப்படத்தை பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல்.. ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளைக் கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த ப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கு தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்”.
இயக்குநர் வெங்கட் பிரபு
“ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.
நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாக தமிழ் பேசக் கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் , காட்சியையும் தமிழிலேயே விளக்கிச் சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய உயரத்தை தொட வேண்டும்”.
இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத்
‘இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும் கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”.
நடிகை சாய் பல்லவி
“இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் கார்த்தி சார் – வெங்கட் பிரபு சார் – கார்த்திக் சுப்புராஜ் சார்- ஆகியோருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி.
தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறோம். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது”.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்
“நான் சென்னையில் தான் படித்தேன். பிழைப்பிற்காகத்தான் ஹைதராபாத் சென்றேன். சென்னை அரசு கலைக் கல்லூரியில் தான் பட்டப் படிப்பினை படித்தேன். அதன் பிறகு சட்டக் கல்லூரியில்
படிக்கத் தொடங்கி இரண்டு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்காமல் வெளியேறி விட்டேன்.
முதலில் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தரமான படைப்பாக ‘தண்டேல்’ உருவாகி இருக்கிறது.
இயக்குநர் சந்து அற்புதமான திறமைசாலி. நேர்த்தியாக உழைத்து தண்டேலை உருவாக்கி இருக்கிறார். கதை சிறியது தான். ஆனால் அதனை அவர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். ஏன்னா அந்த 20 பேரும் பாகிஸ்தான் சிறையில் கைதியாக இருந்து விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதனை இரண்டு மணி நேர கதையாக விவரித்திருக்கிறார். இந்த கதையை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் என் நினைவுக்கு வந்தவர் எஸ். ஆர். பிரபு மட்டும் தான். அவர் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால் மகிழ்ச்சி அடைகிறேன்”.
நடிகர் கார்த்தி
‘இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள்தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம். இதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார்.அவர் வேறு வேறு ஆட்களுடன்… வேறு வேறு கூட்டணியுடன்… தொடர்ந்து படங்களை பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களை தயாரித்திருக்கிறார்.
சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்களை தெலுங்கிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும்.. படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், படத்தை தயாரிக்கத் தொடங்க தொடங்கியதில் இருந்து அந்தப்படத்தை ரசிகர்களுக்காக திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அல்லு அரவிந்த்.
நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஹீரோ நாக சைதன்யா
“ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ‘ மெய்யழகன்’ படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.
அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். சென்னைக்கு செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் என்று’. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.
தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, டைரக்டர் சந்து என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன்.
அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன். அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது.
இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றி க் கொண்டேன். இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாகுளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோருக்கு நன்றி. என்னுடைய மூன்றாவது படமான ‘100% லவ்’ படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்திருக்கிறேன். இந்தப் படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்.
‘தண்டேல்’-ஐஅனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தரவேண்டும்”.
— மதுரை மாறன்.