கவனிப்பாரா அமைச்சர் பொன்முடி?
பல்கலைக்கழக மானியக் குழுவானது நாட்டின் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தவும் தரப்படுத்தவும் பல்வேறு விதிமுறைகளை ஜூலை-2018ல் வெளியிட்டது. அதன்படி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பும்போது கல்வி நிறுவனங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் தொடர்புடைய பாடத்தில் NET/SET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிவாய்ப்பு மட்டுமின்றி ஆராய்ச்சி படிப்புகளில் சேர்க்கை பெறுவது முதல் உதவித்தொகையுடன் உயர்கல்வியை தொடர்வது என பல்வேறு நிலைகளில் NET/SET போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதி அடைவது அவசிய மாகும்.
ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை சார்பாக NET( National Eligibility Test) தேர்வினை தேசியத் தேர்வு முகமை (NTA- National Testing Agency)கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 2019 வரை கல்வியாண்டுக்கு இரு முறை நெட் தேர்வானது நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2020ல் கொரோனா சுகாதார பேரிடர் சூழல் காரணமாக ஜூலை-2020 தேர்வினை பல்வேறு கட்டங்களாக நடத்திய நிலையில், டிசம்பர்- 2020 மற்றும் ஜூன் -2021 ஆகிய இரு நெட் தேர்வுகளை ஒருங்கிணைத்து கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் நடத்தி முடித்த தேசிய தேர்வு முகமை(NTA), பிப்ரவரி 2022ல் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது.
கண்டுகொள்ளாத
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மறுபுறம் மாநில அளவில் அந்தந்த மாநில அரசுகள் சார்பாக மாநில அளவில் தகுதித் தேர்வு (State Level Eligibility Test) நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அளவில் TNSET தேர்வானது 2016, 2017 & 2018 ஆண்டுகளில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு 2019, 2020 & 2021 என கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் TNSET தேர்வு நடத்தப்படவில்லை.
TNSET தேர்வினை மூன்றாண்டுகளுக்கு நடத்தும் பொறுப்பினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ள நிலையில், கடந்த ஜுன் 2021ல் ‘TNSET தேர்வு அறிவிப்பு’ என போலியான அறிவிப்பு ஒன்று இணையதளங்களில் பரவலாக உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வட்டத்தில் பகிரப் பட்டது. ஆனால் போலியான அறிவிப்புக்குப் பிறகும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமோ, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையோ தேர்வு நடத்துவது தொடர்பான முறையான முன்னேற்பாடுகள் மற்றும் உத்தேச அட்டவணை வெளியீடு என எதுவும் வெளியிடவில்லை.
காத்திருக்கும் இளைஞர்கள்…
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் விரிவுரை யாளராகவோ அல்லது உதவிப் பேராசிரியராகவோ பணியாற்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர், ஆய்வுப் படிப்புக்காக செல்பவர்கள் என கிராமப்புறத்தைச் சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி என இரண்டிலும் ஒருசேர தேக்க நிலையே எஞ்சியுள்ளது. மறுபுறம் “கற்றல்-கற்பித்தல்-நிர்வாகம்-தேர்வுகள்” என ஆண்டு முழுவதும் அன்றாட அலுவல்களில் செயல்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இதுபோன்ற தகுதித் தேர்வினை நடத்த முறையான, தேவையான தொழில்நுட்ப வசதிகள் திட்டமிடல் ஏதுமின்றி காலம் கடத்துவது லட்சக்கணக்கான இளைஞர்களை வெகுவாக பாதிக்கிறது.
கவனிப்பாரா அமைச்சர் பொன்முடி?
இந்திய அளவில் உயர்கல்விக்குச் செல்வோர் விகிதத்தில்(GER) முன்னணியில் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அதேபோல உயர்கல்வி பயின்று வேலைவாய்ப்புக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை என்ற இன்னொரு பக்கமும் கவனிக்கப்பட வேண்டியது. உயர்கல்வியில் முன்னிலை வகிக்கும், மாநில சுயாட்சி என்ற அரசியல் முன்னெடுப்பு முனைப்பாக உள்ள தமிழ்நாடு போன்றதொரு மாநிலத்தின் உயர்கல்வித் துறையினாலும் அதன் ஆளுகைக்குட்பட்ட பல்கலைக் கழகத்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக TNSET தேர்வு நடத்த முடியாமல் இருக்கும் அவல நிலையானது நகைமுரண் மட்டுமின்றி உயர்கல்வி பயின்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரத்தில் மிக நேரடியாக பாதிப்பு களை ஏற்படுத்தி வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே TNSET-2021 தேர்வினை விரைவில் நடத்துவதுடன், ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தேர்வினை நடத்துவது தொடர்பாக உறுதியான கொள்கை முடிவு மட்டுமின்றி வெளிப்படையான தேர்வு நடைமுறை, விரைவாக தேர்வு முடிவுகள் வெளியீடு என தொழில்நுட்ப மேம்பாடு குறித்த தொலைநோக்குத் திட்டமிடலையும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேற்கொள்ள வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. கவனிப்பாரா அமைச்சர் பொன்முடி???
– எஸ்.ஆர்