எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்… எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்… ஆனால்…

0

#எங்கே_பயணிக்கிறோம்_கல்விப் #பாதையில்….எனது மகன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக் கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்தி பேசியதுடன், அம்மா, ,(GL)ஒப்பந்தப் பேராசிரியர்கள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர் என்றும் இந்தச் சூழலில் இவர்களுக்கு சம்பளமே இல்லை என்றால் எப்படி பணியில் நீடிப்பார்கள் என்றும் நீண்ட நேரம் பேசியதுடன் பல்கலைக் கழகத்தில் வகுப்புகள் பாடம் நடத்துவது பற்றி என விரிவாகப் பேசி மிகவும் வருந்தினார்.

இதுவரை படிப்பு பற்றியோ பாடம் குறித்தோ கவலைப்படுபவரே அல்ல. குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கூட, கணக்கில் சந்தேகம் கேட்டுப் படிக்கையில், தன் வகுப்பு மாணவர்கள் வீட்டில் சொல்லிக் கொடுக்க யாருமில்லை, இந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை எனில் எப்படி அவர்களால் படிக்க இயலும் , அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து விவாதிப்பான். ஆனால் தனது கல்வி குறித்து ஒரு நாளும் கவலை கொண்டதில்லை. ஆனால் இப்போது இங்குள்ள கல்விச் சூழலை எண்ணி மிக வருந்தியது கண்டு நான் கூடுதலாக கவலை கொண்டேன்.

ரோஸ்மில்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் சிலரிடம் பேசும் போது பள்ளிக் கல்வியின் சூழலும் மனதைத் தைத்தது‌. பேராசிரியர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அரசாங்கம் பள்ளிக் கல்வி உயர்கல்வி இரண்டிலும் பயனாளர்களை இத்தனை வஞ்சிக்கப்படும் சூழலில் வைத்துள்ளதே என வருந்தினேன்.

இந்த சமூகத்தில் ஆளுமைகளாகக் கொண்டாடப்படும் பலரும் அல்லது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக அறியப்படுவர் பலரும் வாய் திறக்க முடியாமல் அல்லது திறக்க விரும்பாமல் இருக்கின்றனரே என்றேன். இன்னொன்றையும் கூறினேன், இலக்கிய விழாக்கள் , புத்தக விழாக்கள் என்று ஏதேதோ ஆரம்பித்து எல்லோரையும் அதில் பேச வைக்கும் வேலையில் ஈடுபடுகிறதே அரசும் கல்வித்துறையும் (நூலகத் துறை) அவர்கள் பேச வழியில்லை போலும் என்றேன். பேராசிரியர் அதற்கு இதேக் கருத்தைத் தான் அவரும் ( படைப்புத் தளத்தில் இயங்கும் மிக முக்கிய நபர்) கூறினார் என மறுமொழி கூறினார்.உங்கள் யாருக்கேனும் இந்தக் கருத்தில் உடன்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

- Advertisement -

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்பு இயக்கத் தோழர் ஒருவர் எனது வஞ்சிக்கப்படும் பொதுக் கல்வி நூல் சில பிரதிகள் கேட்டிருந்தார். அதை மற்றவருக்கு பரிசாக வழங்கவே கேட்டிருந்தார். இன்னும் அவர் அந்த நூலைப் படித்தாரா என்று தெரியவில்லை, ஆனால் அடுத்த நாள் என்னிடம், உண்மை தான் நீங்கள் எழுதுவது உமா, நானும் தான் இயக்கத்தில் பேசுகிறேன் ஆனால் அதிகாரிகள் அரசு இவர்களுடன் இணைந்து இருப்பதாலோ என்னவோ வெளிப்படுத்த மறுக்கின்றனர். நிறைய பிரச்சனைகள் கல்வியில் இருப்பது உண்மை தான், எங்களுக்கும் புரிகிறது என்றார்.

முகநூலில் இயங்கும் ஏராளமான எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். மற்ற எழுத்தாளர்களுக்கும் சமூகக் கடமை இருக்கிறது தான். இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்து எழுதத்தாளர்களாக இருப்பவர்களுக்கு கூடுதல் சமூக அக்கறை இருக்க வேண்டும், இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

4 bismi svs

ஏனெனில் இந்த சமூகம் மேம்படுவதற்காகவும் தான் படைப்புலக மனிதர்கள் (அது எழுத்தாகட்டும், கலைகளாகட்டும் எதுவேண்டுமானாலும்) இருப்பதாக நான் நம்புகிறேன்.எனில் மற்ற காரணிகள் கடந்து, சமூகத்தின் ஆணிவேராக இருக்கும் கல்விச் சூழலை ஏன் கவனப்படுத்த மறுக்கின்றனர்? அல்லது கடந்து போகின்றனர்? அப்படி சிலருடன் பேசும் போது எங்களுக்கு எழுத்துப் பணி அதிகம் இருக்கிறது. உங்களைப்போல் இது குறித்து இயங்கினால் இலக்கிய செயல்பாடு தடைபடும் என்றனர். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் (பள்ளிக் கல்வி/உயர்கல்வி) பயிலுபவர்கள் யார்? இந்த சமூகத்தில் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் தானே. அவர்கள் வாழ்வு மலர்ந்தால் தானே செழிப்பான சமூகம் உருவாகும். அந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குழந்தைகள் , முதல் தலைமுறையாக கல்வி பெறும் மக்களின் குழந்தைகள், ஏழை மக்களின் குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி பெறும் பொதுக் கல்வி நிறுவனங்கள் வஞ்சிக்கப்படுகின்றனவே , இதைக் குறித்து எழுதாமல் பேசாமல் விவாதிக்காமல் இருக்கலாமா? அது நியாயமா ?

நான் இங்கு எழுதுவது பேசுவது அனைத்தும் அனைவருக்குமானதே . நீங்கள் வாழும் ஊர்களில் உள்ள குழந்தைகள், உங்கள் சகோதரர்கள் சகோதரிகள் வீட்டுக் குழந்தைகள், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் வாழும் மக்களின் குழந்தைகள் உங்களை நாயகர்களாக/ நாயகிகளாக ஏற்றுக்கொண்டு வாழும் மக்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தான் அத்தனை அத்தனை புறக்கணிப்பு .

தயை கூர்ந்து அடுத்த முறை நீங்கள் அரசியல் தலைவர்களுடன்/ தமிழ்நாட்டு ஆளுமைகள்/ திரைக்கலைஞர்கள்/ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்/ இவர்கள் அனைவருடனும் படங்கள் எடுக்கும் போதும் , அவர்களை சந்திக்கும் போதும் சமூகத்தின் ஆணிவேரில் அதாவது கல்வியில் சீழ் பிடித்து இருக்கிறது. உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று ஒரு நிமிடம் பேசுங்கள் நண்பர்களே.

நாம் எல்லோரும் சேர்ந்து தான் அந்த அழகிய மரத்தைக் ( தமிழ்நாட்டுக் கல்வி) காப்பாற்ற வேண்டும்.சேர்ந்தால் தான் காப்பாற்ற முடியும்.வருத்தத்தில் பங்கு கொள்ளுங்கள்.

ஆனாலும் நம்பிக்கையுடனே
சு. உமா மகேஸ்வரி
கல்விச் செயற்பாட்டாளர்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.