இந்தியாவில் ஆண்டுக்கு சராசாரியாக ஒரு லட்சம் பேர் பல்வேறு நோக்கங்களுக்காக கடத்தப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளிவிவரங்கள் படி, கடந்த 2018ம் ஆண்டில் 1,05,734 பேர், 2019ம் ஆண்டில் 1,05,036 பேர் கடத்தப்பட்டார்கள். இதில் அதிகம் கடத்தப்படுவது பெண்களே!
கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் 2020ம் ஆண்டில் 84,805 பேர் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் 73,721 பேர் பெண்கள் தான். 18 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் மட்டும் 47,876 பேர். அதில் 12 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் 44,759 பேர். இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் பெண்குழந்தைகள் திருமணத்திற்காக கடத்தப்படுகிறார்கள்.
தலைநகர் டெல்லியில் தான் பெண்குழந்தை கடத்தல் தலைவிரித்தாடுகிறது. கடந்த 2020ம் ஆண்டு அங்கு 18 வயதிற்கு உட்பட்ட 2749 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அடுத்து மும்பை. இங்கு 767 பெண்குழந்தைகள். மூன்றாவது இடத்தில் பெங்களூரு. இங்கு 482 பெண்குழந்தைகள். பூனே, இந்தூர் போன்ற நகரங்களுக்கு இதற்கு அடுத்தடுத்த இடங்கள்.
பெருநகர பெண்குழந்தை கடத்தலுக்கு முக்கிய காரணம் இளமைக் காதல் தான். இதை வேகமாக வளர்க்க நகர்புற கலாச்சாரம், சமூக ஊடகங்கள், செல்போன்கள், மால்கள், கபேக்கள் பக்கபலமாக இருக்கின்றன. இதை பார்க்கும் போது இளம் காதல் ஜோடிகளுக்கு போக்சோ சட்டம் பற்றியெல்லாம் கவலையிருப்பதாக தெரியவில்லை. முதிர்ந்த காதல் படுத்தும்பாடு இதைவிட ரொம்ப அதிகம். இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் 18 முதல் 30 வயது வரையிலான பருவ பெண்கள் 19,094 பேர் கடத்தப்பட்டார்கள்.
இதில் திருமணத்திற்காக கடத்தப்பட்டவர்கள் 11,286 பேர். தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டில் 12 முதல் 18 வயதிற்குட்பட்ட 243 பெண் குழந்தைகளும், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 336 இளம்பெண்களும் கடத்தப்பட்டார்கள். பெரும்பாலும் காதல் கலாட்டாக்கள்தான். காவல் நிலையங்களுக்கு காதலர்கள் தரும் தலை வலி சற்று அதிகம்தான்.
இந்தியாவில் கள்ள உறவிற்கு 471 பெண் குழந்தைகளும், விபச்சாரத்திற்கு 48 குழந்தைகளும், சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள் மற்றும் இதர கடத்தலுக்காக 1171 பெண்குழந்தைகளும் கடந்த 2020ம் ஆண்டு கடத்தப்பட்டு இருக்கிறார்கள்.
பொதுவாக கடத்தப்படும் பெண்களில் சராசரியாக 55 சதவீதம் பேர் மீட்கப்பட்டு விடுகிறார்கள். மீட்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் கட்டிய கணவரோடு வந்தவர்கள்தான். இதில் ஆண்டுக்கு சராசரியாக 100 பெண்கள் பிணமாகவும் மீட்கப்படுகிறார்கள். இந்தியாவில் தமிழக, கேரள பெருநகர பெண் குழந்தைகள் தான் ரொம்ப விவரம். இங்கு கடத்தல் ஏறத்தாழ ஒற்றை இலக்கம் தான். மிசோரமில் ஆண்டுக்கு நாலு பேருதான் கடத்தப்படுகிறார்கள். அதிலும் பெண்கள் இல்லை. லட்சத்தீவில் ஏறத்தாழ எந்த ஆள்கடத்தலும் இல்லை என்றே சொல்லலாம். இந்த புள்ளி விவரங்கள் எல்லாம், பெண்குழந்தை பெற்றவர்கள் வயிற்றில் புளியை கரைக்கத்தான் செய்கிறது.