நீதிமன்றத்தின் கண்டனம் ! சீமானை முதலில் கைது செய்யப்போவது யார் ? போட்டி போடும் அதிகாரிகள் !
நீதிமன்றத்தின் கண்டனம் ! சீமானை முதலில் கைது செய்யப்போவது யார் ? போட்டி போடும் அதிகாரிகள் !
”வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கிணங்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்றாடம் பேசிவரும் பேச்சுக்கள் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன.
மிக சமீபத்தில், சென்னை புத்தகக்காட்சியில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காமல் அவமதித்ததோடு, பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய முறையிலும் இழிவாகவும் பேசியிருந்தார். அதற்கு பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டதற்கும், வழக்கம் போலவே தனது பாணியில் “சர்ச்சைக்காகவே பேசினேன்” என்பதாக எகத்தாளமாக பதிலுரைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜன-08 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம் வடலூரில் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியிருந்தார்.
தந்தை பெரியாரை மட்டுமின்றி, பொதுவில் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையிலும் வக்கிரமான முறையிலும் அமைந்திருந்தது, அந்த விமர்சனம். பெரியான் சொன்னதாக சீமான் குறிப்பிடும் அந்த கருத்து, எந்த நூலில் எந்த பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது? என்பதற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையுடன், சீமானிடம் விளக்கம் கேட்பதற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் அவரது வீட்டிற்கு முன்பாக திரண்டனர்.
சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பரவலான எதிர்ப்புகள் வந்த நிலையில், தமிழகத்தில் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில், சீமான் இல்லம் முன்பாக கூடிய பெரியார் திராவிடர் கழக தோழர்களை தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, மீண்டும் திருவாய் மலர்ந்த நாதக சீமான், ”முதலில் பெரியார் எழுத்துக்களை நாட்டுடமையாக்குங்கள் பிறகு பேசுகிறேன்.” என்பதாக பேசியுமிருந்தார். பெரியாரை தங்கள் வழிகாட்டியாக, சமூக சீர்திருத்தவாதியாக பெரும்பாண்மையானோர் வரித்துக்கொண்டு வாழும் தமிழகத்தில்; குறிப்பாக, மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சிக்கு எதிராக அவர்களது மதவாத அரசியலுக்கு எதிராக சமூகநீதி அரசியலின் அடையாளமாக தமிழகம் பல்வேறு விவகாரங்களில் அரசியல் ரீதியில் எதிர்வினையாற்றி வரும் சூழலில், சீமானின் இந்த சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அவை மிகையில்லை.
”குடிகாரன் பேச்சு, விடிந்தால் பேச்சு” என்ற ரீதியில் இயல்பில் கடந்து போகும் ரகத்தில் அல்லாமல், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பண்பட்ட விதத்தில் பேசும் பேச்சாக அல்லாமல், திட்டமிட்டே தொடர்ந்து சீமான் இவ்வாறு பேசி வருவதும் சமூக பதட்டத்தை ஏற்படுத்தி வருவதும், சீமான் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன்தான் பேசி வருகிறாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மிக முக்கியமாக, தமிழக ஆளுநர் ரவியின் விவகாரங்களோடு, சீமான் நடவடிக்கைகளும் ஒரே நேர்கோட்டு பாதையில் அடுத்தடுத்து அரங்கேறி வருவதும் இந்த சந்தேகம் மேலும் வலுத்திருக்கிறது.
சீமானின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில், மதுரை கே.கே.நகரை சேர்ந்த ரமேஷ் சீமான் மீது புகார் ஒன்றை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்திருந்தார். அவரது புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் ரமேஷ்.
”தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காவும் பாடுபட்ட தந்தை பெரியார் குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பேசியுள்ளார். எனவே, சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்ற கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ” சீமான் பேசிய கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது. எனவே, மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல்துறையினர் மனுதாரரின் புகாரை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 20ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் .” என்பதாக உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக்கிளை.
சீமானுக்கு முன்னதாக, பொதுவில் பெண் போலீசாரை இழிவாக பேசியதான குற்றச்சாட்டில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட சம்பவமும்; தமிழகத்தில் அவருக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் பதிவானதும் குறிப்பிடத்தக்கது. சவுக்கு சங்கரை கடலூர் போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவரை நேர்காணல் செய்து அதன் காணொளியை வெளியிட்ட ரெட்பிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவமும்; சவுக்கு சங்கரை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்த சம்பவமும் அரங்கேறியது.
ஐ.பி.எஸ். அதிகாரியும் தற்போது திருச்சி சரக டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி வருபவருமான வருண்குமாருக்கு எதிராக தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை சீமான் முன்வைத்திருந்தார். நாதகவினர் வருண்குமார் ஐ.பி.எஸ். உள்ளிட்டு அவரது மனைவியும் தற்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யுமான வந்திதாபாண்டே ஆகியோரையும் அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் வகையில், புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிடும் அளவுக்கு இழிவாகவும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். கருத்து மோதல் கருத்து மோதலாக அல்லாமல், அவரது குடும்ப பெண்களை இழிவாக சித்தரிக்கும் நாதகவினர் வக்கிரத்தை சீமான் கண்டிக்கவில்லை. அதை ரகசியமான முறையில் ரசித்தே வந்தார் என்பதாக அப்போதே சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டும் எழுந்தது.
ஆனாலும், அதற்கெல்லாம் சளைக்காமல் ஆஃப்ட்ரால் நீ ஒரு ஐ.பி.எஸ்.தானே என்பதாக எள்ளி நகையாடியிருந்தார், சீமான். சட்டையை கழட்டிவிட்டு வந்து பார் என்று சவாலும் விட்டிருந்தார் சீமான். அவரது வரம்பு மீறிய இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக, வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி நீதிமன்றத்தில் சீமானுக்கு எதிராக தனிப்பட்ட (பிரைவேட்) வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
வருண்குமார் ஐ.பி.எஸ். டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் திருச்சி சரகத்தில் மணப்பாறை காவல் நிலையம், புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையம், கரூர் தாந்தோணிமலை காவல் நிலையம், பெரம்பலூர் காவல் நிலையம், அரியலூர் செந்துறை காவல் நிலையம் ஆகியவற்றில் தலா ஒரு வழக்குகள் வீதம் அடுத்தடுத்து 5 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்த சீமானின் அவதூறு பேச்சுக்கு எதிராக கரூரை சார்ந்த வழக்குரைஞரும் தமிழ் ஆர்வலருமான தமிழ் ராஜேந்திரன் கரூர் தாந்தோணிமலை போலீசில் புகார் அளித்திருந்தார். அவரது புகார் ஏற்க மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 7.11.2024 அன்று சீமான் மீது முதல் தகவல் அறிக்கை எண் 474/2024 வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் , இதுவரையில் அந்த புகார் மீது எந்த ஒரு மேல் நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சீமானின் வரம்பு மீறிய சர்ச்சை பேச்சுக்கு எதிராக பரவலாக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, சீமானின் வீட்டிற்கு முன்பாக போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைவாக, சீமானின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக, நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இப்போது வரையில் 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், எந்த மாவட்ட போலீசார் சீமானை முதலில் கைது செய்து நடவடிக்கையை தொடங்கி வைப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பை தமிழகத்தில் எகிற வைத்திருக்கிறது.
– ஆதிரன்.