அரசு பஸ்களில் அலட்சியம்…. டிரைவர்கள் சலித்துக்கொள்வது ஏன்?
அரசு நிர்வாகத்தை ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு வரும் கோப்புகளில் மட்டும் கையெழுத்து போட்டால் போதும் என்று பல அமைச்சர்கள் ஓய்ந்துவிட்டனர்.
கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று நிதி அமைச்சர் பிடிஆர் தரவுகளோடு கருத்துச் சொன்னதைத் தனிப்பட்ட முறையில் அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்துக்கொண்டு ‘ரேஷன் கடைக்கே போயிராத பண்ணையார்களுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்’ என்று கருத்துச் சொல்லி சலசலப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். இரண்டொரு நாளில் அதற்கும் காட்டமான பதில் கொடுத்து அவரை அடக்க முயற்சிக்கும் வேலைகள் ஆரம்பிக்கக்கூடும். நமக்கும் செய்திகள் வந்து கொட்டுமே தவிர மாற்றம் வருமா வராதா என்று தெரியாது.
போக்குவரத்துத் துறையும் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் சிவசங்கர் அத்துறைக்கு அமைச்சரான பிறகு கடந்த 20 வருடங்களில் படிப்படியாக செய்யப்பட்டிருக்க வேண்டியதை இரண்டே ஆண்டுகளில் செய்து காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. மக்களுடன் இரண்டற கலந்த துறை என்பதால் அன்றாடம் நிறை குறைகள் வந்துகொண்டே இருக்கத் தான் செய்யும். ஆனால் மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகளுடன் சம்பந்தப்பட்ட துறை என்பதால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளவும் இயலாது. பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்று அனுமதி வழங்கப்பட்ட பட்டியலை ஆர்டிஐயில் கேட்டதற்கு அது வியாபார ரகசியம், வெளியில் சொல்ல முடியாது என்று பதில் அனுப்பி சர்ச்சையை உண்டாக்கினார்கள் அதிகாரிகள்.
சில நாட்களுக்கு முன்னர் பயணிகள் புகார் தெரிவிக்க பொது எண் ஒன்றையும், அழைப்பகத்தையும் திறந்து வைத்தார். அதில் அழைத்து ஏதேனும் புகார் சொன்னால் ஐந்தே நிமிடங்களில் புகார் நிவர்த்தி செய்யப்பட்டதாகக் குறுந்தகவல் அனுப்பி முடித்துக் கொள்ளப்படுவதாக அறப்போர் இயக்கத்தினர் ஆதாரத்துடன் விமர்சனத்தை எழுப்பினர். அது உண்மைதானா என்று பரிசோதிக்க கோவையில் ஓடும் நகரப் பேருந்துகளில் கதவுகளை டிரைவர்கள் மூடுவதே இல்லை, அதனால் சிக்னலில் நிற்கும்போது பயணிகள் இறங்கி ஏறுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று புகார் தெரிவித்ததற்கு வண்டி எண்ணுடன் புகார் செய்யுங்கள் என்று சொல்லி விட்டனர்.
மாலை ஒரு பேருந்தினை விமான நிலையம் அருகே புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அழைப்பகத்தில் புகாரைப் பதிவு செய்தேன். அடுத்த 45 நிமிடங்களில் உங்களது புகார் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது என்று குறுந்தகவலை அனுப்பி கணக்கை முடித்துக்கொண்டனர். 45 நிமிடங்களில் அந்தப்பேருந்து விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தையே அடைந்திருக்காது! ஒரு ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை வைத்து ஏவுமளவுக்கு வந்து விட்டோம். ஆனால் பேருந்துகளில் தானியங்கி கதவுகளைக் கட்டயமாக்க முடியவில்லை, டிரைவர்கள் அந்தப் பொத்தானைத் தட்டுவதற்கு அவ்வளவு சலித்துக்கொள்வது ஏன் என்றும் புரியவில்லை.
கிட்டத்தட்ட 90% நகரப் பேருந்துகளில் பிரேக்லைட் எரிவதில்லை. பாதிக்குப் பாதி பேருந்துகளில் டைல் லைட் எரிவதில்லை. பல்பு மாற்றுவதற்குக் கூட நமது பணிமனைகளில் ஸ்டாக் இல்லையா அல்லது எலக்ட்ரீஷியன் இல்லையா என்று தெரியவில்லை. டிக்கெட் பரிசோதகர்களும், டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுகிறார்களா என்பதைக் கண்டு கொள்வதில்லை.
100% இவை தவிர்க்கப்படக்கூடிய உயிரிழப்புகள் முழுக்க முழுக்க டிரைவர்களின் அலட்சியத்தால் ஏற்படுவதே. நாளொன்றுக்கு பல்லாயிரம் மக்கள் பயன்படுத்தக்கூடிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தும்போது பேட்டா வெர்சன், மோக் டிரில் போன்றவற்றைத் துறைக்கு உள்ளேயே முடித்துக்கொண்டு இறுதி வடிவத்தைப் பொது மக்களிடம் கொண்டுவருவது நல்லது. இல்லாவிடில் அரசு சேவை என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற பொதுக் கருத்தாக்கத்திற்கு ஆதாரம் தரும் சம்பிரதாயமாகவே முடித்துவிடும்.
– ஆர்.எஸ்.பிரபு