‘தண்ணியடிக்க’…‘தம்’ அடிக்க… காசு தேவைப்பட்டதால் திருடனாக மாறிய ‘மெக்கானிக்’!
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் கடந்த 22.02.2023 அன்று பூட்டியிருந்த இரண்டு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு வீட்டில 28 சவரன் நகைகளும், மற்றொரு வீட்டில் 3 சவரன் நகையும் என மொத்தம் 31 சவரன் நகைகள் திருடுபோயின.
இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் நகர தெற்கு காவல் நிலைய போலீஸார் தனித்தனியே இரு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அக்குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 20 வயதே ஆன ‘பூனைக்கண்’ வினோத் என்ற கொள்ளையனை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் மார்ச் 30-ம் தேதி அதிகாலை மடக்கிப் பிடித்து களவாடப்பட்ட 31 சவரன் நகைளையும் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
20 வயதே ஆன வினோத் கொள்ளையனானது எப்படி?
இவனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவைச் சேர்ந்த லிங்கவாடி. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது பெற்றோருக்கு இவன் ஒரே பிள்ளை.
இவனது அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.
“எட்டாவது படிக்கும்போதே இவனுக்கு ‘தம்’ அடிக்கும் பழக்கமும் ‘தண்ணி’ அடிக்கும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது. படிப்பும் வரவில்லை. அதனால் பத்தாவது படிக்கும்போது இடையிலேயே படிப்பை நிறுத்திவிட்டான்.
இந்நிலையில், பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் சென்னையில் புறநகர் பகுதியில் உள்ள ஒரு டூ வீலர் மெக்கானிக் ஷாப்-பில் கொஞ்ச காலம் வேலை பார்த்துள்ளான்.
அப்போது, ‘தண்ணி’ அடிக்கவும்’ ‘தம்’ அடிக்கவும் காசு தேவைப்பட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு தொழில் ஈடுபட்டு வந்துள்ளான். அப்போது போலீஸாரிடம் மாட்டிக் கொண்ட வினோத் கொஞ்ச காலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்துள்ளான்,” என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சம்வத்தன்று அதன் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒரு நபரின் உருவப் படத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி அந்நபரைப் பற்றிய விபரங்களை சேகரித்தனர்.
அதன் விளைவாக, அந் நபரின் பெயர் ‘பூனைக்கண்’ வினோத் என்பது தெரிய வந்தது. மேலும் அவன் மீது தஞ்சை நகர தெற்கு காவல் நிலையத்தில் உள்ள இரண்டு வழக்குகள் தவிர சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, ‘பூனைக்கண்’ வினோத்-தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அத் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பூனைக்கண் வினோத் மீண்டும் தஞ்சாவூரில் தனது கைவரிசையை காட்டுவதற்காக வந்து, மார்ச் 30-ம் தேதி காலை 4 மணியளவில் தஞ்சாவூர் அண்ணா நகர் பகுதியில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
இதுபற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் அங்கே விரைந்து சென்று அவனை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, அவன் வசமிருந்த சில நகைகளை போலீஸார் கைப்பற்றி அவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் திருடிய நகைகளை அவன் மதுரையில் மறைத்து வைத்திருப்பது அவ்விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவனை மதுரைக்கு அழைத்துச் சென்று அந்நகைகளை மீட்டனர்.