Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஒரு இனத்தின், அதன் பண்பாட்டின் அடையாளம் நூலகம் ஏன் தெரியுமா ? மதுரைக்கு வாங்க !
திருவிழாக்களால் நிறைந்த ஊர் மதுரை. எங்கேனும், ஏதேனும் ஒரு விழா ஆண்டு முழுக்க நடந்து கொண்டேயிருக்கும். மொத்த நகரமும் மனிதர்களின் கொண்டாட்டத்தால் நிரம்பி வழியும் மாபெரும் சித்திரை திருவிழாவிலிருந்து, சின்னச்சின்ன கோவில்களில் நடக்கும் விழாக்கள் வரை இங்கு விழாக்களுக்குப் பஞ்சமில்லை.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழ்நாட்டின் எந்த ஊரில் தங்கள் கால்தடத்தைப் பதிய வைக்க வேண்டுமென விரும்புகிறார்களோ இல்லையோ, மதுரையில் தங்களது இருப்பைப் பதிவு செய்து கொண்டே இருப்பார்கள். தேர்தல்களில் மதுரையின் மனநிலையே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மனநிலையைப் பிரதிபலிக்கும் என்கிற பல்லாண்டு கால நம்பிக்கை இன்னமும் பொய்த்துப் போகாமல்தான் இருக்கிறது.
போலவேதான் சினிமாக்களும். மதுரையில் ஓடாத படம், வேறெங்கும் ஓடுவதில்லை என்பது பெரும்பாலான சினிமாக்காரர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று. ஒவ்வொரு நடிகரின் திரைப்பட வெளியீடும் மதுரையைப் பொறுத்தவரை ஒரு மினி திருவிழாதான்.
சமயம் சார்ந்த திருவிழாக்கள் மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு, பொங்கல் விழாக்கள் போன்ற பண்பாட்டுத் திருவிழாக்கள், இலக்கியம் சார்ந்த புத்தக வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள் என்று இன்னொரு பக்கம் ஏதாவதொரு நிகழ்வு மதுரையில் நடந்து கொண்டேதான் இருக்கும்.
மடீட்சியா அரங்கில் அவ்வப்போது நடக்கும் தொழிற்துறை சார்ந்த கண்காட்சிகள் தொழில் முனைவோருக்கான திருவிழா என்றே சொல்லலாம். கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட பிறகு மதுரையின் இன்னொரு அடையாளமாக அது மாறியிருக்கிறது. வருடம் முழுக்க, தமிழ்நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் நண்பர்கள் யாராவதொருவர் கீழடியைப் பார்வையிட வந்துகொண்டே இருக்கிறார்கள். மதுரையை நோக்கி மக்களைக் கவர்ந்திழுக்கும் இன்னொரு அம்சமாக அது மாறியிருக்கிறது.
இதில் என்னைப் பொறுத்தவரை எனக்கு மிக விருப்பமான ஒன்று, செப்டம்பர் இறுதியில் தமுக்கத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாதான். புத்தகங்களோடும், எழுத்தாளர்களோடும், நண்பர்களோடும் புழங்கும் அந்தப் பத்து நாட்கள் மனதுக்கு நெருக்கமானவை. மதுரையிலேயே வசித்தாலும் பணி நிமித்தம் தினசரி சந்தித்துக் கொள்ள வாய்ப்பில்லாத நூற்றுக்கணக்கான நண்பர்களை, புத்தக வாசிப்பாளர்களை அந்தப் பத்து நாட்களில் சந்தித்து அளவளாவ வாய்ப்பிருக்கும்.
இப்போது மதுரையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் மணிமகுடத்தில் இன்னொரு வைரமாக ஜொலிக்கவிருக்கிறது. நேற்று 16.07.2023 முதல் நாளிலேயே ஏகப்பட்ட நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. கிட்டத்தட்ட புத்தகத் திருவிழா நேரத்து பத்து நாள் கொண்டாட்ட மனநிலையை இனி வருடம் முழுவதற்குமான ஒன்றாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்கிற எண்ணமே இனிப்பாக இருக்கிறது.
மேலும், முதல் நாளிலேயே என்னிடமில்லாத எத்தனையோ புத்தகங்கள் நூலகத்தில் என் கண்ணுக்குத் தெரிந்தது. சின்ன வயதில் நூலகத்தில் செய்தது போல, அத்தனையையும் நான் அடுத்து போகும்போது படிப்பதற்காக ஒளித்து வைத்துவிட்டு வர வேண்டிய அவசியமில்லாமல் ஒவ்வொன்றிலும் மூன்று பிரதிகள் வைத்திருக்கிறார்கள். என் ஆயுள் முழுக்க படித்தாலும் தீராத புத்தகங்கள் அங்கே நிறைந்து கிடக்கின்றன.
நூலகத்தில் எனக்குப் பிடித்தமான அம்சம், நமது சொந்தப் புத்தகங்களைக் கொண்டு போய்ப் படித்துத் திரும்ப மிகப்பெரிய ஏசி அறை ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காலை எட்டு முதல் இரவு எட்டு மணி வரை தற்போது செயல்படும் நூலகம் விரைவில் இரவு 10, 12 மணி வரை செயல்படக் கூடுமென்றார் நூலகர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.
வீட்டிலிருந்து புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு போய், டீக்கடைகளின் நின்று படித்துவிட்டு வரும் எனக்கெல்லாம் இது ஒரு வரம்.
தீவிர வாசிப்பு கொண்ட நிறைய பேருக்கு இது ஒரு இரண்டாம் வீடாக மாறப்போகிறது என்பது உறுதி.
ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். இரு சக்கர வாகன பார்க்கிங்கில் கண்டபடி வாகனத்தை நிறுத்துவதிலிருந்து, எஸ்கலேட்டர்களில் குழந்தைகளை இஷ்டத்துக்கு விளையாட விடுவது, நாற்காலிகள், மேசைகளை அழுக்காக்குவது என நம் மக்கள் கொஞ்சம் ஓவராகத்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்ட் கேலரியோ, அறிவிப்பு பலகையோ அதைத் தொடாமல் பார்க்க வேண்டுமென்ற அறிவு இன்னமும் பலருக்கு வரவில்லை.
புதிதாகத் திருமணம் முடித்திருக்கும் ஒரு ஜோடி கிட்டத்தட்ட தங்களது ஹனிமூன் ஃபோட்டோ செஷனையே நூலகத்தில் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களும் சும்மா இல்லை. ஆயிரக்கணக்கான செல்ஃபிக்கள் மின்னியபடியே இருந்தன. மதுரையில் வேறு போக்கிடமில்லாத சில இளங்காதலர்களையும் பார்க்க முடிந்தது.
ஆனால், ஆரம்பகட்ட “சுற்றுலா” மனநிலை வடிந்த பிறகு, நூலகத்தின் உண்மையான பயனாளர்களுக்கு இந்த நூலகம் ஒரு சொர்க்கமாக இருக்கும் என்பது உறுதி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கென்றே ஒரு தளம் இருப்பதால் மாநகராட்சி வளாகத்திலேயே குடியிருக்கும் பலர் இனி இங்கு இடம் மாறலாம்.
அறிவித்தபடி உடனடியாக வேலைகளைத் துவங்கி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைக் கட்டி முடித்து, துவக்கியும் வைத்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சார்ந்தோருக்கும் மனம் நிறைந்த நன்றி. இனி, மதுரை மக்கள் செய்ய வேண்டியது…
இந்த மாபெரும் நூலகம் இந்நகரின் விலைமதிப்பில்லாத சொத்து. அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பயன்படுத்துவதும், அடுத்த தலைமுறைக்கு இந்நூலகத்தை அறிமுகப்படுத்தி, வாசிப்பை ஊக்கப்படுத்துவதுமேயாகும். ஏனென்றால்… நூலகம் என்பது நூலகம் மட்டுமல்ல, அது ஒரு இனத்தின், அதன் பண்பாட்டின் அடையாளம்.