வெல்லும் தமிழ் பெண்கள் அவர்களால் வெல்லும் தமிழ்நாடு !
12.12.2025 வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை நடத்திய “வெல்லும் தமிழ் பெண்கள்” நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரசின் சுகாதாரத் திட்டங்களான
“மக்களைத் தேடி மருத்துவம்”
“நலம் காக்கும் ஸ்டாலின்”
“புற்று நோய் கண்டறிதல் திட்டம்” ஆகியவற்றின் மூலம் பெண்கள் அடையும் பயன் குறித்தும், அந்தத் திட்டங்களின் நோக்கம் மற்றும் பலன் குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நேரு உள்விளையாட்டரங்கம் அங்கே அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மகளிர் முன் உரையாற்றுதல் என்பது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது.
நம் பெண்கள், எப்போதும் தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லர். வீட்டை விட்டு வெளியே வந்து சிகிச்சை மேற்கொள்ள அதிகம் யோசிப்பார்கள். பிள்ளைகளின் படிப்பு கணவனுக்கு உணவு சமைத்தல் பெற்றோர் , இன் லாஸை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு போகணும் என்று பல காரணங்கள் கூறுவர்.
இப்படி இருக்க.. இவர்களுக்கு தொற்றா நோய்களுக்கான சிகிச்சையை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் திட்டமாக மக்களைத் தேடி மருத்துவம் செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயனடைபவர்கள் எண்ணிக்கை 2 கோடியே ஐம்பது லட்சம் அதில் மெஜாரிட்டி 56% பேர் பெண்கள். எனவே, “மக்களைத் தேடி மருத்துவம்” என்பதை “மாதரைத் தேடி மருத்துவம்” என்றும் சொல்லலாம்.
சளி காய்ச்சல் சுகர் பிபிக்கு கூட மருத்துவமனை வர யோசிக்கும் பெண்கள். எக்கோ ஸ்கேன், அனாமலி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகியவற்றுக்கும் கார்டியாலஜிஸ்ட் பார்க்க நியூராலஜிஸ்ட் பார்க்க பக்கத்து ஊருக்கு போங்கனு சொன்னா போவார்களா?
அதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் மருத்துவ வசதிகள் ஊடுறுவாத நிலையில் இருக்கும் விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகள் பழங்குடியினர் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் 1256 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இங்கே மருத்துவக் கல்லூரியில் பார்க்கக் கூடிய ஸ்பெசலிஸ்ட், சூப்பர் ஸ்பெசலிஸ்ட், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் , அனாமலி ஸ்கேன் ஆகியவை உடனடியாக எடுக்கப்பட்டு சிகிச்சை கிடைக்கிறது.
இதுவரை பயன்பெற்ற 9½ லட்சம் பேரில் 60% மெஜாரிட்டி பெண்கள் தான்.
இதில் இருந்து நமக்குத் தெரிவது யாதெனில் நம் மகளிருக்கு சுகாதாரம் சார்ந்த தேவை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை அடைவதற்கான சவால்கள் நிறைய இருந்தன. அவற்றைக் களையும் போது மகளிரிடம் அந்தத் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. இவ்வாறு எனது உரை அமைந்தது.
நேற்று நடந்த நிகழ்வில் சாதனை படைத்த பெண்களின் கதைகள், அனுபவங்கள் ஒவ்வொன்றாக மூன்றரை மணிநேரங்கள் கண்டும் கேட்டும் மனம் நெகிழ்ந்தும் பூரிப்படைந்தும் கண் கலங்கியும் வாய்விட்டுச் சிரித்தும் என பல உணர்வுகளின் தொகுப்பாக நேற்றைய தினம் அமைந்தது.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற சகோதரி செல்வி. துளசிமதி முருகேசன் அவர்களின் உரை நெகிழ்ச்சி மிக்கதாகவும் ஊக்கம் மிகுந்ததாகவும் இருந்தது.

சுதந்திரப் போராட்ட தியாகியும் காந்தியவாதியும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக தொடர்ந்து போராடும் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் அவர்களின் உரையும் போற்றுதலுக்குரியதாக அமைந்தது.
விழா தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் விழாவில் சாதித்த மகளிரின் உரைகள் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாகக் கூறியதில் சிறிதும் ஒப்பனையோ மிகையுமில்லை.
ஒரு மருத்துவராக அரசு சுகாதாரத் துறை மக்களுக்கு குறிப்பாக மகளிருக்குச் செய்யும் சேவைகள் குறித்து எடுத்துக் கூறும் எனது கடமையைச் செய்தேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வெல்லும் தமிழ் பெண்கள் அவர்களால் வெல்லும் தமிழ்நாடு
Dr.அ.ப. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.