குளிர் கால அலர்ட் ! நாம் அவசியம் கவனிக்க வேண்டியது….
குளிர் கால அலர்ட்!
குளிர் காலங்களில் வயது முதிர்ந்தோரிலும் மத்திய வயதினரில் நீரிழிவு ரத்தக் கொதிப்பு போன்ற இணைநோய்கள் இருப்பவர்களுக்கும் அதிகமான அளவில் “முகவாதம்” ஏற்படுவதைக் காண முடிகிறது.
எதனால் ஏற்படுகிறது?
முகவாதம் என்பது முகத்தில் உள்ள தசை களுக்கு உணர்வூட்டும் “முக நரம்பில்” உள் காயம் ஏற்படுவது , வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் ஏற்படக்கூடும்.
ஏற்படும் பாதிப்புகள்
இதன் விளைவாக பாதிக்கப்பட்டவருக்கு வாயைக் குவிக்க முடியாது. உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது. வாய் வழி எச்சில் வடியும். சரியாக பேச இயலாமல் குளறும். வயது முதிர்ந்தோர் முதல் இளையோர் வரை முகவாதம் வராமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் .“
தவிர்க்கும் வழிகள்
தரையில் பாய் , தலையணை, ஜம்காளம், கம்பளம், விரிப்பு போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மகிழுந்து , பேருந்து , ரயில் பயணங்களில் செல்லும் போது அதிக நேரம் குளிர்ந்த வாடைக் காற்று காதுகள் மற்றும் கண்ணப்பகுதியில்படுமாறு செல்வது – முகவாதத்தை ஏற்படுத்தக் கூடும்.
வீட்டிலும் கூட உறங்கும் போது நேரடியாக ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று – முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்ப்பது நல்லது. ஏசி உபயோகிப்பவர்களும் குளிர் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு படுப்பது நல்லது. மிகக் கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து லேசான தலையணை உபயோகிப்பது நல்லது.
குணமாகும் காலம்
பொதுவாக இது போன்ற குளிர் சீதோஷ்ண நிலை மற்றும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை ஆகும். முக நரம்பு உள்காயம் அடைந்து வீக்கம் அடைந்து இருக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
கடைபிடிக்க வேண்டியவை :
உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும், வைரஸ் தொற்றுக்கு எதிரான வைரஸ் கொல்லி மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். எவ்வளவு விரைவாக சிகிச்சை எடுக்கிறோமோ அவ்வளவு நல்லது. இத்துடன் மருத்துவப் பரிந்துரைப் படி இயன்முறை சிகிச்சை ( ஃபிசியோதெரபி) எடுக்க வேண்டும்.
கண்கள் திறந்தே இருப்பதால், வரண்டுவிடாமல் இருக்க சொட்டு மருந்து / களிம்பு போன்றவற்றை பாவிக்க வேண்டும். கண்களுக்கு பகல் நேரத்தில் கண்ணாடியும் இரவு நேரத்தில் கண்களை மூடும் கவசமும் அணிந்து கொள்ளலாம்.
எளிதாக மென்று விழுங்கக் கூடிய அளவில் சிறிய சிறிய கவளங்களாக உணவை உட்கொள்ள வேண்டும். உண்ணும் உணவு முழு திரவமும் இல்லாமல் முழு திட உணவாகவும் இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. வாய் வறண்டு இருக்கும் என்பதால் உணவில் வெண்ணெய் போன்றவற்றை வழ வழப்புக்காக கலப்பது பலன் தரும்.
உணவை நீண்ட நேரம் எடுத்து மெதுவாக சாப்பிட வேண்டும். உணவு உண்ணும் போதும் நீர் பருகும் போதும் எந்த கவனச் சிதறலும் இல்லாமல் முழுக் கவனமும் உணவில் நீரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீரை பாட்டிலில் பருகுவதை தவிர்த்து விட்டு சிறிய கோப்பையில் பருகுவது நல்லது.
வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் உடன் பிசியோதெரபி அவசியம் . மனதைத் தளர விடாமல் மருத்துவ முறைகளை சரி வரக் கடை பிடித்தால் போதும். நல்ல முன்னேற்றம் சில வாரங்களில் கிடைக்கும்.
– டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர், சிவகங்கை.