‘மதிமாறன்’. படம் எப்படி இருக்கு ! ..குள்ளன்னு சொன்னா மூஞ்சில ஓங்கி குத்துடா !
அங்குசம் பார்வையில் ‘மதிமாறன்’. படம் எப்படி இருக்கு ! ..
தயாரிப்பு: ஜி.எஸ்.சினிமா இண்டர்நேஷனல். ரிலீஸ்: பாப்பின்ஸ் ஸ்டுடியோஸ். டைரக்டர்: மந்த்ரா வீரபாண்டியன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்சன் கோவிந்த், பிரவீன் குமார். இசை: கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: பர்வேஸ், எடிட்டிங்: சதீஷ் சூர்யா, ஆர்ட் டைரக்டர்: மாயப்பாண்டி. பிஆர்ஓ: யுவராஜ்
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் போஸ்ட் மேனாக இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. பெண் குழந்தைக்கு மதி (இவானா), ஆண் குழந்தைக்கு நெடுமாறன் ( வெங்கட் செங்குட்டுவன்) என பெயரிட்டு பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார். சராசரி உயரத்துடன் மதி வளர்கிறார்.
ஆனால் நெடுமாறனோ குள்ளமாக இருக்கிறார். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். இந்த உருவம் குறைவு என்ற தாழ்வு மனப்பான்மை மகனுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் மீது அதீத அக்கறையும் பாசமும் வைக்கிறார் அப்பா பாஸ்கர். வாழ்க்கையில் எந்த சோதனை வந்தாலும் இருவரும் பிரியவே கூடாது என்று அடிக்கடி சொல்லி வளர்க்கிறார்.
அவர் சொன்னது போலவே அக்கா மீது தம்பியும் தம்பி மீது அக்காவும் பாசம் செலுத்தி வளர்கிறார்கள். பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் உன்னை குள்ளன்னு சொன்னா மூஞ்சில ஓங்கி குத்துடா என்கிறாள் அக்கா. பள்ளிப் படிப்பு முடிந்ததும் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேரும் நிலை. கல்லூரியில் படிக்கும் போதும் இந்த குள்ளன் அவமானம் தொடரும் போது தோள் தொட்டு ஆதரவாக நிற்கிறார், நெடுமாறனுடன் படிக்கும் ஆராத்யா.
இந்த ஆதரவு காதலாகவும் மாறுகிறது. திடீரென ஒரு நாள் ‘ஐ ஆம் சாரி நெடுமாறன்’ என்று எழுதி வைத்துவிட்டு கல்லூரி பேராசிரியரின் காதல் வலையில் விழுந்து வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார் மதி. இந்த அவமானம் தாங்காமல் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கில் தொங்கி இறந்துவிடுகின்றனர். அனாதையாக நிற்கும் நெடுமாறன், அக்காவைத் தேடி சென்னை வருகிறார்.
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் தனது கல்லூரிக் கால காதலி ஆராத்யாவின் உதவியுடன் அக்காவின் அட்ரெஸ் தேடி அங்கே போகிறார் நெடுமாறன். அதன் பின்னர் நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் இந்த ‘ மதிமாறன் ‘. உருவத்தில் தான் குறைவே தவிர, நடிப்பில் மிகவும் உயர்ந்து நிற்கிறார் நெடுமாறன் (எ) வெங்கட் செங்குட்டுவன்.இவரின் கேரக்டருக்கு நெடுமாறன் என பெயர் வைத்ததற்காகவே இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் தலைநிமிர்ந்து நிற்க தகுதியானவர் தான்.
எம்.எஸ்.பாஸ்கர் என்றாலே மிகச் சிறந்த நடிகர் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக வளர்க்க பாருங்கள் என டாக்டர் சொல்லும் போது, ” அதெப்படி டாக்டர், ரெண்டு கண்ல ஒண்ணு மாறு கண்ணுன்னா, அத புடுங்கியா எறிவோம். எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணு தான் ஒண்ணாத்தான் வளர்ப்பேன்” என நெல்லை மொழியில் சொல்லும் போது நம்மை உலுக்கி எடுத்தது போல் இருக்கு பாஸ்கரின் நடிப்பு. இதான் இவானா என சபாஷ் போடலாம்.
இவானா மீது வெங்கட் செங்குட்டுவனுக்கு இருக்கும் கோபமும் ஆத்திரமும் பார்வையாளனுக்கும் ஏற்படுவது தான் அந்த கேரக்டரின் வெற்றி. குள்ள உருவ தன்னம்பிக்கைக்காக அதீத கற்பனை, மனதை கசக்கிப் பிழியும் சென்டிமென்ட் சீன்களை வைக்காமல், தனது மதிநுட்டத்தால், கொலைக் கேஸில் போலீசுக்கு வெங்கட் செங்குட்டுவன் உதவி செய்யும் நம்பும்படியான சீன்களை வைத்து ஆச்சரியப்படுத்திவிட்டார் டைரக்டர்.
அதேபோல் பாலாவின் சிஷ்யன் என்பதை க்ளைமாக்ஸில் நச்சுன்னு அழுத்தமாக பதிவு செய்துவிட்டார் மந்த்ரா வீரபாண்டியன். என்ன ஒண்ணு கம்யூனிஸ்ட்கள் கடவுளைக் கும்பிடுவது குறித்து விளக்கம் சொன்னது தான் நமக்கு விளங்கல. கார்த்திக் ராஜாவின் இசை தான் மதிமாறனுக்கு மாபெரும் சப்போர்ட். அதிலும் பாடல் வரிகள் காதுக்குள் நுழைந்து இதயத்திற்குள் இதமாக இறங்கி கிறங்க வைக்கிறது. வெங்கட் செங்குட்டுவன் காதலியாக வரும் ஆராத்யாவும் அசத்திவிட்டார்.
போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன், அவரது மகன் இன்ஸ்பெக்டர் சுதர்சன், இவானா கணவன் என மொத்தமே எட்டு கேரக்டர்கள் தான். இதை வைத்து ஸ்கிரீன் மேஜிக்கை செமத்தியாக செய்து அசத்தியிருக்கிறார் மந்த்ரா வீரபாண்டியன்.
– மதுரை மாறன்.