தவறான சிகிச்சையால் பெண் மரணம் ! தேனியில் போலி மருத்துவர் அதிரடி கைது !
தவறான சிகிச்சையால் பெண் மரணம் ! தேனியில் போலி மருத்துவர் அதிரடி கைது ! தேனி மாவட்டம் நாகலாபுரம் அருகே மதுமதி மூலிகை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கை, கால் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மூலிகைகள் மூலம் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார் போலி மருத்துவர் ராமசாமி. இவர் தேனி மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மூலிகை சிகிச்சை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் சிவக்குமார் தனது மனைவி ராஜேஸ்வரியை சிகிச்சைக்காக மூலிகை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜேஸ்வரியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அவரை அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
தனது மனைவிக்கு தவறான சிகிச்சையும் முறையற்ற மருத்துவம் பார்த்த காரணமாக உயிரிழந்ததாக தேனி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபுவிடம் சிவக்குமார் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் இணை இயக்குனர் ரமேஷ் பாபு தலைமையில் மருத்துவர் குழுவினர் ராமசாமியின் மருத்துவ சான்றிதழ்களை சரி பார்த்த பொழுது அவை அனைத்தும் போலியாக தயார் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராமசாமி போலி மருத்துவர் என்பதை உறுதி செய்து தேனி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு பழனிசெட்டிபட்டி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராமசாமியை கைது செய்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் அவர் நடத்தி வந்த மதுமதி மூலிகை சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு சிகிச்சையில் இருந்த நபர்களுக்கு வேறு மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அந்த மையத்திற்கு வருவாய்த் துறையினர் மூலம் சீல் வைத்தனர்.
பல ஆண்டுகளாக மூலிகை சிகிச்சை மருத்துவமனை நடத்தி வந்த ராமசாமி போலி மருத்துவர் என்பது தெரிய வந்த நிலையில் தேனி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ஸ்ரீராம்.