வொர்க் ஃபர்ஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்
கடந்த வருடம் இதே நேரம் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன. அதில், தஞ்சை மாவட்ட தேர்தல் பணிக்காக கே.என்.நேரு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மத்திய மண்டலத்திலுள்ள தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கிட்டத்தட்ட 30 பேர் தஞ்சை மாவட்ட தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுமளவிற்கு களத்தில் இறங்கி மெர்சல் காட்டினார் கே.என்.நேரு.
அதன் உச்சக்கட்டமாக, தஞ்சை தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்பட்டியில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களிடையே கே.என்.நேரு தெலுங்கு பேசி ஓட்டுக் கேட்க, ‘அண்ணன்கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!..’ன்னு உடன்பிறப்புகள் நெக்குருகிப் போனார்கள். அந்தவகையில், தேர்தல் என்று வந்தால் தெருவில் இறங்கி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களப்பணியாற்றுபவர் நேரு என்பது தலைவருக்கும், தளபதிக்கும் நன்றாகத் தெரியும்.
அப்படி தஞ்சை இடைத்தேர்தலுக்காக 7,8 ஆகிய தேதிகளில் துரைமுருகன் பங்கேற்ற பொதுக்கூட்டங்கள் தஞ்சை தொகுதியின் வல்லம் மற்றும் கீழவாசல் பகுதிகளில் நடந்தது. அப்படி 2015 நவம்பர் 8-ம் தேதி கீழவாசல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன் நேருவுக்கு ஒரு குட்டிக்கதை சொல்ல, பொதுக்கூட்டமே குலுங்கி குலுங்கி சிரித்தது.
வழக்கமான அ.தி.மு.க அட்டாக் மற்றும் தன்னுடைய நக்கல் நய்யாண்டியுடன் பேச்சை ஆரம்பித்த துரைமுருகன். “இந்த தஞ்சை இடைத்தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு முக்கியக் காரணம் நேரு. அவர் ஒரு சகலகலா வல்லவர். நாளைய தினம் (நவம்பர் 9) அவருக்கு பிறந்தநாள். அவருக்கு எனது வாழ்த்துக்கள். ‘நான் இன்னைக்கு வீட்டுக்கு போறேன்னு’ நேரு சொல்லுவார்ன்னு பாத்தேன். ஆனா, அவர் தஞ்சாவூர்லயே தங்குறதா சொன்னார். ஆனா, அவருக்கு நான் இந்த நேரத்துல ஒரு விஷயத்தை சொல்லுறேன்.
புதுக்கோட்டையில ஒரு இடைத்தேர்தல். அதுக்கு நான் தான் இன்சார்ஜ். அப்போது கந்தர்வகோட்டையில நடந்த ஒரு கூட்டத்துக்கு கலைஞர் பேச வந்திருந்தார். நான் அவர்கிட்ட போய், ‘அண்ணே, நான் வந்து 22 நாள் ஆச்சு. ஒரே ஒருநாள் சென்னைக்கு போய்ட்டு வந்துடறேன்னு சொன்னேன்.’ எதுக்குய்யான்னு கேட்டார். ‘நாளைக்கு எனக்கு 25-வது திருமண நாள் விழா. வீட்டுல என்னை எதிர்பார்ப்பாங்கன்னு’ சொன்னேன்.
அப்போ கலைஞர் சொன்னார், ‘25-வது வருஷம் வெள்ளி விழா. நீ போறேன்னு சொல்றது ஞாயம் தான். ஆனா, அதுக்கு முன்னாடி நான் ஒரு கதை சொல்றேன்’னு சொன்னவர், “எனக்கு கல்யாணம் சிதம்பரத்துல ஆச்சி. பர்ஸ்நைட் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. நான் திருவாரூர்ல இருந்து ரொம்ப சந்தோஷமா போனேன்.
சிதம்பரம் ரயில்வே ஸ்டேசன்ல இறங்குறப்ப போலீஸ்காரங்க என்னை நிறுத்தி, ‘உங்களுக்கு சிதம்பரத்துக்கு உள்ள வர தடை உத்தரவு போட்டுறுக்கோம்’ன்னு சொன்னாங்க. பர்ஸ்ட்நைட்டே பார்க்காம திருவாரூர்க்கு வந்தேன்” என சொல்லிட்டு, “நீ என்னடான்னா 25 வருஷத்துக்கு அப்புறம் போறேங்குறியே போய் வேலையை பாருய்யா!”ன்னு எனக்கு லீவ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்.
இதையே தான் நேருக்கும் சொல்றேன், ‘மத்த வேலையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். முதல்ல தேர்தல் வேலையை பார்ப்போம்’ என சொல்ல நேரு உட்பட ஒட்டுமொத்த பொதுக்கூட்டமே குலுங்கி குலுங்கி சிரித்தது.
-ந.கிருஷ்வின்