உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பில் சேர அருமையான வாய்ப்பு !
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பில் சேர அருமையான வாய்ப்பு !
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முதுநிலை பட்டப்படிப்பு (M.A. Tamil); ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு (Five-Year Integrated P.G. M.A. Tamil) ஆகியவற்றில் சேர காலநீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மிகக்குறைவான இடங்களே காலியாக இருப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகள் பூர்த்தியாவதை பொறுத்து இந்த கால நீட்டிப்பு அமையும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னையில் 1968 ஆண்டு சனவரித் திங்களில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவிப்பிற்கிணங்க 1970 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
இந்நிறுவனத்தில், தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம் மற்றும் அயல்நாட்டுத் தமிழர் புலம் ஆகிய புலங்களில் உயரிய பேராசிரியர்களைக் கொண்டு நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக் கழக ஏற்புடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய ஆய்வு நூலகம்; இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி; பட்டியல்/ பழங்குடி இனத்தவர் / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை; முதுகலைத் தமிழ் (15 மாணவர்கள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தெரிவின் அடிப்படையில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு சிறப்பு உதவித்தொகை மாதந்தோறும் ரூ.2000/-; பட்டப்படிப்புடன் கூடுதலாக பட்டயம் மற்றும் சான்றிதம் படிப்புகள் படிக்கும் வசதி; ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மற்றும் பல்கலைக்கழக நல்கைக் குழுவால் வழங்கப்படும் தேசிய தகுதித்தேர்வு/மாநிலத் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி (NET/SET/CSIR/ICHR) உள்ளிட்ட மாணவர் நலன் சார்ந்த உள் கட்டமைப்பு வசதிகளுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கல்விக் கட்டணத்தைப் பொறுத்தவரையில், மற்ற கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் மிகக்குறைந்த அளவே கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
பள்ளிக் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10, +12 கல்விப் படிநிலைகளில் தேர்ச்சிப் பெற்றும்; மொழிப் பாடமாகத் தமிழ் மொழியை பயின்ற மாணவர்களும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு (Five-Year Integrated P.G. M.A. Tamil) படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள். மேலும், இப்பட்டப்படிப்புப் பயிலும் மாணவர்கள் மூன்றாண்டு இறுதியில் விருப்பத்தின் அடிப்படையில் இளங்கலைப் பட்டத்துடன் வெளியேறலாம் என்ற விருப்ப வாய்ப்பையும் வழங்குகிறார்கள்.
உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக் கழக நல்கைக்குழு விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+12+3 கல்விப் படிநிலைகளில் தேர்ச்சிப் பெற்று; இளங்கலை/இளமறிவியல் படிப்புகளில் மொழிப்பாடமாகத் தமிழ் மொழியைப் பயின்ற மாணவர்கள் தமிழ் முதுநிலை படிப்புக்கு தகுதியுடையவர்கள்.
இளநிலைப் படிப்பில் ஐந்தாம் பருவத்தில் தேர்ச்சி பெற்று, ஆறாம் பருவ முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஒட்டு மொத்த தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் அளித்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும். நுழைவுத் தேர்வின் தகுதி அடிப்படையிலும் தமிழக அரசு அறிவித்துள்ள இனவாரிச் சுழற்சி அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இளநிலை படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி துறையிலுள்ள இடங்களைப் பொறுத்து மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
பொதுப்பிரிவினருக்கு ரூ.500.00, ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கு ரூ.250.00, மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.100.00 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயித்திருக்கிறார்கள்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழி பட்டம் பயில விரும்புவோர் https://www.tamiluniversity.ac.in/ என்ற இணையதள முகவரியில் உரிய விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாகப் பெற விரும்புவோர், “Registrar, Tamil University, Thanjavur” எனும் பெயரில் உரிய விண்ணப்பக் கட்டணத்தை வங்கி வரைவோலையாகப் பெற்று ரூ50.00க்கான அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரியிட்ட உறை இணைத்து “பதிவாளர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்- 613010.” என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் அல்லது அஞ்சல் வழியாகப் பெறப் பெற்ற அசல் விண்ணப்பத்துடன் சான்றொப்பமிடப்பட்ட நகல்களான கல்வித் தகுதிச் சான்றிதழ், மாற்றுத் சான்றிழதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் ஏதேனும் தேவையிருப்பின் அவற்றின் ஒளிப்பட நகலைச் சொந்தக் கையொப்பம் இட்டு இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113.” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
வலைதள முகவரி: https://www.ulakaththamizh.in/
மின்னஞ்சல் முகவரி: iitstaramani@gmail.com
தொலைபேசி எண்கள்: 044 – 22542992, 22542781.