சம்பளத்தை நினைக்காதீர்கள் ‘யோலோ’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி!
செப்டம்பர் 12-ஆம் தேதி ரிலீசாகிறது ‘யோலோ’ என்ற படம். எம்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ் பேனரில் மகேஷ் செல்வராஜ் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.சாம் இயக்கியுள்ளார். புதுமுகம் தேவ் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ’ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி’ தயாரிப்பாளர் மறைந்த டில்லிபாபுவின் தங்கை மகன். ஹீரோயினாக தெலுங்கு நடிகை தேவிகா, மற்ற கேரக்டர்களில் ‘படவா’ கோபி, புதுமுகங்கள் ஆகாஷ் பிரேம்குமார், பிரவீன், வி.ஜே.நிக்கி, திவாகர், தீபிகா, சுவாதி நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘யோலோ’வின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆகஸ்ட். 29—ஆம் தேதி மதியம் நடந்தது. இயக்குனர் அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குனராக சாம் இருந்ததால் அவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதே போல் தயாரிப்பாளர் டில்லிபாபுவின் அலுவலம் ஆர்.கே.செல்வமணி வீட்டின் கீழ்தளத்தில் செயல்பட்டதாலும் ஹீரோ தேவ்வை சின்ன வயதிலிருந்தே தெரியும் என்பதாலும் அவரும் விழாவுக்கு வந்திருந்தார்.
மூன்று பிரலங்களும் வந்ததற்கு நன்றி சொன்னார் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ்.
ஹீரோ தேவ் பேசும் போது
“நான் ஹீரோவானதைப் பார்க்க எனது அம்மா-அப்பா இல்லை. என்னை மகனாக வளர்த்த மாமா டில்லிபாபுவும் இல்லை” என்பதைச் சொல்லி கண் கலங்கினார்.
ஹீரோயின் தேவிகா,
“தமிழில் எனக்கு இது முதல் படம். தெலுங்கில் சமுத்திரக்கனி சாருடன் நடித்ததைப் பார்த்து இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கார் டைரக்டர் சாம் சார்”
படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவருமே தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி சொன்னார்கள்.
இயக்குனர் எஸ்.சாம்,
“இப்போது வரை எனக்கு ஆதரவாக இருப்பவர்கள் அமீர் அண்ணனும் கனி அண்ணனும் தான். இந்தப் பட வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் சாருக்கும் இதில் நடித்த கலைஞர்கள், பணியாற்றிய டெக்னீஷியன்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி”.

ஆர்.கே.செல்வமணி,
“முதல் பட டைரக்டர்கள் சம்பளத்தைப் பற்றி நினைக்கவே கூடாது. முதல் படம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்தடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கலாம். தயாரிப்பாளர் உங்களை நம்பி ஒரு கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் அதுதான் உங்க சம்பளம்னு நினைச்சுக்கணும்”
அமீர்,
“என்னிடமும் கனியிடமும் வேலை செய்திருந்தாலும் இருவரின் பாணியிலிருந்து விலகி இந்தப் படத்தை எடுத்திருக்கான் சாம். படத்தில் நடித்த புதுமுகங்கள் அத்தனை பேரின் பேச்சிலும் நம்பிக்கையும் உற்சாகமும் தெரிந்தது. இதுவே உங்களை வெற்றியடைச் செய்யும்”.
சமுத்திரக்கனி,
“இது சாம் படமல்ல, எனது படம். எனக்கும் சாமுக்கும் அமீர் அண்ணன் தான் எல்லாமே. இந்த மேடை கூட சாமுக்கு லேட்டாகத் தான் கிடைத்திருக்கு. படத்தில் உண்மையும் உணர்வும் இருக்கு. கண்டிபா ஜெயிக்கும்”.
— மதுரை மாறன்