திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் போட்டி போட ஒவ்வொரு கட்சி யிலிருந்தும் ஏராளமானோர் விருப்பமனு அளிப்பார்கள். பொதுவாக தமிழக அரசியல் களத்தில், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சியே பெருமளவில் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் தற்போது திமுக ஆட்சி என்ப தால் அக்கட்சியை சார்ந்த ஏராள மானோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் போட்டியிட கட்சியினரிடையே போட்டா போட்டி அதிகரித்தது. இவர்களில் உறையூர் பகுதிச் செயலாளர் இளங்கோவின் மனைவி?க்கும், வார்டு திமுக பிரதிநிதி பங்கஜம் மதிவாணனுக்கும் இடையே தான் தீவிர போட்டி இருந்தது.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு, ‘இந்த வார்டை யாருக்கு ஒதுக்குவது..? என்ற குழப்பத்தில் இருந்துள்ளார். “பகுதி செயலாளர் இளங்கோ பொண்டாட்டிக்கே சீட் கொடுங்கப்பா..” என அமைச்சர் நேரு கூற 8வது வார்டு சேர்ந்த நிர்வாகி ஒருவர் அமைச்சரிடம், “அண்ணே…. அவங்களுக்கு சீட் கொடுத்தா தோத்து ருவாங்க ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்ணே” என கிளப்பிவிட்டுள்ளார்.
“என்னடா இது.. என எரிச்சலான அமைச்சர், “ரெண்டு பேத்தையும் வரச் சொல்லு..” என கூப்பிட்டு தனியறையில் ஆலோசித்துள்ளார்.
ம்ஹீம்… ரெண்டு பேருமே மசியாமல் கடைசி வரைக்கும் வெறப்பாவே நிற்க.. எரிச்சலான அமைச்சர், வழக்கமாக அவருக்கே உரிய ‘சுந்தரத்’தமிழில் எல்லாரையும் வசைபாடிவிட்டு இறுதியாக,
“யப்பா… யாருக்கு சீட்டுனு உங்க வார்டுல இருக்கிற கட்சி நிர்வாகிங்க சேர்ந்து முடிவு பண்ணி சொல்லுங்க யாருக்கு அதிகமா ஆதரவு இருக்கோ அவங்களுக்கு தான் சீட்டு.. என்ன சரியா” எனக் கூறிவிட்டு வாக்கெடுப்பு பணியை திமுக நகரச் செயலாளர் அன்பழகனிடம் ஒப்படைத்துவிட்டார்.
இதையடுத்து 8வது வார்டைச் சேர்ந்த 24 கட்சி பிரதிநிதிகளையும் கட்சி அலுவலகத்திற்கு அழைத்தார் அன்பழகன். அதில் 21 பேர் மட்டுமே ஆஜர். “இளங்கோ மனைவிக்கு சீட் தரலாம்னு சொல்றவங்க கை தூக்குங்கப்பா.. என அன்பழகன் கூற ஒரு சிலர் கைதூக்கி உள்ளனர்.
அடுத்து, பங்கஜத்துக்கு சீட் தரலாம்னு சொல்றவங்க கை தூக்குங்கப்பா எனக் கூற பெருவாரி யானவர்கள் கை தூக்கியுள்ளனர். தொடர்ந்து, வராத மூவரையும் செல்போனில் அழைத்து, “உங்க ஆதரவு யாருக்குனு சொல்லுங்க” என கேட்டுள்ளார். இறுதியில் 24 பேர்களில் 22 பேர் பங்கஜத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 8வது வார்டு திமுக வேட்பாளராக பங்கஜம் மதிவாணன் பெயர் அறிவிக்கப்பட்டது. “முடிஞ்சிதா…. கிளம்புங்க…. பங்கஜம்… சீட்டு வாங்கிட்ட…. ஜெயிக்கிற வழிய பாரு…
இளங்கோ… நான் ஒன்னும் பண்ண முடியாது… வட்டத்துல யாருக்கு சொன்னாங்களோ அவங்களுக்கு தான் சீட்டு கொடுத்தேன்.. வேட்பாளர் ஜெயிக்க வைக்க வேண்டியது ஒன்னோடு பொறுப்பு போ.. போய் எலக்சன் வேலைய பாரு..” என வழக்கம் போல் அழகுதமிழில் பேசி அனைவரையும் அனுப்பிவிட்டு, ‘அப்பாடா’.. என பெருமூச்சு விட்டுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. சீட்டு பெரும் பந்தயத்தில் வெற்றி பெற்ற பங்கஜம் மதிவாணன், தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயம் நினைவிடத்தில் இருந்து தொடங்கி வார்டில் வலம் வருகிறார்.