அடைத்து வைக்கப்பட்ட இளம் பெண்! டிஜிபிக்கு பறந்த புகார்…
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அய்யலுசாமி ஜெயராமன், இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது, சாத்தூரில் வசித்து வருகிறார், முன்னதாக இவர் ராணுவத்தில் பணியாற்றிய போது, ஒரு மகனும் வைஷ்ணவி (25) என்கிற ஒரு மகளும் காஷ்மீர் மாநிலத்திலேயே பிறந்து வளர்ந்து பள்ளி கல்லூரி படிப்புகளை தற்போது வரை அங்கேயே தொடர்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் திடீரென வைஷ்ணவி நடவடிக்கை பிடிக்காததால் அவரது தந்தை அய்யலுசாமி ஜெயராமன், படிப்பை பாதியிலேயே நிறுத்தும்படி கூறி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், வாங்கி வைஷ்ணவியை அவரது மகனையும் சொந்த ஊரான சாத்தூருக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக வைஷ்ணவியை வீட்டுக்காவலில் வைத்து வெளியே அனுப்பாமல் சித்திரவதை செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வைஷ்ணவி காவல்துறை இயக்குனர் டிஜிபிக்கு மற்றும் சட்ட பணிக்குழு தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய கடிதத்தில் நான் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக எனது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு என்னுடைய பெற்றோரால் வீட்டிலேயே அடைக்கப்பட்டு என்னுடைய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு என்னை மிகவும் சித்திரவதை செய்து வருகின்றனர்.
இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு மிகக் குழப்பத்தில் இருந்து வருகிறேன், உடனடியாக என்னை பாதுகாத்து மீட்க வேண்டுமென புகார் அனுப்பியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவலர்கள் விசாரணைக்கு சென்றபோது, வீட்டிலிருந்து வெளியே வந்த வைஷ்ணவி அவரது தந்தை மற்றும் தாய், அண்ணன், ஆகியோர், விசாரணை மேற்கொள்ள வந்த அதிகாரி முன்னிலையிலேயே மகளை மிரட்டியும் என் மகள் ஏதும் மின்னஞ்சல் அனுப்பவில்லை எனவும்,
எங்களுக்கு தமிழ் தெரியாது ஹிந்தி தெரிந்த நபர்களை அழைத்து வந்து விசாரணை செய்யுங்கள் என தமிழ் மொழியிலேயே தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விசாரணைக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் அருகில் உள்ள வீடுகளில் இந்த பிரச்சனை தொடர்பாக முறையான விசாரணை செய்த போது, கடந்த ஒரு மாத காலமாக வைஷ்ணவியை அவரது குடும்பத்தினர் வெளிய அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் இது தொடர்பாக சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்