கஞ்சா போதையில் இளைஞர்கள் – கண்டுகொள்ளாத காவல்துறை ! பொதுமக்கள் சாலைமறியல் வீடியோ !
கஞ்சா போதையில் இளைஞர்கள் – கண்டுகொள்ளாத காவல்துறை ! சாலை மறியலில் பொதுமக்கள் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கஞ்சா போதையில் சில இளைஞர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அத்துமீறி தகராறில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் கஞ்சா பயன்படுத்திவிட்டு தகராறில் ஈடுபடும் இளைஞர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், கீரம்பூர் கிராம பொதுமக்கள் இன்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த துறையூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .அதற்கு பொதுமக்கள் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறி மறியலைக் கைவிட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ லிங்
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் வனஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தாரிடம் இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறும்போது வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் போது கஞ்சா போதையில் இளைஞர்கள் தகாத வார்த்தைகளில் பேசி வம்பு செய்வதாகவும் ,இளம் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் ,கூறினார்.
மேலும் கீரம்பூரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாகவும், கீரம்பூரிலிருந்துதான் மற்ற ஊர்களுக்கு சப்ளை நடப்பதாகவும், இது பற்றி துறையூர் போலீசாருக்கு நன்றாக விபரங்கள் தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் இது நாள் வரை இல்லை எனவும், காவல்துறை கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக துறையூரில் இருந்து பச்சைமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-ஜோஸ்