தமிழக அரசியல்வாதிகளுக்கு வில்லனான சிறப்பு நீதிமன்றம்
பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் எம்.பி- கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டபோது, சாதாரணமாகவே அனைவரும் பார்த்தனர். தொடங்கப்பட்டு 4 மாதங்களே ஆகின்றன. ஆனால், தொடக்கம் முதலே இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதிரடிதான் என்பது ஸ்பெஷல்.
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், இந்த நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முதல் குற்றவாளி. கடந்த டிசம்பர் 28-ம் தேதி வழங்கிய தீர்ப்பு இது. கேரளத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராஜ்குமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இரண்டாவது அதிரடியாகத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இந்த நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் தண்டனைக்குள்ளாகி எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 10 நாள்களுக்குள் இந்த நீதிமன்றம் வழங்கிய இரு அதிரடிகளால் தமிழக அரசியல்வாதிகள் கதி கலங்கியுள்ளனர்.
ஏனென்றால் , நாட்டிலேயே அதிகளவில் தவறிழைக்கும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகத்துக்கு மூன்றாமிடம். (992 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும் 331 வழக்குகளுடன் ஒடிஷா இரண்டாவது இடத்திலும் உள்ளன) தமிழகத்தில் முன்னாள் இந்நாள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மீது 321 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 129 வழக்குகள் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மீதும் தற்போது பதவியில் உள்ள 15 எம்.பி-க்கள், 122 எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குகள் உள்ளன. 47 முன்னாள் எம்.பி-க்கள் மீதும் வழக்குகள் உள்ளன. இதில் 105 வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் தடையாணை பிறப்பித்துள்ளன.
தி.மு.க-வைச் சேர்ந்த கே.என். நேருவுக்கு சிறப்பு நீதிமன்றத்தால் கொஞ்சம் சிக்கல்தான். இவர் மீது அதிகபட்சமாக 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏதாவது ஒன்றில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டால்கூட நேருவின் அரசியல் வாழ்க்கை பாதித்து விடும். கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் இந்தச் சிறப்பு நீதிமன்றம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வெறும் 4 மாதங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் தவறிழைக்கும் அரசியல்வாதிகளுக்குச் சிம்மசொப்பனமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நீதிமன்றம் அமைக்கப்பட முட்டுக்கட்டை இருந்தது. சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காமல் தவிர்க்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்த பின்னரே கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கத் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மாடி உத்தரவு பிறப்பித்தார். இனிமேல், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மீதான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்படும்.
அதிகாரம் காரணமாக அக்கிரமங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்களின் சாட்டையடி தொடர வேண்டுமென்பதெ மக்களின் அவா!
-விகடன்