2 சீட், 50 லட்சம்: வைகோ டார்கெட்

0

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 3) கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மதிமுகவின் தேர்தல் நிதி மற்றும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியே அதிகம் ஆலோசிக்கப்பட்டதாக தாயக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனவரி 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக அணியில் மதிமுக இடம்பெற்றிருப்பதாகவும் வருகிற தேர்தல் 2004 தேர்தலைப் போல திமுக அணிக்கு முழு வெற்றியாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் மதிமுகவின் 50 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
“வருகிற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி பல்வேறு மாசெக்கள் பேசினார்கள். நிறைவாக பேசிய வைகோ, ‘நாம் திமுக அணியில் இருக்கிறோம். நம்மை கௌரவமாக சுயமரியாதையாக நடத்துகிறார்கள். இனி நாம் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியே நாம் தேர்தல் நிதி இவ்வளவு வரையறை செய்யவில்லை.

 

குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்வோம். சில மாவட்டங்கள் ஏற்கனவே கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. இனி அனைத்து மாவட்டங்களும் கொடுக்க ஆரம்பிச்சிடுங்க. நமக்கு வசதி வாய்ப்புள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, தூத்துக்குடி மாவட்டங்கள் இந்த டார்கெட்டுக்கு அதிகமாகவும் கொடுக்கலாம்.
அப்புறம் பூத் கமிட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் வலிமையாக அமைக்கணும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் அமைக்கும் பூத் கமிட்டிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு நமக்கு பெரிய அளவில் உதவும்.
அதனால் அனைவரும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டுங்கள்’ என பேசினார்” என்கிறார்கள்.

வருகிற தேர்தலில் எத்தனை இடங்களில் மதிமுக போட்டியிடும் என்பது பற்றி பேசப்பட்டதா என்று கேட்டோம்.
“தலைவர் இதப் பத்தி உறுதியாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் பல மாசெக்கள் அண்ணாச்சி இந்த தேர்தலில் நீங்க போட்டியிடனும்னு வலியுறுத்தினாங்க. அதுக்கு தலைவர், நமக்கு ரெண்டு சீட் கிடைக்கலாம்னு நினைக்கிறேன். அதுல யார் யார் போட்டியிடலாம்னு முடிவு பண்ணிக்கலாம்னு சொன்னாரு” என்றனர்.

ஆக இப்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது. அதில் வைகோ திருச்சியில் போட்டியிடலாம் என்கிற பேச்சு கேட்க முடிந்தது. அதற்கு முன்னோட்டம் தான் ஜனவரி 12ம் தேதி ஸ்ரீரங்கத்தில் வைகோ தமிழ் இலக்கிய கூட்டம் பிரமாண்டமாக தயார் ஆகிறது. !

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.