திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா – தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குனர் கே.விஜயகுமார் ஐபிஎஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல், இணை முதல்வர் பா.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் முதுநிலை பாதுகாப்பு ஆலோசகர், மத்திய ஆயுதக்காவல் படையின் தற்போதைய தலைமை இயக்குனருமான கே.விஜயகுமார் ஐபிஎஸ் அவருகளும் முதன்மை விருந்தினராக சென்னை அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் முன்னாள் துணை இயக்குனரும், தேசிய கைப்பந்தாட்டு வீரருமான தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஏ.சந்திரசேகரன் அவர்களும் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிச் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்த தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குனர், கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலமுடன் பணித்திட்டம் மற்றும் அனைத்து துறைகள் என 572 மாணவர்களின், 26 அணிகள் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தேசிய மாணவர் படை மாணவர்களால் நடத்தப்பட்ட போர் ஒத்திகை என்கிற சிறப்பு நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. மாணவர்களுக்கானத் தடகளப் போட்டிகளும் பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான அதிர்ஷ்ட சக்கரப் போட்டியும் விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. விருந்தினர்கள் தடகள மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பதக்கங்களை அணிவித்து தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.
பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி இயக்குனர் பிரேம் எட்வின், பேராசிரியர்கள் ரெனில், ஆரோக்கிய ராஜசேகர், விமல் ஜெரால்டு, உள்ளிட்டோர் பரிசு பெற்ற மாணவர்களின் பெயர்களை வாசிக்க அருள்தந்தையர்களும், விருந்தினர்களும் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
பணிமுறை ஒன்று மாணவர்களுக்கான தனி நபர் சாம்பியன்ஸ் பட்டத்தை மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கிய மாணவர் வேதாச்சலம் மற்றும் வணிகவியல் துறை மாணவர் தீபன் ராஜ் ஆகியோரும், பணிமுறை இரண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாம் ஆண்டு பிபிஏ மாணவர் பிரபாகரன் ஆகியோருக்கும், 26 அணிகள் பங்கேற்ற அணிவகுப்பில் பணிமுறை ஒன்று மற்றும் பணிமுறை இரண்டு ஆகிய இரண்டிலும் முதலிடம் பெற்று ரூபாய் 10 ஆயிரம் பரிசை தட்டிச் சென்ற கணிதவியல் துறை மாணவர்களுக்கும், இரண்டாம் இடத்தை தாவரவியல் துறை அணி (படிமுறை ஒன்று) மற்றும் வணிகவியல் மேதைமை துறையுடன் இணைந்த அணிகளுக்கும் (பணிமுறை இரண்டு) விருந்தினர்கள் அருள்தந்தையர்கள் கோப்பைகளை வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
55 புள்ளிகளை பெற்ற பொருளியல் துறை புள்ளிகளின் அடிப்படையில் பணி முறை ஒன்று மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டதை வென்றது. பணி முறை இரண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஸ் பட்டத்தை 49 புள்ளிகள் பெற்ற பிபிஏ துறை கைப்பற்றியது. மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழாய்வுத்துறை கைப்பற்றியது.
நிறைவாக விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை ராஜசேகர் நன்றியுரையாற்றினார். தேசிய கீதத்துடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
– ஆதன்