2 கி.மீ. நடந்தே சென்று நீரோடைகளில் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ளது மூக்கனேரி. மிகப் பழமையான இந்த ஏரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், மூக்கனேரிக்கு தண்ணீர் வரும் நீர்வழி பாதைகள் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக மழைநீர் வரும் கால்வாய்களில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது . இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன் திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள், தூர்வாரும் பகுதி முழுவதும் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து கால்வாய் அருகே வசிக்கும் விவசாயிகளை அழைத்து பணி சிறப்பாக நடக்கிறதா ஏதும் குறை உள்ளதா உங்களது நிலத்தில் ஏதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டு உண்மை நிலையை அறிந்தனர். அப்போது விவசாயிகள் தூர்வாரும் பணி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பருவமழை பெய்யும் போது முக்கனேரிக்கு விரைவாக தண்ணீர் சென்று சேரும் இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் கால்வாய் சீரமைக்கவும் தூர்வார உதவி செய்ததற்கு நன்றி என தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
-சோழன் தேவ்