அமித்ஷா – நட்டா சந்திப்பு “பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் வேண்டும்” இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி
அமித்ஷா – நட்டா சந்திப்பு “பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் வேண்டும்” இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை, 26.04.2023ஆம் நாள் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கியத் தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின் ஒளிப்படங்களில் அமித்ஷா கால்மேல் கால் போட்டுக்கொண்டு அதிகாரமாக அமர்ந்திருக்க, எடப்பாடி குழுவினர் பவ்யமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
அதிமுகவுக்கு அதிர்ச்சி
27.04.2023ஆம் நாள் காலை ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒளிப்படங்களில் அமித்ஷாவும் அதிமுகவினர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மாலை ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒளிப்படங்களில் மற்றும் வீடியோவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்திப்பில் இடம்பெற்றிருந்தார். இது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் டெல்லி செல்லும்போது எடப்பாடி, அண்ணாமலை குறித்த கேள்வியென்றுக்கு,“அண்ணாமலை செய்தியில் வரவேண்டும் என்பதற்காகப் பேசுகிறார். அரசியல் அனுபவம் இல்லாத அவரைப் பற்றி என்னிடம் எதையும் கேட்கவேண்டாம். கூட்டணி குறித்துப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைவர் நட்டா இவர்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் யாரும் கூட்டணியை முடிவு செய்யமுடியாது” என்று அழுத்தம் திருத்தமாக அண்ணாமலையைத் தாக்கிப் பதில் அளித்தார்.
சந்திப்பு முடிந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி,“அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. பாஜகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். அதற்கு ஒரு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்றுதான் அண்ணாமலை குறித்து எந்தக் கேள்வியும் கேட்கவேண்டாம் என்று கூறினேன்” என்று ஜகா வாங்கினார். மேலும்,“பாஜக கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் இடங்களைப் பற்றி பின்னர் முடிவு செய்வோம்” என்று கூறினார்.
எடப்பாடி கோரிக்கை
சந்திப்பின்போது அமித்ஷாவிடம் எடப்பாடி முன்வைத்த மிகமுக்கியமான கோரிக்கை என்னவெனில், பன்னீர்செல்வத்துடன் பாஜக எந்த வகையிலும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதே. அதைக் கேட்ட அமித்ஷா,“அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குச் சரிபாதி இடமான 20 இடங்கள் தரப்படவேண்டும்” என்று கண்டிப்பான குரலில் கூறியுள்ளார். இதற்குப் பதில் அளித்த எடப்பாடி,“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட 5 இடங்களைக் கொடுத்துவிடுகிறோம். கூடுதலாக ஒன்றிரண்டு இடங்கள் வேண்டுமானால் கொடுக்கிறோம்” என்ற எடப்பாடியின் பதில் கேட்டு அமித்ஷாவின் முகம் இறுகிப்போய்விட்டது. பாஜக தலைவர் நட்டா,“ இவ்வளவு குறைவான தொகுதியில் போட்டியிட்டால் எங்களை நம்பியிருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் எப்படித் தொகுதிகளைப் பிரித்துத் தரமுடியும். 20 தொகுதிகளைத் தரவேண்டும்” என்பதை வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி,“கூட்டணிக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. உங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்” என்று சந்திப்பை முடித்துக்கொண்டு எடப்பாடி கிளம்பிவிட்டார்.
பாஜக திட்டம்
பாஜக வட்டாரங்களை அணுகி ஜே.பி.நட்டா கூறிய கூட்டணி கட்சிகள் குறித்துக் கேட்டோம். “அதிமுகவை விரும்பாத பாஜகவோடு கூட்டணியிலிருக்க விரும்பும் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயகக் கட்சி பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர்தான். அதிமுக கொடுக்கும் பாண்டிச்சேரி உட்பட 20 இடங்களில் பாஜக 12 இடங்களில் போட்டியிடுவது என்றும் எஞ்சிய 8 தொகுதிகளில் அதிமுக பன்னீர்,டிடிவி தினகரன்,சசிகலா ஆகியோருக்கு 5 இடங்களும், மீதியுள்ள 3 இடங்கள் கிருஷ்ணசாமி (தென்காசி), பாரிவேந்தர் (கள்ளக்குறிச்சி) ஏ.சி.சண்முகம் (வேலூர்) ஆகியோருக்கு வழங்கும் திட்டம் உள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி நிலை
இந்த உடன்பாட்டுக்கு எடப்பாடி ஒத்துக்கொள்வாரா? அல்லது பாஜகவை விலக்கி அதிமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகளை இணைத்துக்கொண்டு மெகா கூட்டணியை ஏற்படுத்துமா? அல்லது அதிமுக தனித்துப்போட்டியிடுமா? என்ற இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி இருக்கிறார். “பாஜகவோடு கூட்டணி என்றால் தோல்வி உறுதி. விலகினால் தன்மானத்தோடு தோற்கலாம். அடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மரியாதையான இடங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என்ற மனநிலையில் அதிமுக முன்னணி தலைவர்கள் உள்ளனர். எடப்பாடியின் இறுதி முடிவுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. முடிவுக்குக் காத்திருப்போம்.
-ஆதவன்
மேலும் செய்திகள் படிக்க:
https://angusam.com/vijay-vishal-meeting-1/
அங்குசம் யூடியூப்
https://youtube.com/@AngusamSeithi