
24 x 7 முறையில் இயங்கும் மதுரை விமானநிலையம் – செய்ய வேண்டியது என்ன ? தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் !
மதுரை விமான நிலையத்தை 24 x 7 முறையில் இயங்கும் விமான நிலையமாக விரைவில் செயல்பட மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு செய்ய விருப்பதாகத் தெரிய வருகிறது.
இண்டிகோ ஏர் சர்வீஸ் நிறுவனம் மதுரை-மலேசியா-மதுரைக்கு நேரடி விமான சேவையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது – தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வரவேற்பு. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் மதுரை தலைவர் டாக்டர் ஜெகதீசன் இது குறித்து பேசிய போது….
1962-ம் ஆண்டு துவங்கப்பெற்ற மதுரை விமான நிலையம், படிப்படியாக நிலை உயர்ந்து, 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பெற்று, 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை துவங்கப்பட்டது. மதுரையிலிருந்து ஸ்ரீலங்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளுக்கு மட்டும் நம் நாட்டு விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவையை அளித்து வருகின்றன.
மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக (International Airport) நிலை உயர்த்தப்படாமல், சுங்க விமான நிலையமாக (Customs Airport) மட்டுமே செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் தற்போது மூன்று சர்வதேச விமான சேவைகள் மட்டுமே இருந்தாலும் கூட, அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது.
கோயம்புத்தூர், விஜயவாடா, ஷர்தி. கண்ணூர் மற்றும் திருப்பதி விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாண்டு வந்தாலும் சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக எண்ணிக்கையில் சர்வதேச பயணிகள் போக்குவரத்து கொண்ட மதுரை விமான நிலையம் இன்னும் சுங்க விமான நிலையமாக மட்டுமே உள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் நீடித்து வரும் கால தாமதம் விமான நிலையத்தின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துவதோடு, தென் தமிழகத்தின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகுந்த தடையாக உள்ளதுமதுரை விமான நிலையம் 24 x 7 இயங்கும் விமான நிலையமாக செயல்பட வேண்டுமென தமிழ்நாடுதொழில் வர்த்தக சங்கம் கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய சிவில் மற்றும் விமானப் போக்குவரத்து
அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் பலனாக, தற்போது, ஓய்வு பெற்ற முன்னாள்
இராணுவ வீரர்களை Passengers Service Assistant ஆக மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்தி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்களுடன் இணைந்து விமான நிலையம் 24 x 7 முறையில் செயல்பட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவிருப்பதாகத் தெரிய வருகிறது.
தென் தமிழகத்தின் தொழில் வணிகத் துறை சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இதனை வெகுவாசு வரவேற்கிறது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்து, இண்டிகோ ஏர் சர்வீஸ் நிறுவனம் மதுரை-மலேசியா-மதுரை விமான வழித்தடத்தில் நேரடி விமான சேவையை உடனடியாக துவங்கத் திட்டமிடுவதால், தென் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தூண்டுகோலாக உள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக மதுரை வருகின்றனர்.
மதுரையில் பல சிறப்பு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை பெற தென் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் எளிதில் மதுரைக்கு வந்து பயன் பெற முடியும்.
ஹோட்டல் தொழிலும் இப்பகுதிகளில் நல்ல வளர்ச்சி காண முடியும், வேளாண் விளைபொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதால், விவசாயிகள் பயன்பெறுவதோடு, ஏற்றுமதியும், அதிகரித்து நம் நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணியும் கிடைக்க ஏதுவாகும்பிற நாடுகளுடனான விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையம் ஒரு பாயின்ட் ஆப் கால் (Point of Call) ஆக சேர்க்கப்பட வேண்டும்.
சர்வதேச விமானப் பயணத்திற்கு தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக கருதப்படும் மதுரை விமான நிலையம் பிற நாடுகளுடன் நம் நாடு மேற்கொண்டுள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், குவைத், மற்றும் இதர ஐக்கிய அரபு நாடுகளுடனான ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையம் உடனடியாக சேர்க்கப்பட்டு, மதுரைக்கு நேரடியாக விமான சேவையைத் துவங்கத் தயாராக இருக்கும் பன்னாட்டு விமான சேவை நிறுவனங்கள் அச்சேவையைத் துவங்கிட அனுமதிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்துகிறது.
ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்