அங்குசம் பார்வையில் ‘3 பி.எச்.கே.’
தயாரிப்பு : ‘சாந்தி டாக்கீஸ்’ அருண் விஷ்வா. டைரக்ஷன் :ஸ்ரீகணேஷ், ஆர்ட்டிஸ்ட் : சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா, யோகிபாபு, தலைவாசல் விஜய், ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன் & ஜிதின் ஸ்டானிஸ்லஸ், இசை : அம்ரித் ராம்நாத், பாடல்கள் ; விவேக், கார்த்திக் நேத்தா, பால்டப்பா, ஸ்ரீகணேஷ், எடிட்டிங் : கணேஷ் சிவா, ஆர்ட் டைரக்டர் : வினோத் ராஜ்குமார், காஸ்ட்யூம் டிசைனர்: அசோக்குமார்& கிருத்திகா, எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசர் : ஆர்.சிபி மாரப்பன், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
ஒரு வீடு தான் இப்படத்தின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறது. அந்த வீடு தான் சுபத்துடன் முடிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் குடும்பத் தலைவனான வாசுதேவனுக்கு [ சரத்குமார் ] மனைவி தேவயானி, ப்ளஸ் டூ படிக்கும் மகன் சித்தார்த், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் மீத்தா ரகுநாத். தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராக இருக்கும் எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது வாசுவின் கனவு, லட்சியம் எல்லாமே. இதற்காக மனைவி தேவயானியும் உழைத்து சிறுக சிறுக பணம் சேர்க்கிறார்கள். சொந்த வீடு அமையும் நேரத்தில் சரத்துக்கு ஹார்ட் அட்டாக், அதன் பின் பிள்ளைகளின் படிப்புச் செலவு என சேமிப்பு கரைந்து போக, ஒரு கட்டத்தில் ரொம்பவே மனம் உடைந்து போகிறார் சரத். மூன்று பெட்ரூம், ஹால், கிச்சன் கொண்ட வீடு அவர்களுக்கு சொந்தமாகியதா? என்பதை அருமையான குடும்பப் படமாக, நடுத்தர வர்க்கத்தின் பார்வையிலிருந்து மிக அருமையாக பதிவு செய்துள்ளார் டைரக்டர் ஸ்ரீகணேஷ்.
படத்தின் ஹீரோ சித்தார் ப்ளஸ் டூ மாணவனாக, கல்லூரி மாணவனாக, வேலைக்குச் செல்லும் இளைஞனாக மூன்று பருவங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டு சிறப்பாகவே நடித்திருக்கிறார். ப்ளஸ் டூவில் ஃபெயில், கல்லூர் செமஸ்டர் தேர்வில் ஃபெயில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஃபெயில், வேலைக்கான இண்டர்வியூவில் ஃபெயில் என வரிசையாக தோல்விகளால் துவண்டு குமுறி வெடித்து அழுது, அந்த தோல்விகளையெல்லாம் தகர்த்தெறிந்து, தங்கை மீத்தா ரகுராத்தின் நம்பிக்கை வார்த்தைகளால் புத்தெழுச்சியாகும் காட்சிகளில் சபாஷ் போட வைத்துவிட்டார் சித்தார்த்.
ஆனால் இவரைவிட நடிப்பில் பலபடிகள் மேலே சென்று ஜொலிக்கிறார் வாசுதேவன் என்ற சரத்குமார். ப்ளஸ் டூவில் சித்தார்த் ஃபெயிலானதும் ஆக்ரோஷம் காட்டுவதும், அதே சித்தார்த் செமஸ்டரில் ஃபெயிலாகி லேத் பட்டறை வேலைக்குச் செல்வதைத் தெரிந்து, “என்னோட தம்பி, தங்கச்சிகளுக்காக நான் பள்ளிக்கூடம் போக முடியாம, வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். இன்னைக்கு அவர்களெல்லாம் நல்லாயிருக்கிறார்கள். நான் தான் அப்படியே இருக்கேன். என்னை மாதிரி நீயும் ஆகிடாதே. வேலைக்குப் போனீன்னா அதுவே பழகிரும். படிப்பு மேல நாட்டம் வராது. அதனால் படிப்பா.. அப்பா நானிருக்கேன்” என ஆறுதல் சொல்லி அரவணைக்கும் சீனில் தான் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபித்துவிட்டார் சரத்குமார். இருபத்தைந்து ஆண்டுகளில் உடல் நடையில் ஏற்படும் மாற்றம், முகத்தில் சுருக்கம், நரைவிழுந்த தலை, தாடி என சரத்தே சகலமுமாக இருக்கிறார்.
இவரின் மனைவியாக தேவயானி அப்படி ஒரு பொருத்தம். கணவன் மகனை திட்டும் போது கண்கலங்கும் இடம், பிறகு ஆறுதல் சொல்லும் இடம், க்ளைமாக்ஸில் 3 பி.எச்.கே. வாங்கியதும் உற்சாகம், பூரிப்பு என தேவயானி நடிப்பில் அசத்திவிட்டார்.
இந்த தம்பதிகளின் மகளாக மீத்தா ரகுநாத். அந்தப் புள்ள முகத்துல அப்படி ஒரு லட்சணம் பொருந்திய அப்பாவியான தோற்றம். “அப்பா நாம நடுத்தர வர்க்கம் தான்கிறத நம்ம சேவிங்ஸை பார்த்து தெரிஞ்சுக்க மாட்டாங்க. நம்மளோட பாடிலாங்குவேஜைப் பார்த்தே கண்டு பிடிச்சிருவாங்கப்பா” என சரத்திடம் பேசும் சீனில் மீத்தா ரகுநாத் தெரியவில்லை. நடுத்தர வர்க்கத்தின் வலிமிகுந்த வேதனை தான் தெரிந்தது. சித்தார்த்தின் மனைவியாக வரும் சைத்ரா, ஏழ்மையின் சோகத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளார். வீடு காட்டும் புரோக்கராக யோகிபாபுவுக்கு இரண்டே சீன்கள் தான் என்றாலும் இரண்டுமே கலகலப்பு.
அம்ரித் ராம்நாத்தின் பாடல்களில் சுகமும் உண்டு, சோகமும் உண்டு, நம்பிக்கையும் உண்டு.
“வீடுங்கிறது கனவு இல்ல, மரியாதை”. “ஃபீயூச்சர்ல நல்லாருப்போம், ஃபியூச்சர்ல நல்லாருப்போம்னு முப்பது வருசமா சொல்றீங்க. ஆனா பிரசண்ட்ல நாம நல்லாயில்லப்பா”, சேமிப்புல வீடு வாங்குறது தான் நடுத்தர வர்க்கத்தின் பழக்கம்” என இயக்குனர் ஸ்ரீகணேஷின் வசனங்கள், நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் வார்த்தைகள்.
— மதுரை மாறன்