கேட்பாரற்று கிடந்த மூட்டையில் 32 கிலோ கஞ்சா !
கேட்பாரற்று கிடந்த மூட்டையில்
32 கிலோ கஞ்சா !
பேராவூரணி அருகே அலையாத்தி காட்டில் வியாழக்கிழமையன்று கேட்பாரற்று கிடந்த ஒரு சாக்கு மூட்டையில் இருந்த 32 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பேராவூரணி அருகே கொள்ளுக்காடு கிராம கடற்கரை முகத்துவாரத்திற்கு அருகே கடற்கரையிலிருந்து குமார் 100 மீட்டர் தொலைவில், சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சாக்கு மூட்டையை கைப்பற்றினர்.
மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 16 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 32 கிலோ எடையுள்ள அதன் மதிப்பு ரூ 1.5 லட்சம் எனக்கூறப்படுகிறது. இதுபற்றி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த கடலோர காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட 32 கிலோ கஞ்சாவை நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சாவை தஞ்சாவூர் கியூ பிரிவு போலீஸார் கைப்பற்றி, அது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
இந் நிலையில் அலையாத்தி காட்டுப்பகுதியில் தற்போது மேலும் 32 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.