விருதுநகரில் மது போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது
விருதுநகர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை மது போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முனியாண்டி கோயில் வழியாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து வயது( 51) ரோந்து சென்றபோது, அங்கு மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வந்தார். அப்போது மது போதையில் இருந்த அந்த கும்பல் காவலரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த காவலர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, விருதுநகர், கலைஞர் நகரைச் சேர்ந்த தனுஷ் குமார் (25) அய்யனார் நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ( 27 ), கனக முனிஸ்வரன் (24), விமலேஷ் குமார் ( 24 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது இந்த நிலையில் 4 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக குற்றவாளிகளை மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செய்தியாளர்கள் பார்த்து மிரட்டும் தோணியில் கைகளை உயர்த்தியும், நாட்டுக்காக போராடி வென்றது போல் மீசையை முறுக்கிக் கொண்டு சென்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ராஜபாளையம் பகுதியில் மது போதையில் 8 பேர் கொண்ட கும்பல் காவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், காவலர்கள் லத்தி மற்றும் துப்பாக்கியுடனும் ரோந்து வந்தாலும் மது போதையில் ரகளை செய்யும் மது பிரியர்களுக்கு போதை தலைக்கேறியதும் எதுவுமே கண்ணுக்கு தெரியாது என்பதுதான் நிதர்சனம்.
— மாரீஸ்வரன்.