‘ஷிவராஜ்குமார் கலக்கல் டான்ஸ்! – ’45’ டிரெய்லர் ரிலீஸ் நியூஸ்
’சூரஜ் புரொடக்ஷன்ஸ்’ ரமேஷ் ரெட்டி தயாரிக்கும் படம் ‘45’. கன்னடத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 2026 ஜனவரி.01-ஆம் தேதி ரிலீசாகிறது. இருபது ஆண்டுகளாக கன்னட சினிமாவில் இசையமைப்பாளராக இருக்கும் அர்ஜுன் ஜான்யா இப்படத்தின் மூலம் டைரக்டராகியுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் ஷிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல டைரக்டர் & ஹீரோ ராஜ் பி.ஷெட்டி ஆகிய மூவரும் இணைந்து இந்த ‘45’-ல் அதிரடி காட்டியுள்ளனர்.
இந்த டிச.25-ஆம் தேதி ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் பண்ணத்தான் ப்ளான் பண்ணினார் தயாரிப்பாளர். ஆனால் 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாவதாலும் அதே கன்னட சினிமாவின் கிச்சா சுதீப் நடித்த ‘மார்க்’ படம் ரிலீசாவதாலும் தமிழ்நாட்டில் மட்டும் 2026 ஜனவரி.01-ஆம் தேதி ரிலீஸ் பண்ணும்படி, தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ள ஏஜிஎஸ் கேட்டுக் கொண்டதால் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி இந்த முடிவை எடுத்துள்ளார்.
எனவே ‘45’-ன் தமிழ் டிரெய்லர் ரிலீஸ் விழா சென்னையில் டிச.21-ஆம் தேதி மதியம் நடந்தது. இதில் படத்தின் ஹீரோக்களான ஷிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி, டைரக்டர் அர்ஜுன் ஜான்யா, தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி இவர்களுடன் நம்ம ஊர் விஜய் ஆண்டனியும் வில்லன் நடிகர் வின்செண்ட் அசோகனும் கலந்து கொண்டனர்.
“இந்தப் படம் மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் வந்துள்ளது. இந்தப் படத்தைப் பற்றி நான் பேசுவதைவிட படத்தின் ஹீரோக்களும் டைரக்டரும் பேசினால் தான் நன்றாக இருக்கும். எங்களை வாழ்த்த வந்திருக்கும் விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி” என தமிழிலேயே பேசி னார் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி.
“கன்னட சினிமாவின் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் எளிமையாக, இனிமையாக பழகும் பண்புள்ளவர் ஷிவராஜ்குமார். சமீபத்தில் கூட புற்று நோய் அவரைத் தாக்கிய போதும் மன உறுதியுடன் அதிலிருந்து மீண்டு வந்து இப்போது உற்சாகமாக இருப்பது நமக்கெல்லாம் சந்தோஷம். உபேந்திராவுடன் ஒரு கன்னடப் படத்தில் வேலை பார்த்துள்ளேன். இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா டைரக்டராக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி”. என்றார் விஜய் ஆண்டனி.
அர்ஜுன் ஜான்யா பேசும் போது,
“ஷிவாண்ணாவால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னதால் என்னை நம்பி இந்தப் படத்தை தயாரித்தார் ரமேஷ் ரெட்டி சார். ஷிவாண்ணா போல உபேந்திரா சாரும் ராஜ் பி.ஷெட்டி சாரும் என் கதையை நம்பி நடிக்க வந்ததற்கு நன்றி”.
“நானும் ஷிவராஜ்குமாரும் சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். அவருக்காகவே இந்த விழாவுக்கு வந்தேன். எனது அப்பா இறந்த போது அவர் மிகப்பெரிய ஹீரோ. ஆனால் எனக்காக ஓடோடி வந்தார். ஒரு நண்பனை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஷிவராஜ்குமார் சிறந்த உதாரணம்” என்றார் வின்செண்ட் அசோகன்.
தமிழ் மக்களின் சினிமா ரசனை குறித்து சிலாகித்துப் பேசினார்கள் உபேந்திராவும் ராஜ் ஷெட்டியும்.
கடைசியாகப் பேசிய ஷிவராஜ்குமார்,
“எனக்கு விஜய் ஆண்டனியை ரொம்பவும் பிடிக்கும். சினிமாவில் எல்லா வேலைகளையும் பார்க்கும் திறமை உள்ளவர். அவரின் ‘பிச்சைக்காரன்’ படத்தின் கன்னட ரீமேக்கில் நான் நடிக்க வேண்டியது. சில காரணங்களால் அது முடியாமல் போனது. இந்தப் படத்தின் கதையை அர்ஜுன் ஜான்யா என்னிடம் சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். விரைவில் நடிகராகிவிடுவார். எனக்கு பெரிய பிரேக் தந்தவர் உபேந்திரா தான். சிறந்த இயக்குனர், எழுத்தாளர் ராஜ் பி.ஷெட்டி, இந்த மூன்று பேர் கூட்டணி இந்த ‘45’-ல் கலக்கியிருக்கோம். நாங்கள் பெரிதும் நன்றி சொல்ல வேண்டியது தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டிக்குத் தான். தமிழ் ரசிகர்களுக்கு நன்றி” என ஷிவராஜ்குமாரும் தமிழில் பேசி அசத்தினார்.
அனைவரும் பேசி முடித்து நிகழ்ச்சி முடியும் நேரம் ஷிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி ஆகிய மூவரும் இணைந்து படத்தில் வரும் குத்தாட்டப் பாட்டுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடி கலகலப்பாக்கினார்கள்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.