அங்குசம் பார்வையில் ’7 / ஜி’ திரைபட விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ’7 / ஜி’ திரைபட விமர்சனம் ! – தயாரிப்பு & டைரக்ஷன்: ’ட்ரீம் ஹவுஸ்’ ஹாருண். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்பிரமணிய சிவா, கல்கி ராஜா. ஒளிப்பதிவு: கண்ணா, இசை: சித்தார்த் விபின், ஸ்டண்ட் ; ஃபயர் கார்த்திக், மேக்கப்; பி.மாரியப்பன், புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவ் ; கே.எஸ்.கே.செல்வா, பி.ஆர்.ஓ.: சதிஷ் [ எய்ம் ]
பத்துமாடிகள் கொண்ட பிளாட்டில் கதவு எண் 7/ஜி பிளாட்டை வாங்கும் ஸ்மிருதி வெங்கட், அவரது கணவர், ஆண் குழந்தை ஆகியோர் குடியேறுகின்றனர். புதுவீடு வாங்கியதற்காக ஆபீஸ் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கிறார் ஸ்மிருதியின் கணவர். ‘ட்ரீட் பார்ட்டி’யெல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்பிவிடுகிறார்கள். அதன் பின் மறுநாளிலிருந்து அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் ஸ்மிருதி. ஒரு கட்டத்தில் அந்த சக்தி ஸ்மிருதியைத் துரத்தித் துரத்தி பயமுறுத்துகிறது.
பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்பிரமணிய சிவாவும் அவரது மனைவியும் ஸ்மிருதிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனாலும் அந்த அமானுஷ்ய சக்தியின் ஆவேசம் அடங்கியபாடில்லை, வீட்டைவிட்டு வெளியேறவும் மறுக்கிறது. அமானுஷ்யத்திற்கு ஏன் இந்த பிடிவாதம்? அந்த சக்தி யார்? அது துஷ்ட சக்தியா? நல்ல சக்தியா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த 7/ஜி.
அந்த வீட்டில் பேயாக உலவி பயமுறுத்தி, பின் ஸ்மிருதி வெங்கட்டிடம் நட்பு பாராட்டும் பேயாக சோனியா அகர்வால். அந்த பேயே ஹாயாக தனது ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லி ரசிகர்களை டச் பண்ணுகிறது. ஸ்மிருதியும் அந்த பேயைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னை நன்றாக வெளிப்படுத்திவிடுவார் ஸ்மிருதி வெங்கட். அது போன்ற வாய்ப்பு தான் இந்த 7/ஜி.
சில காட்சிகளில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். பல காட்சிகளில் டைட் ஜீன்ஸ் & டாப், செம டைட்டான டிராக் பேண்ட், பாத்ரூம் காஸ்ட்யூம் என கிளாமரிலும் குறைவைக்கவிலை ஸ்மிருதி. பேயாக வரும் சோனியா, எப்ப பார்த்தாலும் பான்பராக் போட்ட மாதிரியே டயலாக் பேசுகிறார். இடைவேளைக்குப் பிறகு ”ஏதோ இருக்கு” என்ற எதிர்பார்ப்பிலேயே நம்மை உட்கார வைத்துவிடுவதால், இடைவேளை வரை படம் ஏனோதானோன்னு தான் இருக்கு. ஆனாலும்…..
மல்டி ஸ்டார்கள், பல கோடி பட்ஜெட்டில் பேய்ப் படம் எடுத்துவிட்டு நாய் படாதபாடுபடுவதைவிட, ஒரே ஒரு பிளாட்டில், சிம்பிளான பட்ஜெட்டில், சின்னதா ஒரு ஸ்டோரி லைனை வைத்து இந்த 7/ஜி யை எடுத்த வகையில் டைரக்டர் & தயாரிப்பாளர் ஹாருணைப் பாராட்டலாம்.
–மதுரை மாறன்