பிரியாணி மட்டுமல்ல … இனி பசுமையான மரக்கன்றுகளும் … Zomato ஜாலம் !
இதுவரை, சுடச்சுட உணவுப்பொருட்களை மட்டுமே டெலிவரி செய்துவந்த Zomato இனி, உங்கள் வயல்களுக்கே நேரடியாக வந்து, பசுமையான மரக்கன்றுகளையும் டெலிவரி செய்யப்போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம். Zomato Greening India என்ற திட்டத்தின் கீழ், மா, கொய்யா, தென்னை, தேக்கு, மகோகனி மற்றும் பல உயர்தரப் பழ மற்றும் மர வகைகளை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கப்போகிறது Zomato. அதுமட்டுமா, அறிவியல் பூர்வமான குழி தயாரிப்பு, அறிவியல் பூர்வமான நடவு நுட்பங்கள், திறமையான நீர்ப்பாசன அமைப்புகள், மற்றும் முதல் நாளிலிருந்தே வலுவான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக உரமிடுதல் மற்றும் மண் சுகாதார மேலாண்மையில் நேரடிப் பயிற்சி ஆகியவற்றையும் சேர்த்தே வழங்கப்போகிறது.
குறுக்கும் நெடுக்குமாக நாளொன்றுக்கு கோடிக்கணக்கான Zomato உணவு டெலிவரிக்கான பயணங்களால், பெட்ரோல் பயன்பாடு மற்றும் வாகன இயக்கத்தின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை ஈடுசெய்யும் நோக்கில், Zomato Greening India திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
Zomato முன்னெடுக்கும் வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், விவசாயிகள் தங்கள் நிலங்களைச் செழிப்பான, வருமானம் ஈட்டும் சூழல் அமைப்புகளாக மாற்றுவதற்கும் உதவி புரிகிறது.
இது ஒரு மரக்கன்று நடும் திட்டத்தை விட மேலானது. இது ஒரு 40 ஆண்டு கால முதலீடு. செறிவூட்டப்பட்ட மண் வளம், குறைக்கப்பட்ட மண் அரிப்பு, மீண்டும் நிரப்பப்பட்ட நிலத்தடி நீர். நடப்படும் ஒவ்வொரு மரமும் நிலையான விவசாயத்தை நோக்கிய ஒரு படியாகவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு கேடயமாகவும் அமைகிறது. கூடவே, விவசாயிகளுக்கான நிலையான வருமானமாகவும் மாறுகிறது.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழக அரசின் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதை பெற்ற சேவை கோவிந்தராஜ் தலைமையில் இயங்கிவரும் SEVAI நிறுவனம் Zomato உடன் கைகோர்த்து ஓசையின்றி இப்பசுமை சாதனையை சாத்தியமாக்கியிருக்கிறது. ஏற்கெனவே, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான மரங்களை வெற்றிகரமாக நட்டு சாதனை புரிந்திருக்கிறது.
உங்களிடம் தெளிவான உரிமைப் பத்திரம் மற்றும் ஆண்டு முழுவதும் நீர் வசதியுடன் கூடிய நிலம் இருந்து, இந்த மரங்களைக் குறைந்தது 40 ஆண்டுகளுக்குப் பேணி வளர்ப்பதாக உறுதியளிக்க முடிந்தால், இந்த பசுமைப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நீங்களும் இணையலாம் என அழைக்கிறது SEVAI நிறுவனம்.
கூடுதல் விவரங்களுக்கு :
சேவை அலுவலகம், கலையரங்கம் வளாகம், மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி – 620001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், உங்கள் வட்டாரத்தில் உள்ள களப்பணியாளர்களை 94431 56731 என்ற எண்ணில் வாட்சப்பில் தொடர்புகொள்ளலாம்.
காடுகளையும், வருமானத்தையும், நம்பிக்கையையும் நாம் ஒன்றிணைந்து வளர்ப்போம்.
– கிருஷ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.