சென்ற தொடரில் …
இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் 6. அவை. 1. இந்திய தேசிய காங்கிரஸ். 2. பகுஜன் சமாஜ் கட்சி. 3. பாரதீய ஜனதா கட்சி, 4. ஆம் ஆத்மி கட்சி, 5. தேசிய மக்கள் கட்சி. 6. இந்திய கம்யூனிஸ கட்சி (மார்க்ஸிஸ்ட்) குறித்து பார்த்தோம்.
ஒரு அரசியல் கட்சியானது குறைந்தபட்சம் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாகக்கூட இல்லாமல் பயணிக்கும் அரசியல் பாதையானது மிகவும் கடினமான பாதையாக இருக்கும். குறிப்பாக கூட்டணிக்காக தன்னை தியாகம் செய்ய வேண்டிய சூழலே இருக்கும். சொந்த சின்னம் இருக்காது. பெரும்பாலும் நமது கடின உழைப்பை நாமே அறுவடை செய்து பலன் பெறும் சூழல் இருக்காது. அதிகபட்சம் வக்பு வாரிய தலைவர் பதவி மட்டுமே கிட்டும். இராஜ்ய சபா எம்பிக்கு வாய்ப்பே இல்லை. இன்னும் பல வாய்ப்பே இல்லைகள். ஆகவே முதலில் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறுவதை நோக்கி பயணிக்கவேண்டும். அதற்கு என்ன வழி?
இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மாநில அங்கீகாரம் பெறுவதற்கு சில நிபந்தனைகளை வகுத்துள்ளது. அவையாவன (2025 வழிகாட்டலின் படி)
1. மாநிலம் தழுவிய சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 6% வாக்குகளும் 2 சட்டசபை உறுப்பினர்களும் வேண்டும்.
2. மாநிலம் தழுவிய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 6% வாக்குகளும் 1 நாடாளுமன்ற உறுப்பினரும் வேண்டும்.
3. தமிழ்நாட்டைப் பொறுத்து மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர்களில்,3%, அதாவது 7 உறுப்பினர்கள் இருந்தால், பதிவான வாக்கு சதவீதம் 6% த்திற்கும் குறைவாக இருந்தாலும் மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைக்கும்.
4. ஒவ்வொரு 25வது நாடாளுமன்ற தொகுதியிலும் ஒருவர் என்ற விதியின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பொறுத்து 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் பதிவான வாக்கு சதவீதம் 6க்கும் குறைவாக இருக்கும் பட்சத்திலும் மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைக்கும்.
5. மாநிலம் தழுவிய சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு உறுப்பினர் கூட வெற்றி பெறாவிட்டாலும் பதிவான வாக்குசதவீதத்தில் 8% பெறும் பட்சத்திலும் மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைக்கும்.
சரி மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறுவதின் மூலம் தேர்தல் ஆணையம் தரும் சலுகைகள் என்னென்ன?
1. சொந்தமாக சின்னம் கிடைக்கும். உதாரணமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு “ஏணி” சின்னம் உள்ளது போல.
2. தேர்தல் நேரங்களில் தூர்தர்சனிலும், அகில இந்திய வானொலியிலும் பிரச்சாரம் செய்யும் உரிமை கிடைக்கும்.
3. புகழ்பெற்ற பிரச்சாரகர்களை (Star Campaigners) பயன்படுத்தும் வாய்ப்பு. அதிகபட்சம் 40, இதன் அடிப்டையிலேயே பிஜேபியானது நடிகர்கள், கிரிக்கெட் பிளேயர்களை பயன்படுத்துகிறது.
4. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை நேரடியாக அணுகும் முறை (Access to Electrol Roll).
5. கட்சியின் பெயரையோ அதையொட்டிய பெயரையோ வேறு யாரும் பதிவு செய்ய முடியாத உரிமை. உதாரணமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இல்லாததால் அதன் பெயரையொட்டிய அகில இந்திய முஸ்லிம் லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி என பல முஸ்லிம் லீக்குகள் தமிழ்நாட்டில் முஸ்லிம் வாக்காளர்களை குழப்புகின்றன. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆனது தமிழ்நாட்டில் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறும் பட்சத்தில் இது தடுக்கப்படும்.
6. தேர்தல் ஆணைய கருத்துகேட்பு கூட்டங்களில் பங்கேற்று தங்கள் கருத்துக்களையோ, எதிர்ப்புகளையோ பதிவு செய்யும் உரிமை.
7. கட்சியின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்துவதில் நிறைய சலுகைகள் தரப்படும். உதாரணமாக கட்சி நிதி பெறுதல், வரிச் சலுகைகள், வரி கட்டுவதில் விலக்கு, தேர்தலில் செலவு செய்வதில் சலுகைகள் உட்பட நிதி ஆதாரங்கள் மற்றும்,நிதி தொடர்பான பல சலுகைகள் கிடைக்கும்.
தொடரும் …
– H.உபைதுல்லாஹ்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.